மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு தம்பதியரை அடித்து அவ்விடத்திலிருந்து போலீசார் வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் அந்த தம்பதியர் விஷ பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

தற்போது இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மனைவியின் உடல்நிலை மிக அபாய கட்டத்தில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று இணையதளத்தில் வைரலானதையடுத்து, நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தம்பதியரை போலீசார் அடிக்கும்போது அவர்களின் 7 குழந்தைகளும் அழுவதையும், கதறுவதையும் இந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது.

ஆனால் இது குறித்து அந்த சமயத்தில் சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் இவர்களின் அழுகுரலை கண்டுகொள்ளவில்லை.. மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களை அடித்தனர்.

இந்த காணொளி வைரலானவுடன், புதன்கிழமை இரவில் குணா மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளரை நீக்கி மத்தியப் பிரதேச மாநில முதல்வரான சிவராஜ் சிங் செளகான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் எஸ். விஸ்வநாதன் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தருண் நாயக் ஆகியோரை நீக்கிய முதல்வர், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டார மாஜிஸ்திரேட் ஒருவர் தலைமையிலான குழு அங்கு அனுப்பப்பட்டுள்ளது

சர்ச்சைக்குள்ளான அந்த இடத்தில் ராஜ்குமார் அஹிர்வார் பயிரிட்டிருந்தார். ஜெசிபி இயந்திரங்களை பயன்படுத்தி அந்த நிலத்தில் பயிர்களை அகற்ற போலீசார் முயன்றனர்.

பாஜக அரசுக்கு எதிராக கடும் எதிர்வினைகள்

இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான எதிர்வினைகளை பல அரசியல் பிரமுகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரான கமல்நாத் இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், ”சிவ்ராஜ் செளகான் அரசு மாநிலத்தை எங்கு எடுத்துச் செல்கிறது? என்ன மாதிரியான காட்டாட்சி இது? குணா கண்டோன்மெண்ட் பகுதியில் போலீசால் ஒரு தலித் தம்பதி மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர்” என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.

”பாதிக்கப்பட்டவருடன் அந்த நிலம் தொடர்பாக ஏதாவது சர்ச்சை இருந்தால், அது குறித்து சட்டரீதியாக தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அந்த மனிதர், அவரது மனைவி மற்றும் அப்பாவி குழந்தைகள் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர்.

இது அவர்கள் ஏழை விவசாயிகள் மற்றும் தலித் என்பதாலா?” என்று அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

”இது போன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் இதனை பார்த்து கொண்டு காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்காது” என்று கமல்நாத் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்த காணொளியை ட்வீட் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ”இம்மாதிரியான எண்ணங்கள் மற்றும் அநீதிக்கு எதிராக நாங்கள் போராடுவோம்” என்று கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

”தலித்துகளின் நல்வாழ்வுக்கு, மேம்படுத்தலுக்கு தாங்கள் உதவுவதாக பாஜக கட்சியும், அதன் அரசுகளும் ஒருபுறம் பெருமையாக கூறி கொள்கின்றன.

 

மற்றொரு பக்கம், முன்பு காங்கிரஸ் அரசு செய்தது போல பாஜகவும் தலித்துகளை வெளியேற்றி வருகிறது.

அதனால் இவர்கள் இருவருக்கும் என்னதான் வித்தியாசம்? தலித்துகள் இது குறித்து சிந்திக்க வேண்டும்” என்று மாயாவதி கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை எழுந்தது ஏன்?

ஆதர்ஷ் பல்கலைக்கழகத்துக்கு சர்ச்சைக்குள்ளான நிலம் ஒதுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அந்த பகுதி கவுன்சிலர் நிலம் இது என்றும், அவர் பணம் பெற்றுக்கொண்டு ராஜ்குமார் அஹிர்வாருக்கு இந்த நிலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த வழங்கியதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விளைநிலத்தில் பயிர் விளைவிக்க 2 லட்சம் ரூபாய் பணத்தை ராஜ்குமார் அஹிர்வார் கடன் வாங்கி இருந்ததாகவும், அவரின் குடும்பம் இந்த நிலத்தை சார்ந்த வருமானத்தை நம்பி இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் மேலும் கூறினர்.

ராஜ்குமார் மற்றும் அவர் மனைவி, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திய பிறகு, போலீசார் அவர்களுக்கு உதவவில்லை. அவர்களுக்கு உதவி செய்ய அந்த இடத்துக்கு வந்த ராஜ்குமாரின் சகோதரரையும் போலீசார் அடித்துள்ளனர்.

ராஜ்குமார் மற்றும் அவர் மனைவி, மேலும் அந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற தாசில்தார் நிர்மல் ரத்தோர், ராஜ்குமார் அஹிர்வாரின் குடும்பத்தார் போலீசாருடன் கடும் வாக்குவாதம் மற்றும் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதனால் போலீசார் சற்று கடினமாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் நாள் முழுவதும் மிக அதிகமான முறைகள் இந்த தம்பதியர் தாக்கப்பட்ட காணொளி பகிரப்பட்டது. சிலர் முதல்வர் சிவ்ராஜ் செளகான் பதவி விலக வேண்டும் என்றும் கோரினர்.

விவசாயிகள் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்துவது இது முதல்முறையல்ல. இது போன்ற காணொளிகள் முன்பும் வெளிவந்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால், தற்போது இந்த காணொளி மிகவும் வைரலானதால், நடந்த சம்பவம் தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.

Share.
Leave A Reply