அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை தாக்க வந்த நாயிடமிருந்து தனது உயிரை பணயம் வைத்து தங்கையை காப்பாற்றியுள்ளார்.

சிறுவனின் இச் செயல் குறித்து உலகளாவிய ரீதியில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிரிட்ஜர் தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்து, உடனடியாக முன்னால் பாய்ந்து தடுக்க முயன்றுள்ளார்.

இதன்போது நாயிற்கும் இவருக்கும் ஏற்பட்ட மோதலில், சிறுவனின்  முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தங்கையை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடி நாயிடமிருந்து காப்பாற்றியுள்ளார்.

இது குறித்த சிறுவனின் உறவினர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

“என் சகோதரரின் மகன் ஒரு நாயகன். தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான். அவனே முன்னால் வந்து நின்று தங்கையைப் பாதுகாக்க நாயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான்.

இதுபற்றிக் கேட்டபோது, ‘அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்று இருந்திருந்தால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன்’ என்று சொன்னான். நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான் என தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் பிரிட்ஜரின் முகம் படு மோசமாகக் காயமடைந்துள்ளது. சுமார் 90 தையல்கள் பிரிட்ஜரின் முகத்தில் போடப்பட்டுள்ளன. ஆனாலும், பிரிட்ஜர் நம்பிக்கையுடன் உள்ளாராம்.

பிரிட்ஜர் பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவை ஹொலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பகிர்ந்திருக்கும் அதேவேளை மார்க் ரஃபல்லோ மற்றும் ஆன் ஹாத்வே ஆகியோர், அவரது துணிச்சலை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Share.
Leave A Reply