வடக்கில் ஆகக் கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் – என்று கூட்டமைப்பின் பேச்சாரும், அதன் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
அதே வேளை பிறிதொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரனை துரத்த வேண்டுமென்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார்.
விக்னேஸ்வரனை அரசியலிலிருந்து துரத்த வேண்டுமென்று முன்னரும் ஒருமுறை சுமந்திரன் கூறியிருந்தார்.
கூட்டமைப்பு வடக்கில், இம்முறையும் அதிக ஆசனங்களை வெற்றிகொள்ளுமென்று சுமந்திரன் உண்மையிலேயே நம்பினால், பிறகெதற்காக விக்னேஸ்வரன் பற்றி கவலைப்பட வேண்டும்? ஒரு வேளை விக்னேஸ்வரன் வெற்றிபெற்றால் அது தனது அரசியல் நிகழ்சிநிரலுக்கு முட்டுக்கட்டையாக இருக்குமென்று சுமந்திரன் கருதுகின்றாரா? அல்லது விக்னேஸ்வரனது வெற்றி உறுதியாகிவிட்டது எனவே, அதனை எவ்வகையிலாவது தடுத்துநிறுத்த வேண்டுமென்று கருதுகின்றாரா?
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள்தான் வெற்றிபெறுவோமென்று கூறுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
அந்த வகையில் வடக்கில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வெற்றிக்கான பலவழிகளிலும் முயன்று வருகின்றன.
சுமந்திரன் தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகின்றார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் இலகுவாக வெற்றிபெற்றிருந்தார்.
ஆனால் இம்முறை அவரது வெற்றி இலகுவாக இருக்காதென்று கூறப்படுகின்றது. உண்மையில் இதற்கு விக்கினேஸ்வரன் காரணமல்ல மாறாக, இலங்கை தமிரசு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பதவிப் போட்டிகளும் அதிகார மோகமுமே பிரதான காரணங்களாகும்.
அரசியலில் நண்பர்கள் எதிரிகளாவதும், எதிரிகள் நண்பர்களாவதும் சாதாரணமான விடயம். ஆனால் ஒரு கட்சிக்குள்ளேயே அவ்வாறான நிலைமை ஏற்படுவது அசாதாரணமானது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழரசு கட்சிக்குள் உள்மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன.
ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்காக தனியான வியூகங்களை வகுத்து செயற்பட்டுவருகின்றனர். சதிகளைச் செய்கின்றனர்.
ஆரம்பத்தில் சுமந்திரனோடு இணைந்து செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சிலரோ, தற்போது சுமந்திரனுக்கு எதிராக நிற்கின்றனர்.
சுமந்திரனோடு இணைந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபவதை பலரும் தவிர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் சுமந்திரனோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்னோல்ட் கூட, இன்று சுமந்திரனோடு இல்லை.
இதனை எதிர்கொள்ளுவதற்கு சுமந்திரன் வகுத்திருக்கும் புதிய வியூகம்தான் சிறிரன் உடன்பாடு. சிறிதரன் – சுமந்திரன் கூட்டு சுவார்ச்சியமான ஒன்று.
சிறிதரன் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தன்னை காண்பித்துக் கொள்பவர் ஆனால் சுமந்திரனோ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் ஒருவர்.
இவ்வாறான இருவரும் இணைந்து செயற்படுவதானது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான். மேலும் சிறிதரன் மட்டுமல்ல பலரும் தேர்தல் காலத்தில் பேசும் பிரபாகரன் விசுவாசம் போலியானது என்பதும் தற்போது தெட்டத்தெளிவாகிவிட்டது.
வடக்குத் தேர்தல் களத்தை பொறுத்தவரையில் தமிழரசு கட்சியில் – கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும், செல்வாக்கு மிக்க நபர்கள் அனைவரும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்தான் போட்டியிடுகின்றனர்.
யாழ் தேர்தல் மாவட்டம் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரியது. கடந்த தேர்தலின்போது, கூட்டமைப்பு இதில் 5 ஆசனங்களை வெற்றிகொண்டது.
இதில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், எம்.ஏ,சுமந்திரன், சிறிதரன் மற்றும் வர்த்தகர் சரவணபவன் ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர்.
இம்முறை இதில் எவரெல்லாம் வெற்றியை சுவைப்பர் என்பதை இப்போதைக்கு கூற முடியாவிட்டாலும் கூட. நிச்சயமாக அனைவரும் வெற்றியை சுவைக்கப் போவதில்லை என்றே தெரிகின்றது.
ஏனெனில் கடந்த தேர்தலின்போது காணப்பட்ட அரசியல் சூழல் இப்போது இல்லை. 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
கூட்டமைப்பின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் கூட, சர்வதேசத் தலையீட்டினால், ஏதும் அதிசயங்கள் நடந்துவிடலாமென்று நம்பினர்.
இதன் காரணமாகவே கண்ணை மூடிக்கொண்டு கூட்டமைப்பை ஆதரித்தனர். ஆனால் இன்றைய நிலைமை அப்படியில்லை. மக்கள் அரசியல் தொடர்பில் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.
ஏனெனில் கூட்டமைப்பு கூறிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. இதற்கிடையில் கொரோனா விவகாரம், சூழலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.
அத்தோடு, கட்சிகளுக்கிடையிலான போட்டியின் தன்மையும் முன்னரைப் போல் இல்லை. தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று கட்சிகள் வடக்கில் போட்டியிடுகின்றன. இதன் காரணமாக, இம்முறை மக்கள் மத்தியில் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன.
2018இல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நோக்கினால், இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் மாற்றுத் தரப்பினர் ஒப்பீட்டடிப்படையில் பலமாகவே இருக்கின்றனர்.
அவர்கள் தங்களுக்குள் முட்டிமோதாமல், பிரதான எதிரியை இலக்கு வைத்து செயற்படுவது முக்கியமானது.
ஒரு வேளை அவர்கள் தங்களுக்குள் அடிபட்டால், அதனை சுமந்திரன் போன்றவர்களே அறுவடை செய்வர்.
அதே வேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஒரு சவாலாகும்.
கிளிநொச்சியை தளமாகக் கொண்டிருக்கும் மேற்படி கட்சி, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது எந்தவொரு பின்னணியும் இல்லாமல் தனித்து கணிசமான வாக்குபலத்தை நிரூபித்திருந்தது. இதன் மூலம் ஒரு விடயம் வெள்ளிடைமலை.
அதாவது, கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி முன்னரைப் போன்று மிகவும் இலகுவானதாக இருக்கப் போவதில்லை.
இவ்வாறான நிலைமைதான் மறுபுறமாக தமிழரசு கட்சிக்குள் (கூட்டமைப்புக்குள்) பதவிப் போட்டியையும், உள்ளக சதிகளையும் தோற்றுவித்திருக்கின்றது.
கிடைக்கும் தகவல்களின்படி இம்முறை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோனாதியின் வெற்றி ஊசலாடுவதாகக் கூறப்படுகின்றது.
ஏனெனில் கடந்த முறை வெற்றி பெற்ற ஜவரில் யாரோ ஒரு சிலர் வெளியேறலாம். ஏற்கனவே பழையவர்கள் தேர்தலிலிருந்து ஓதுங்க வேண்டுமென்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். அவர் பழையவர்கள் என்று குறிப்பிட்டது மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் மற்றும் சரவணபவன் போன்றவர்களைத்தான்.
வேட்பாளர் நியமனத்தின் போது, சுமந்திரன் சில புதியவர்களை கட்சிக்குள் உள்நுழைக்க முற்பட்டார் எனினும் அவர் எதிர்பார்த்தது போன்று, அது இலகுவானதாக இருக்கவில்லை.
ஓதுங்க மறுக்கும் பழையவர்களை, புதியவர்களைக்கொண்டு வெளியேற்றலாமென்பதே சுமந்திரன் வகுத்த திட்டம். ஆனாலும் ஒரு கட்டத்தில் மாவை விழித்துக் கொண்டார்.
அப்போது விழித்துக் கொண்ட மாவை இன்னும் தூங்கவில்லை. ஆனாலும் மாவை விழித்துக் கொள்ள வேண்டிய காலத்திலெல்லாம், தூங்கிக் கொண்டிருந்ததால் இப்போது நிலைமை கைமீறிவிட்டதாகவே தெரிகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் யாழ் தேர்தல் களம் மிகவும் சூடாக இருக்கின்றது. கிடைக்கும் தகவல்களின்படி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியும் சில ஆசனங்களை வெற்றிகொண்டால், கூட்டமைப்பில் சிலர் தோல்வியடைவது நிச்சயம்.
2015 தேர்தலின் போது, ஜக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் ஒப்பீட்டடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்றபோதிலும்கூட, அவரால் ஒரு ஆசனத்தை வெற்றிகொள்ள முடிந்தது.
அவ்வாறானதொரு நிலைமை இந்தத் தேர்தலின்போதும் ஏற்படாதென்று கூறிவிட முடியாது. ஒரு வேளை சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் அவ்வாறானதொரு வெற்றியை பெறக் கூடும். நிலைமையை எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும், தமிழரசு கட்சி நெருக்கடிக்குள்தான் இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.
மாவை சேனாதிராஜாவின் தலைமையை கைப்பற்றுவதற்கான திட்டங்களும் இப்போதே தீட்டப்படுவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
அவ்வாறானதொரு திட்டத்தின் ஒரு அங்கம்தான் சிறிதரன் – சுமந்திரன் கூட்டு என்றும் கூறப்படுகின்றது.
இந்தத் தேர்தலில் மாவை பின்னடைவைச் சந்தித்தால், அதன் பின்னர் தமிழரசு கட்சியென்பது சுமந்திரனின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாது.
தமிழசு கட்சி எவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதோ அவரே கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பார்.
மாவை தனது வெற்றிக்கான வியூகங்களை வகுப்பதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை. விமர்சனங்கள் இருந்தாலும் கூட, மாவை சோனாதிராஜா, தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றின் வழியாக அரசியலுக்கு வந்த ஒருவர் என்பதை எவருமே மறுக்க முடியாது.