ஊரடங்கை மீறி வெளியே வந்த குஜராத் அமைச்சரின் மகனை பெண் காவலர் ஒருவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அமைச்சரின் மகன்

குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.

அவர்களை சூரத் போலீஸ் நிலைய பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தினார்.

இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

நரேந்திர மோதியே வந்தாலும்…’

சுனிதா, “கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இந்த சமயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்,” என கூறி உள்ளார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

கைது

சமூக ஊடகங்களில் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.

இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்கிறது பிடிஐ செய்தி முகமை.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (சட்டத்தை மீறியது), இந்திய தண்டனை சட்டம் 269, 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை பரப்புவது )உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த வைரல் காணொளியை பார்க்க:


<>குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் மகனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த பெண் காவலர்.

 

Share.
Leave A Reply