சீனா மற்றும் இரான் இடையே விரைவில் போடப்படவுள்ள ஒரு ஒப்பந்தம் உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், சபஹார் ரயில் பாதை அமைக்க இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரான் ரத்து செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

சபஹார் ரயில் பாதை திட்டத்துக்கான நிதியை வழங்க இந்தியா தாமதப்படுத்துகிறது என இரான் கூறுகிறது.

சபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கனுக்கு பொருட்களைக் கொண்டு செல்ல ரயில் பாதை அமைப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இரான் இடையே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இப்போது இந்த திட்டத்தைத் தானாகவே முடிக்க இரான் திட்டமிட்டுள்ளது.

இரானும் சீனாவும் தயாரித்து வரும் இந்த வரைவு ஒப்பந்தத்தின்படி , அடுத்த 25 ஆண்டுகளுக்கு இரான் குறைந்த விலையில் சீனாவுக்குக் கச்சா எண்ணெய்யை வழங்கும்.

இதற்குப் பதிலாகச் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீடுகளை இரானில் சீனா செய்ய உள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் நிலையில், இரு நாடுகளும் அமைதியாக இந்த ஒப்பந்தத்தை தயார்ப்படுத்தி வருகின்றன.

இந்த ஒப்பந்தங்களால் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

இரு நாடுகளுக்கு இடையே எரிசக்தி, உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது என்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் இருக்கும் என்றும் இரானைச் சேர்ந்த டஸ்னிம் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து இரான் நாடாளுமன்றத்தில் இன்னும் அனுமதி வாங்கப்படவில்லை. அத்துடன் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால், 18 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு ஒப்பந்தம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது. இந்த ஆவணங்களில் ஜூன் 2020 எனத் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இதுவே ஒப்பந்தத்தின் ’’இறுதி வடிவம்’’ எனக் கூறப்படுகிறது.

’’இரண்டு பண்டைய ஆசியக் கலாச்சாரங்கள், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய கூட்டாளிகள், இதே கண்ணோட்டத்துடன் இணைந்து பரஸ்பர மேம்பாட்டிற்காக பணியாற்ற உள்ளன’’ என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 280 பில்லியன் டாலர்கள் முதலீடும், உற்பத்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பில் 120 பில்லியன் டாலர்கள் முதலீடும் சீனா செய்ய உள்ளது என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 5ஜி தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்க இரானுக்குச் சீனா உதவும். அத்துடன் வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், ரயில்வே மற்றும் டஜன் கணக்கான இரானில் திட்டங்களை மேம்படுத்தச் சீனா தனது பங்களிப்பைப் பெரிய அளவில் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளைப் பரஸ்பர ஒத்துழைப்பில் மேற்கொள்ளும் என்றும் ஆயுதங்கள் தயாரிப்பதிலும், உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக, அடுத்த 25 ஆண்டுகளுக்கு மிகக்குறைந்த விலையில், சீனாவுக்குக் கச்சா எண்ணெய்யை இரான் வழங்கும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் என்ன நன்மை?

இந்த ஒப்பந்தங்களால் சீனாவுக்கும் இரானுக்கும் பலவிதங்களில் நன்மை கிடைக்கும் என மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியத் தூதராக பணியாற்றியவரும், இந்த நாட்டு விவகாரங்களில் நிபுணருமான டல்மீஸ் அகமது கூறுகிறார்.

 

‘’சீனாவின் முக்கிய கூட்டாளியாக இரான் மாறும். இதை அமெரிக்கா,இஸ்ரேல், சௌதி போன்ற நாடுகள் எதிர்க்கும். இரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடைகள் நீர்த்துப்போகும்’’ என்கிறார் அகமது.

’’அமெரிக்காவின் தடையால், இரானில் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டிருந்தன. இப்போது சீனாவின் முதலீடுகளால் இரானில் தொழில்நுட்பங்களும் உள்கட்டமைப்புகளும் மேம்படும். தனது முக்கிய தேவையான கச்சா எண்ணெய்யைச் சீனா குறைந்த விலையில் பெறும். பாதுகாப்புத் துறையில் வலிமையாக உள்ள சீனா, இரானுக்குப் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கும்’’ என்கிறார் அவர்.

சீனாவின் கனவுத்திட்டமான பாட்டுப்பாதை திட்டத்துக்கும் இரான் பல வழிகளில் உதவும் என்கிறார் அகமது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இரான் மற்றும் சீனா இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் தடைகளால் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவுக்கு அதிகளவிலான எண்ணெய்யை இரான் ஏற்றுமதி செய்து வந்தது.

பாகிஸ்தானின் கயாடர் துறைமுகத்தில் முதலீடு செய்து சீனா மேம்படுத்திய நிலையில், இதற்குப் பதிலடியாக இரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா நினைத்தது. ஆனால், இப்போது இரானில் சீனா செய்யவுள்ள முதலீடுகள் இந்தியாவின் திட்டங்களுக்கு ஆபத்தாக அமையலாம்.

‘’கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் வலுவிழந்து உள்ளது. இந்தியா அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குக் கீழ் உள்ளது என அண்டை நாடுகள் கருதுகின்றன’’ என்கிறார் டல்மீஸ் அகமது.

இரானும் சீனாவும் அமெரிக்காவை எதிர்ப்பது புதிதல்ல. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக இந்த இரு நாடுகளும் ஏற்கனவே கூட்டணி சேர்ந்துள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது இந்த ஒப்பந்தங்கள், அந்த எதிர்ப்பை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.

’’உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைச் சீனா கொண்டுள்ளது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய சக்திகளில் ஒன்றாகு இரான் உள்ளது. இந்த இரண்டு சக்திகளும் சேர்ந்து ஆதிக்க சக்தியின் (அமெரிக்கா) அழுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என இரான் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

 

சீனாவும் இரானும் இணைவது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறும் என மூத்த பத்திரிக்கையாளரும் இரான் விவகாரங்கள் குறித்த நிபுணருமான ராகேஷ் பட் கூறுகிறார்.

‘’எண்ணெய் வளத்தில் உலகில் சௌதி அரேபியாவுக்கு அடுத்த இடத்தில் இரான் உள்ளது. இரான் உடன் இணைவதன் மூலம், சௌதியின் ஒற்றைத்தன்மையை உடைக்க சீனா நினைக்கும்’’ என்கிறார் ராகேஷ்.

‘’இரு நாடுகள் இடையிலான நட்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய அதிகாரத்தை உருவாக்கும். மத்திய கிழக்கில் இதுவரை அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யா ஓரளவுக்கு நுழைந்துள்ளது. தற்போது முதல்முறையாகச் சீனா தனது அதிகாரத்தைக் காட்ட நுழைந்துள்ளது’’’என்கிறார் அவர்.

‘’சீனாவுக்கும், இரானுக்கு எதிராக கடுமையான போக்கை அமெரிக்கா கொண்டுள்ளது. தற்போது இருநாடுகளும் ஒன்றிணைந்து அமெரிக்காவை எதிர்க்கும்’’ என்கிறார் மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியத் தூதராக பணியாற்றியவரும், இந்த நாட்டு விவகாரங்களில் நிபுணருமான டல்மீஸ் அகமது.

சீனா இரான் இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இரான் மீதான தங்களது கடுமையான போக்கை மாற்றிக்கொள்ளலாம் என நிபுணர்கள் நினைக்கின்றனர்.

Share.
Leave A Reply