நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானோர் எண்ணிக்கை 2687 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2007 பேர் குணமடைந்துள்ளதோடு இன்று இனங்காணப்பட்ட 13 நோயாளர்கள் உள்ளடங்கலாக 669 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 08 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்தவர்களது உறவினர்கள் எனவும், 4 பேர் கட்டாரில் இருந்து நாடுதிரும்பியவர்கள் எனவும்  ஒருவர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பியவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் 168 பேர் வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் புதன்கிழமை வரை 2470 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 669 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 2,007 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளனர்

இராஜாங்கனை

இராஜாங்கனை பிரதேசத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 395 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 533 பேருக்கு இது வரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பெறுகின்றவர்கள் 444 பேருக்கும் , ஆலோசகர்கள் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் 64 பேருக்கும் , அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 25 பேருக்கும்  தொற்று ஏற்பட்டுள்ளமை இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெல்மடுல்லையில் 37 பேர் சுய தனிமைப்படுத்தலில்

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் வருகை தந்தமையால் அவருடன் தொடர்புகளைப் பேணிய 37 பேர் பெல்மடுல்ல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிலியந்தலையில் 113 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவையாற்றிய இராணுவ அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் , அவர் விடுமுறையில் வருகை தந்திருந்த பிலியந்தலை பகுதியில் வசிக்கும் 113 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply