தூத்துக்குடி சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதுடன், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனால் சாத்தான் குளம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இதுகுறித்து விசாரணை செய்து சாட்சியங்கள் மற்றும் பெண் காவலரின் சாட்சி உள்ளிட்டவற்றை நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்.

இதனிடையே அவரை தரக்குறைவாகவும் காவல்துறையினர் பேசியிருந்தது சர்ச்சைக்குள்ளாகியது.

அதன் பின்னர் ஐஜி சங்கரின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்து தடயங்களையும் சேகரித்ததுடன், இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

அதன்படி உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி மற்றும் கொலை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் குற்றவாளி ரகு கணேஷை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

கொம்பன் என்று அழைக்கப்படும் ரகு கணேஷின் மீது ஏற்கனவே மக்கள் பல புகார்களை அடுக்கிவந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரகு கணேஷ், பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆத்தூரை அடுத்த ஆவரங்காட்டில் உள்ள வீட்டில் இருந்து தலைமறைவானதாகக் கூறப்பட்டது.

எனினும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 2 பேரும் சிபிசிஐடியால் விசாரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பாலகிருஷ்ணனை சிபிசிஐடியினர் கைது செய்து, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து 3 காவலர்களையும் விசாரித்தனர்.

சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரடி மேற்பார்வையில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் டிஎஸ்பி அணில்குமார் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய காவலர்களின் வீடு உள்ளிட்ட பல இடங்களிலும் விசாரித்து, பின்னர் கோவில்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த சாத்தான் குளம் காவல் ஆய்வாளரும், குற்றம் சாட்டப்பட்டவருமான ஸ்ரீதர், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சோதனை சாவடியில் மடக்கி பிடிக்கப்பட்டு விசாரணைக்காக தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் ரேவதி அரசு தரப்பு சாட்சியாக மாறியது போல் இச்சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான் குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரை அப்ரூவராக மாறியதாக சிபிசிஐடி போலீஸார் பரபரப்பு தகவலை வெளியிட்டனர்.

அவரும் ஜெயராஜ், பென்னிக்ஸை தாக்கியவர்களுள் ஒருவர் என்று குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் அரசு தரப்புக்கு சாட்சியமாக உள்ளதால், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ள நிலையில் தந்தை மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடியின் இந்த முதற்கட்ட அதிரடி கைது நடவடிக்கை, பெனிக்ஸின் சகோதரி உட்பட அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply