விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு அதி நவீன படகுகள் வழங்கப்பட்டதாக  பசில் ராஜபக் ஷ என்னிடம் கூறினார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று வத்தளை பலகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் பயணம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதிவேக வீதியில் தவறான பக்கம் பயணிக்கும் வாகனத்தை போன்று அவர் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

அவருக்கு அதில் குதுகலமாக இருக்கலாம் ஆனால் நாட்டிற்கும் மக்களுக்கும் இந்த பயணம் ஏற்புடையதல்ல. அவர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் ராஜபக் ஷக்களுக்கு சகல சலுகைகளும் வழங்கப்படுகின்றது.

ராஜபக் ஷவினரின் நோக்கம் ஒன்றதான். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சகல இடங்களிலும் அவர்களின் ஆதிக்கத்தை பெற்றுக்கொள்வது.

ஆனால் இது  ஜனநாயக அரசியலில் நல்லதொரு செயற்பாடாக நாம் கருதவில்லை. கருணா அம்மான் கூறிய விடயங்கள் நாட்டிற்கு பாதிப்பில்லையாம், கிரிக்கெட் ஊழல் நாட்டிற்கு அவப்பெயர் இல்லையாம் ஆனால் எதிர்க்கட்சியினர் செய்யும் ஜனநாயக அரசியலை நாட்டிற்கு எதிரான சூழ்ச்சி என ராஜபக் ஷவினர் கூறி பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இவர்களின் தேசத்துரோக செயற்பாடுகள் என்னவென்பதை நான் அங்கு அறிவேன்.

பசில் ராஜபக் ஷவும் நானும் ஒரு வகுப்பு நண்பர்கள், கடந்த யுத்த கால சூழலில் நாமும் அவரும் பல விடயங்களை பேசுவோம்.

நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பசில் ராஜபக் ஷவுடன் பேசுவதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறுத்த பிரபாகரனிடம் பேசிவிட்டோம், அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என என்னிடம் பசில் கூறினார்.

பசில் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி, தேர்தலில் தமிழர்கள் வாக்கை நிறுத்துவதற்கு பிரபாகரம் இணங்கியதற்கு பிரபாகருக்கும் கடல் புலிகளுக்கும் அதி நவீன படகுகளை பெற்றுக்கொடுக்க தாம் இணக்கம் தெரிவித்ததாக பசில் என்னிடம் கூறினார்.

அதுமட்டுமல்ல இந்த பேச்சுவார்த்தைகளில் அமரர் தொண்டமானும் இருந்ததாக என்னிடம் கூறினார். நாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து எமது தமிழர்களை மீட்க வேண்டும் என்பதற்காக  போராடிகொண்டிருந்த வேளையில் ராஜபம் ஷக்கள் புலிகளுடன் ஒப்பந்தங்களை செய்தி கொண்டிருந்தனர்.

பிரபாகரனை துரோகி எனக் கூற அச்சத்துடன் இருந்தனர், பிரபாகரனை மதிப்புக்குரிய பிரபாகரன் என்றே இவர்கள் கூறினார்கள்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2005 ஆம் ஆண்டு ஆற்றிய உரையை எடுத்துப்பாருங்கள். அதில் அவர் அவ்வாறே கூறினார்.
இன்று யுத்தம் முடிந்துவிட்டதுடன், பிரபாகரன் இறந்த பின்னர் வீரர்கள் போன்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்த அழிவிற்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் ஒரு விதத்தில் ஆட்சியாளகள் காரணம் என்பதே உண்மையாகும்.

பல பொதுமக்கள் இறந்தமைக்கும், அழிவுகளை சந்திக்கவும் ஆட்சியாளர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த தேர்தலில் மீண்டும் ராஜபக் ஷக்கள் வெற்றின்பெற்றால் மீண்டும் வெள்ளைவேன் கடத்தல்,கப்பம் பெறல், கொலைகள், கொள்ளைகள் உருவாகும். எவரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலைமை உருவாகும். ஆகவே இன்னொரு நாசகார ஆட்சிக்கு மக்கள் இடமளித்துவிட வேண்டாம் என அவர் கூறினார்.

Share.
Leave A Reply