தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதரில் மலம் கழித்த தலித் சிறுவனை, நில உரிமையாளர் சாதி பெயர் சொல்லி இழிவாகப் பேசியதோடு, கையால் மலம் அள்ள வைத்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது.
பென்னாகரம் அருகே கோடானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், கடந்த 15-ம் தேதி (புதன்கிழமை) மலம் கழிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள புதருக்குள் சென்றுள்ளார். அங்கு வந்த நில உரிமையாளர் ராஜசேகர் என்பவர், சிறுவனின் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதோடு, அவரை கையால் மலத்தை அள்ள வைத்து வேறு இடத்தில் போடவேண்டும் என வற்புறுத்தினர் என சிறுவனின் தந்தை கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
தனது மகனை அடித்துத் துன்புறுத்தியதாகவும், சாதி பெயரைச் சொல்லி மோசமாகப் பேசியதால் தனது மகன் மிகவும் வருத்தப்பட்டதாக கிருஷ்ணமூர்த்தி புகாரில் தெரிவித்துள்ளார்.
”என் மகன் வீட்டுக்கு வந்த கோலத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இழிவாகப் பேசியதோடு, மோசமாக என் மகனை நடத்தியதற்கு நியாயம் வேண்டும் என்பதற்காக பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். என் மகனுக்கு நீதி கிடைக்கவேண்டும்,” என கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ராஜசேகர் மீது தீண்டாமை குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ராஜசேகர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் ராஜசேகரனுக்குச் சொந்தமான இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.