இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில், அரசாங்க பாடசாலைகளை உடனடியாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் (ஜூலை 13) முதல் எதிர்வரும் 17ஆம் தேதி வரை அரசாங்க பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்தது.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் பயம் மற்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனியார் பாடசாலைகள்?
இந்த நிலையில், அனைத்து தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த குறித்த பாடசாலைகளின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் தினங்களில் நடத்தப்படவுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு, பாடசாலைகளில் அனுமதி வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் சில தினங்களுக்கான தேர்தல் பிரசார கூட்டத்தை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
கொரோனா பரவல்
இலங்கையில் மார்ச் மாதம் 11ஆம் தேதி முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.
சுமார் ஒரு மாத காலம் மூடப்பட்டிருந்த நாட்டின் செயற்பாடுகள் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி மீண்டும் முதல் படிப்படியாகத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இவ்வாறான நிலையில், நாட்டின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியிருந்த பின்னணியில், மீண்டும் சமூகத்திற்குள் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது இலங்கையில் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரித்துள்ளது.
விமான போக்குவரத்து
ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் சர்வதேச விமான நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், அந்த தீர்மானம் இன்று பிற்போடப்பட்டது.
நாட்டிலுள்ள நிலைமைக்கு மத்தியில் சர்வதேச விமான நிலையங்களை திறக்க முடியாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டிலுள்ள பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் சரியான முறையில் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.