காலனித்துவ காலத்தில் மதம் மாற்றவர்களை மீண்டும் பழையபடி பௌத்தத்துக்கு வந்து சேர்க்கும் பிரச்சாரத்தையும், இயக்கத்தையும் நடத்தி முடித்தவர் அநகாரிக்க தர்மபால. மீண்டும் பௌத்தத்துக்கு மாறுவது மட்டுமன்றி பழைய கிறிஸ்தவ பெயர்களைக் கலைந்து பௌத்தப் பெயர்களை மீண்டும் சூட்டிக்கொள்ளும் ஒரு வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டது. அநகாரிக்க தர்மபால கூட தனக்கு சூட்டப்பட்டிருந்த காலனித்துவ அந்நியப் பெயரான டொன் டேவிட் ஹேவாவித்தாரன என்கிற பெயரை தர்மபால என்று மாற்றிக்கொண்டார். மற்றவர்களை மாற்றச்சொல்லி வற்புத்தினார். கிறிஸ்தவ பெயர்களைக் கொண்டிருப்பவர்களை கேலியும் செய்தார்.

கிறிஸ்தவ பெயர்களை மாற்றிக்கொள்வதும், மீண்டும் பௌத்தத்தை தழுவிக்கொள்வதும் ஒரு பேஷனாக மாறிய காலம் அது. அதன் மூலம் தம்மை சிறந்த தேசியவாதியாக காட்டிக்கொள்ளும் அடையாளமாக ஆகியிருந்த காலம். எனவே புதிதாக அரசியலுக்கு வந்து தேசியவாத அரசியலை மூலதனமாக ஆக்கிக்கொண்ட பண்டாரநாயக்க மாத்திரம் இதில் இருந்து எப்படி விலகிநிற்க முடியும். அவரும் மதத்தையும் மாற்றிக்கொண்டார். பண்டாரநாயக்க அங்கிலிக்கன் மதத்தைச் சேர்ந்தவர். பெயரில் சிங்களத்தனமும் இருந்தபடியால் பெயரை மாற்றிக்கொள்ள அவருக்கு அத்தனை அவசியம் இருக்கவில்லை. ஆனால் அவரின் உடை கலாசாசாரத்தையும் மாற்றிக்கொண்டார்.

லண்டனிலிருந்து வந்ததன் பின்னர் அவரின் அரசியல் நடவடிக்கைகளின் போது பௌத்த மத பெரும்போக்கு தேசிய அரசியலுடன் அவர் படிப்படியாக கலக்கத் தொடங்கினார்.

அவர் பௌத்த மதத்துக்கு மாறிவிட்ட தகவலை அவரது தகப்பானார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க கூட பின்னர் தான் அறிந்துகொண்டார். பண்டாரநாயக்க சில காலமாக கிறிஸ்தவ தேவாலயத்துக்குப் போகாமல் தவிர்ப்பதை அடையாளம் கண்டதன் பின்னர் தான் அறிந்துகொண்டார். ஒரு முறை தேவாலயத்தில் முக்கிய நிகழ்வொன்ருக்கு செல்வதற்காக பண்டாரநாயக்கவை அழைத்தபோது தான் பண்டாரநாயக்க

“டாடி, மன்னியுங்கள். நான் இப்போது ஒரு பௌத்தன்.” என்று பதிலளித்து தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேலும் 1930களில் அவர் “நான் ஏன் பௌத்தனானேன்” (Why I became a Buddhist) என்கிற தலைப்பில் விரிவான கட்டுரையொன்றையும் எழுதி வெளியிட்டார்.

பண்டாரநாயக்க தேசிய வெள்ளை ஆடை அணியத் தொடங்கிய கதையும் சுவாரசியமானது.

“நமது நாட்டில் பருத்தி உற்பத்தி செய்து நெசவுத் தொழிலை மேம்படுத்த வேண்டும் இதன் மூலம் நமது ஆடை நுகர்வுக்காக அந்நிய நாட்டுக்கு செல்லும் அதிகப்படியான பணத்தை நாட்டுக்குள்ளேயே வைத்திருக்கமுடியும்.”

இப்படி கூறிய இளம் பண்டாரநாயக்க தனது கோர்ட், காற்சட்டை, டை, சப்பாத்து, தொப்பி மட்டுமன்றி அவர் தனது உணவு மேசையில் பயன்படுத்திவந்த கத்தி, முற்கரண்டி என்பவற்றை கைவிட்டுவிட்டு தேசிய உடையாக வெள்ளை வேஷ்டி சட்டையை அணியத் தொடங்கினார்.

கதருக்கு

வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த ஜெயராம்தாஸ் ஜயவர்த்தன என்கிற ஒரு மனிதரை அவர் சந்தித்தது பண்டாரநாயக்காவில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவதந்து. கதர் வெட்டியும் வெள்ளை பனியனும் உடுத்திக்கொண்டு வந்து சந்தித்த அவரிடம்,
என்ன இப்படி ஒரு விசித்திரமான உடையை அணிந்து வந்திருக்கிறீர்கள்.”
எனக் கேட்டார் பண்டாரநாயக்க

“நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நீங்கள் ஒரு தேசிய உணர்வுள்ளவர் என்பதால் உங்களை சந்திக்க ஆவலாக வந்தேன்… வெள்ளையாதிக்கத்துக்கு எதிராக மகாத்மாகாந்தியின் ஆயுதங்களில் ஒன்றாக இந்த ஆடையை அவர் பயன்டுத்தினார். தமது நாட்டிலியே, சுதேசியர்களாலேயே கைத்தறியில் நெய்த கதர் உடையை பயன்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கினார். அவருக்கான உடையைத தயாரிக்க அவரே இராட்டினத்தில் நூல் நூற்தார். உள்நாட்டில் அதை தயாரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த கைத்தறிகளை ஊக்குவித்தார்.”
என்றார் ஜயவர்தன.

முன்னர் அரச சேவையில் தனக்கு கிடைத்த சொற்ப சம்பளத்தைக் கொண்டு கல்கத்தாவுக்கு சென்று மகாத்மா காந்தியின் பேச்சுகளைக் கேட்டு அங்கே ஆசிரமத்தில் இருந்து 1925 நாட்டுக்குத் திரும்பியதும் ஜயவர்தன ஒரு கைத்தறி நெசவாலையை ஆரம்பித்திருக்கிறார்.

இதெல்லாம் கேட்ட பண்டாரநாயக்க ஜயவர்தனவை ஒரு குருவாக மதித்தார். வெல்லம்பிட்டியவில் ஜயவர்தன நடத்தி வந்த ஆசிரமத்தில் பல இளைஞர் யுவதிகள் சர்வசாதாரண வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துக்கொண்டு பயிற்சிபெற்று வந்ததை பண்டாரநாயக்க கண்டார். அங்கே பண்டாரநாயக்கவும் இராட்டினத்தில் நூல் கோர்ப்பது, கைத்தறி பயன்படுத்தி துணிகள் செய்வதைக் கற்றுக்கொண்டார். இது நிகழ்ந்தது 1930இல். பின்னர் 1933 இல் அவர் “பட்டும் விவசாய உற்பத்தியும்” (චර්කය හා ගොයම් කෙත) என்கிற ஒரு சிறு நூலை எழுதினார். அதை நாடு முழுவதும் இலவசமாக விநியோகித்தார். அன்றிலிருந்து அவர் கோர்ட், சூட், தோப்பி அனைத்தையும் பகிரங்கமாக எரித்தார்.

பண்டாரநாயக்க கதர் அணிந்து…

ஒரு முறை இராட்டினத்தில் நூல் நூற்கின்ற ஒரு போட்டியைய ஜயவர்தன நடத்திய பொது அந்த நிகழ்வில் பண்டாரநாயக்க மேற்கத்தேய உடைகளை எரித்தது அந்நிகழ்வில் ஒரு அங்கமானது.

1928 இல் தித்தம்பஹுவ என்கிற இடத்தில் ஆரம்பித்த முதலாவது ஜவுளிக்கடை பின்னர் பல இடங்களில் முகவர் கடைகளைத் திறந்தார் ஜயவர்தன. பண்டரநாயக்காவின் தொகுதியில் மாத்திரம் பல கடைகள் திறக்கப்பட்டன. அம்பலங்கொடவில் பருத்திச் செய்கை பெரிய அளவில் தொடங்கப்பட்டது.

பண்டாரநாயக்க சில பிரதேசங்களில் கைத்தறி உற்பத்தி நிலையங்களையும் ஆரம்பித்தார். கொட்டால என்கிற கிராமத்தில் உள்ள ஒரு நிலையத்தில் அவர் அடிக்கடி சென்று கைத்தறி நெசவு செய்வது அவருக்கு பிடித்தமானது. இந்த நிலையத்தை ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின் போது அவரால் திறக்கட்டிருக்கிறது.

பண்டாரநாயக்க அதன் பின்னர் சகல நிகழ்வுகளிலும் தேசிய உடையை அணிந்தார். தனது திருமணத்தின் போது இரு மணமக்கள் வீட்டாரும், வந்திருந்த கனவான்களும் மேற்கத்தேய உடையில் காணப்பட்டபோதும் மணமகன் பண்டாரநாயக்க தேசிய உடையில் காட்சியளித்தார்.

ஆனாலும் உடனடியாக முற்றாக கோர்ட் சூட் உடையை அவரால் கைவிட முடியவில்லை. தனவந்த குடும்பத்தைச் சேர்ந்த அவர், தமது குடும்பம் பாரம்பரியமாக கலந்துகொள்ளும் மேட்டுக்குடியினரின் நிகழ்வுகளில் அவர் கோர்ட் சூட்டை அணிந்து தான் சென்றார். அவரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது கோர்ட் சூட் அணிந்து தான் சென்றார். அவருக்கு ஒரு உயர் ரக செல்ல நாய் இருந்தது. வருடாந்தம் அந்த நாயை; தனவந்தர்களின் நாய்களை வைத்து நடத்தப்படும் போட்டியில் பண்டாரநாயக்க அழைத்துச் செல்வார். அப்போதும் அவர் கோர்ட் சூட்டுடன் போவதை தவிர்க்க இயலாததாக இருந்தது. இந்த இரட்டைத் தன்மையை பற்றி நேரடியாகவே எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள்.

1959 இல் அவரின் தேசிய உடையை குத்திக்கொண்டு நெஞ்சில் பாய்ந்த தோட்டாக்கள் அவரின் உயிரைப் பறித்தன. அந்த இரத்தக்கரை படிந்த அந்த தேசிய உடை இன்னமும் பண்டாரநாயக்க நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மரணச்சடங்கில் அவருக்கு தேசிய உடை அணிவிக்கப்பட்டிருந்தது.


மொழிக்காக மன்னிப்பு

ஆங்கில மொழியில் உரையாடுவதை தவிர்த்து சிங்களத்தில் உரையாடுவதற்காக சிங்களத்தை வேகமாகக் கற்றார்.

பண்டாரநாயக்க தனது படிப்பை முடித்துக் கொண்டு 24.02.1925 அன்று இலங்கைக்கு வந்த போது அவருக்கு அளிக்கப்பட வரவேற்புக் கூட்டத்தில் அங்கு குழுமியிருந்தவர்களிடம் அவர் தனது சிங்கள மொழிப் பலவீனத்துக்காக வருந்துவதை இப்படி தெரிவித்தார்.

“முதலில் நான் உங்களோடு ஆங்கிலத்தில் உரையாற்ற நேரிட்டிருப்பதற்காக மன்னிப்பைக் கோருகிறேன். நீண்டகாலம் நாட்டைவிட்டு தூரத்தில் இருக்க நேரிட்டிருந்ததால் சிறப்பாக சிங்கள மொழியில் தொடர்ச்சியாக பேச முடியாமல் இருக்கிறது. அந்த குறைபாட்டை நான் கூடியவிரைவில் சரிசெய்துவிடுவேன். நான் உளமார இந்த விடயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் உங்கள் முன் இன்று சிங்களத்தில் உரையாற்ற முடியாது போனாலும் கூட என்னிடம் இருப்பது முழுமையான சிங்கள இதயமே என்பதை உங்களுக்கு உறுதியாக கூற விரும்புகிறேன்…”

ஒக்ஸ்போர்ட்டிலிருந்து திரும்பிய போது ஹொறகொல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பு

பண்டாரநாயக்கவின் காலத்தில் தேசிய உடை, தேசிய மொழி, தேசிய பண்பாடு, தேசிய மதம், தேசிய உணவு, தேசிய வளம், தேசிய உற்பத்தி என பல மாற்றங்கள் பலப்படுத்தப்பட்டன என்பது உண்மை ஆனால் அந்த தேசியத்துக்குள் சிங்கள பௌத்தர்களைத் தவிர ஏனையோர் உள்ளடக்கப்படவில்லை என்பது தான் இங்கு நாம் கூற வரும் செய்தி. ஆங்கிலம் பேசும் குடும்பத்தில் வளர்ந்து பின்னர் சிங்களத்தில் பேச உறுதிபூண்டு, சிறந்த சிங்களப் பேச்சாளராக உருவானது மட்டுமன்றி, இறுதியில் சிங்கள “மொழித் தேசிய”வாதத்தை நிறுவி, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரும் அளவுக்கு அவர் சிங்களப் பற்றுறுதி கொண்டவராக ஆனார். அந்த மொழிக் குருட்டுத்தனத்தின் விளைவாக சிங்களவர்களுக்கு சிறந்த தேசியவாதத் தலைவராக ஆனார். ஆனால் இலங்கைக்கான தேசியவாதியாகத் தவறினார்.

தேசிய உடையைத் தேடி

இலங்கையர்களின் தேசிய உடை எது என்பது குறித்த தேடல் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் எழுச்சியைத் தொடர்ந்து முனைப்பு பெற்றது. ஒருபுறம் சுதேசியம் பேசிய தேசியத் தலைவர்கள் மறுபுறம் ஆங்கிலேய மோகத்தில் இருந்தார்கள். அந்த பிரபுத்துவ குழாமினர் அரசியல் சீர்திருத்தத்தையே வேண்டி நின்றவர்கள். முழுச் சுதந்திரத்தில் நாட்டம் அற்றவர்களாக இருந்தவர்கள். அப்பேர்பட்ட பலர் இங்கிலாந்து சென்று பட்டம் பெற்று திரும்பி ஆங்கிலேய அரசில் சிவில் சேவைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, பேசும் மொழி அனைத்தும் மாறி இருந்தது.

தமது கற்கைக்காக சில வருடங்களையே அவர்கள் இங்கிலாந்தில் கழித்தாலும் அவர்கள் மேற்கத்தேய பாணியில் தமது நடத்தையையே இலங்கை திரும்பியதும் கடைப்பிடித்தார்கள். ஆங்கிலத்தையோ, அல்லது ஆங்கிலம் கலந்த சிங்களத்தையோ, அல்லது ஆங்கில பாணியில் சிங்களத்தை உச்சரிப்பதையும் கோர்ட்டுடன் வலம் வருவதையும் கௌரவமானது என்று தமது நடை உடை பாவனையில் காண்பித்தார்கள். தொப்பி அணிந்தார்கள். சிலர் கோர்ட் அணிந்து, காற்சட்டையும் அணிந்து அதற்கு மேல் வேஷ்டியை அணிந்து கொண்டார்கள். இவர்களைப் பார்த்து மக்கள் “வேஷ்டிக்குள் கனவான்” (රෙද්ද අස්‌සේ මහත්තයා) என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.

அரசியலையும், ஜனநாயகத்தையும் மேற்கில் இருந்து கற்றுக்கொண்டு வந்து தமக்கான அரசியலை வகுக்க முயன்றவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் பௌத்த மறுமலர்ச்சிக்காலகட்டத்தைத் தொடர்ந்து மதுவொழிப்பு இயக்கதிற்கூடாக சிங்கள பௌத்த தேசிய எழுச்சியோடு தம்மை ஈடுபடுத்தத் தொடங்கினார்கள்.

சிங்கள பௌத்த தேசியத்தை நிறுவும் பணியில் முன்னின்றவர்கள் இந்தியாவை முன்னுதாரணமாக் கொண்டு அங்கு மகாத்மாகாந்தியால் முன்னெடுக்கப்பட்ட சுதேசிய இயக்கத்தால் கைத்தறியில் நெய்த கதர் ஆடையை அணியும்படி ஊக்குவிக்கப்பட்ட காலம். அதையே முன்னுதாரமாகக்கொண்டு சுதேசியத்தை வலியுறுத்திப் போராடிய இந்திய காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அணிந்த வெள்ளைக் கதர் உடைகளை இலங்கையிலும் உடுக்கத் தொடங்கினார்கள்.

அநகாரிக தர்மபால

அநகாரிக தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர போன்றோரும் கதர் ஆடைகளை உடலில் சுற்றிக்கொண்டனர். இதை அவர்கள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டார்கள். 1893 இல் அமெரிக்காவில் சிக்காகோ மாநாட்டுக்கு விவேகானந்தர் சென்று அங்கு நடத்திய உரையைப் பற்றி அறிவோம். அந்த மாநாட்டுக்கு அநகாரிக தர்மபாலவும் சென்றிருந்தார். அவரின் உரையும் சிங்களத்தில் இன்றும் பேசப்படுகிறது. அந்த மாநாட்டுப் படத்தில் அநகாரிக தர்மபால வெள்ளைக் கதர் உடையை சுற்றிக்கொண்டபடி தான் கலந்து கொண்டிருந்தார் என்பதை அங்கு பிடிக்கப்பட்ட படத்தில் காண முடியும். அந்தப் புகைப்படத்தில் விவேகானந்தருக்கு பின்னால் அநகாரிக தர்மபால அமர்ந்திருப்பார். பிற்காலத்தில் பௌத்த காவி உடுக்கும்வரை வெள்ளைக் கதரைத் தான் தர்மபால அணிந்தார்.

தேசிய உடை இயக்கம்

அநகாரிக தர்மபாலாவின் சிந்தனைகளால் உந்தப்பட்டு பல்வேறு சிங்கள பௌத்த தொடங்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்த வரிசையில் “தேசிய உடை இயக்கம்” (ජාතික ඇඳුම් ව්‍යාපාරය National dress movement) என்கிற ஒரு இயக்கத்தை 1921இல் ஆரம்பித்தார் பீ.டீ.எஸ்.குலரத்ன. குலரத்ன அப்போது ஆனந்த மகாவித்தியாலயத்தின் அதிபராக இருந்தார். இதே 1921 இல் தான் மகாத்மா காந்தியும் அரை உடை உடுத்த ஆரம்பித்தார்.

இந்த இயக்கம் குறித்து 31.05.1921 இல் வெளியான “சிங்கள ஜாதிய” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“தேசத்தின் புத்தெழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அதை தாமதப்படுத்தவோ, பழைய நிலைக்கு கொண்டுசெல்லவோ முடியாமல் இல்லை. இன்றைய நிலையில் சிங்களவர்கள் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க முடியுமா?

நமக்கு தேசிய உணர்வுகள் இல்லாவிட்டால், சிங்கள இரத்தம் கொஞ்சம் கூட நமக்கு கலக்கவில்லை என்று பொருள். சிங்களவர்களின் இரத்தத்தில் கொஞ்சமாவது கலந்திருப்பதால் தான் இன்று தேசிய உணர்வு வளர்ந்தெழ ஆரம்பித்துள்ளது. தேசிய உணர்வு எழும் பொது தேசிய உடையும் அவசியம். பலர் இதைப் பற்றி நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர்.
ஐரோப்பாவிற்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாவை நாம் ஏன் கொடுக்க வேண்டும்? இது நமது தேசத்திற்கு பொருத்தமற்றது, ஆரோக்கியத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது, மற்ற நாடுகளிலிருந்து கேலி செய்யும் முட்டாள்தனமான வேடதாரிகளை உருவாக்குகின்ற விரும்பத்தகாத ஐரோப்பிய ஆடை.
காலுறை, டை, கொலர், டை பின், பூட் போலிஷ் கேட்டர், தொப்பிகள், காற்சட்டை, கோட்டுகள், வெஸ்ட் கோட், பொத்தான்கள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காக நம் சிறிய நாட்டிலிருந்து 100 லட்சத்துக்கும் அதிகமான பணம் செலவிடப்படுகிறது. இதுவும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. நாட்டின் மேட்டுக்குடிகளும், படித்தவர்க்களும் போடும் வேடத்தை நாட்டு மக்களும் கவர்ந்து நாடு முழுவதும் ஐரோப்பிய ஆடையால் புத்திஜீவிகள், படித்தவர்களே பீடிக்கப்படும் போது நாட்டு மக்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே பல்வேறு வகையான உடைக் கலாசாரம் பரவி நம்மை மேவுமலவுக்கு வளர்ந்து முழு நாடும் அதில் சிக்கியிருக்கிறது. இந்தச் சுமையிலிருந்து விடுதலையாவது நம்மெல்லோருடைய பொறுப்பு.”

இதற்கு குலரத்ன எழுதிய பதில் யூன் 14 அன்று வெளியானது. அதில் அவர்

“நமது முன்னோர்கள் அணிந்த பல்வேறு உடைகளில் இதைத் தான் அணியவேண்டும் என்று நம்மால் கூறமுடியாது. எனவே அதில் இதுதான் தேசிய உடை என்று தெரிவு செய்வது சிரமம். இப்போது பரிந்துரைத்திருக்கும் உடை தான் தேசிய உடை என்று உறுதியாக நான் கூறவரவில்லை. ஆனால் இது தேசிய உடையாக கருதக்கூடிய அளவுக்கு பொருத்தமான உடை என்றே கருதுகிறேன். காலப்போக்கில் மக்கள் மத்தியில் இது படிப்படியாக பாவனைக்கு வரலாம்.”
அதே பத்திரிகையில் “சிங்கள ஜாதிய” பத்திரிகையின் ஆசிரியர் சிறிசேன இப்படி கூறுகிறார்.

“அந்நிய உடைகளில் திரிவது, அந்நிய பொருட்களை உபயோகிப்பது, அந்நிய மொழியைப் பேசுவது, அந்நிய தெய்வங்களை வைத்திருப்பது போன்ற செயல்கள் நமது சுதேசியம் பற்றிய நினைவுகளை மறக்கடிக்கச் செய்கின்ற காரணிகள். இந்தக் காரணிகளைப் பேணிக்கொண்டே நாம் தேசிய எழுச்சி, தேசிய உணர்வு, தேச பக்தி என்பவற்றை முன்னெடுக்கலாம் என்பது சரியாக கொள்கையாக இருக்க முடியாது. உடை, நடை, தோற்றத்தில் அந்நிய உருவத்தில் இருந்துகொண்டு வீழ்ந்திருக்கும் ஒரு இனத்தின் தேசபக்தியை ஒருபோதும் தூண்டமுடியாது.”

இதற்கு அடுத்த வாரம் யூன் 21 அன்று அநகாரிக தர்மபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதம் பிரசுரமானது.

“பிரியமுள்ள சிறிசேன,
மக்களின் விருப்புக்கேற்ப ஒழுகுதலே பண்டைய மரபு. அதை மீறிய ரஷ்யா, ஜெர்மன், ஆஸ்திரியா போன்ற நாடுகளின் அரசுகள் வீழ்ந்தன. துணியணியும் சிங்களவர்கள் கலிசம் அணியும் சிங்களவர்களை விட அதிகம் என்பதால் மக்களின் அபிலாஷயின் பிரகாரம் கலிசம், தொப்பி போன்ற ஐரோப்பிய ஆடைகள் புறக்கணிக்கப்படவேண்டும். சிங்கள மக்களின் கருத்துக்கு செவிகொடுப்பது சிறியளவிலான கலிசம்காரர்கலின் பொறுப்பு. மக்கள் சபையை அமைத்து கலிசம்களை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்….
சிங்கள இளைஞர்களுக்கு நேர்த்தியான மார்க்கத்தை வழிகாட்டும் பண்டிதர் குலரத்னவை சிங்கள இளைஞர்கள் முன்னுதாரணமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்….
அன்புடன் அநகாரிக்க தர்மபால”

“சிங்கள ஜாதிய” பத்திரிகை தொடர்ச்சியாக “தேசிய ஆடை இயக்கத்தை” ஆதரித்து படைப்புகளை வெளியிட்டது. ஐரோப்பிய ஆடைகளை புறக்கணித்து நமது சுதேசிய ஆடைகளை அணிந்து உற்சவங்களில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தியது. யூன் 21 அன்று ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“தேசிய உடை குறித்து கசப்புடன் பார்க்கும் போக்கையும் நாம் காண்கிறோம். இதில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் (Kandy Trinity College) அதிபர் பாதிரியார் எ.பீ.பிரேசர். அவர் தேசிய உடை அணிந்து கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை கதிரைக்கு மேல் ஏறச் செய்து தண்டித்து அவமதித்து மிரட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து சிறிசேன எழுதிய எதிர்ப்புக் கட்டுரையை எதிர்த்து அவரைப் பலி வாங்குவதற்காக 5000 ரூபாவுக்கு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் பிரேசர். நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமாதானமாக தீர்க்கப்பட்டபோதும். வழக்குச் செலவாக 300 ரூபாவை சிறிசேன செலுத்த பணிக்கப்பட்டார்.”

இந்த இயக்கத்தை ஆதரித்து அப்போது டீ.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட பல தலைவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். டீ.எஸ்.சேனநாயக்க சாகும்வரை கோர்ட் சூட்டுடன் தான் வளம் வந்தார். அவரைத் தொடர்ந்து பிரதமரான அவரின் மகன் டட்லி செனநாயக்கவும் இறுதிவரை மேற்கத்தேய உடையுடன் காணப்பட்டார். ஆனால் மத நிகழ்வுகளில் மாத்திரம் டீ.எஸ். சேனநாயக்காவும், டட்லியும் தேசிய உடை அணிந்தார்கள். டீ.எஸ். சேனநாயக்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதும் கண்டி தலதா மாளிகைக்கு தேசிய உடையில் தான் சென்றார். அந்த வரிசையில் சுதந்திர இலங்கையின் தலைவர்களிலேயே முதலாவதாக தேசிய உடையை அணிந்து முன்னுதாரணமாக ஆனவர் பண்டாரநாயக்க.

ஆரம்பத்தில் தேசிய உடை அணிந்த முன்னோடித் தலைவர்களாக கலாநிதி ஈ.அதிகாரம், ஆதர த சில்வா, சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கர, எச்.எல்.டீ.மெல், டபிள்யு.ஏ.டீ.சில்வா இடதுசாரித் தலைவர்களான எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பிலிப் குணவர்த்தன போன்றோரை குறிப்பான உதாரணங்களாகக் குறிப்படலாம். பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா எப்போதும் வெள்ளை வேட்டியும், பனியனுமாக காட்சியளித்தார்.

தேசிய உடை இயக்கத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவளித்து வந்த பிரபல சிங்கள தேசியவாத இலக்கியவாதியான ஜி.பீ.மலலசேகர பல்கலைக்கழக பேராசியராக இருந்த காலத்திலும், ரஷ்யா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இலங்கைப் பிரதிநிதியாக இருந்த காலத்திலும் கூட வெளிர்நிறத்தில் தேசிய உடையையே அணிந்துவந்தார்.

இதேவேளை 1920 களின் பிற்பகுதியில் யாழ்ப்பான இளைஞர் காங்கிரஸ் வேஷ்டியும், கோர்ட்டையும் உடுத்தும்படி ஆசிரியர்களை வேண்டிக்கொண்டது. 1931 இல் யாழ்நகர் ஆசிரியர் சங்கம் (Jaffna Town Teachers Association) அந்நிய ஆடைகளை களைந்துவிட்டு தேசியத்தின் சுயகௌரவத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணியும்படி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தியாவில் அணியப்பட்ட சுதேசிய உடைகளான வெள்ளை நிற வேஷ்டியும், நீளமான சட்டையையும் கண்டு அவர்களும் தொடர்ச்சியாக அணியத் தொடங்கினார்கள். அவர்களின் அடியொற்றியவர்களும் அதே உடைகளை முக்கிய நிகழ்வுகளில் இலங்கையில் உடுக்கத் தொடங்கினார்கள்.

சுதேசியத்தைத் தேடும் நீட்சியில் 1940 களில் “சுதேசியமே சுகம் தரும்” (“සියරට දේ සිරි සැප දේ”) என்கிற சுலோகம் வலுக்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமாக இந்த கோஷம் தலைதூக்கியது. காற்சட்டையும், கோர்ட்டையும் அணிந்தவர்கள் தமது தேசிய உடை என்ன என்கிற தேடலைத் தொடங்கினார்கள். சிங்களவர்களின் தேசிய உடை கோவணம் தான் என்று அப்போது சிலர் கூறினார்கள்.

இதே காலப்பகுதியில் இலங்கை தேசிய காங்கிரசுக்குள்ளும் தேசிய உடை பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. 1941 இல் தேசிய உடையைத் தெரிவு செய்வதற்காக ஒரு ஆடை அணிவகுப்பை ஒழுங்கு செய்தது காங்கிரஸ். இதன் நடுவர்களாக G.C.S.கொறயா, H.W.அமரசூரிய, Dr.R.சரவணமுத்து, J.R.ஜெயவர்தன, M.D.A.விஜேசிங்க கடமையாற்றினர். அதன்படி வெள்ளை நிறத்தில் முழங்காலுக்கு சற்று மேலே வரை இருக்கும் வகையில் அந்த சட்டையின் அமைப்பு இருக்கும் வகையில் சட்டையில் இடுப்புப் பகுதியில் இருபுறமும் சட்டைப்பை வைக்கப்பட்டு இருந்த உடை தெரிவானது. பெண்கள் சிங்கள (கண்டிய சிங்கள), தமிழ், முஸ்லிம் பெண்கள் அவரவர் கலாசாரத்து ஆடைகளை அணிகின்ற வழக்கம் உருவானது. ஆனாலும் இலங்கையில் ஆண்கள் அணியும் தேசிய உடை என்பது சிங்கள ஆண்கள் அணிகின்ற உடையாகவே பின்னர் வழக்கத்துக்கு வந்தது.

சிங்களப் பெண்களில் ஒரு பகுதியினர் சாதியின் பேரால் மேலாடை அணிய உரிமையற்றவர்களாக இருந்தனர். மார்புகளை வெளிக்காட்டிக்கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். தமிழ்ச் சூழலிலும் கச்சை அணிவது உயர்சாதியினருக்கு உரிய ஒன்றாகவும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அது மறுக்கப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. அப்படி மீறி அணிந்தவர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய உடையென்பது வெள்ளை வேஸ்டியும், வெள்ளை பனியனும் என்கிற நம்பிக்கை இருந்தது. 1952இல் நிலவிய அரசியல் சூழலில் பௌத்தத்தை அரவணைத்து இருப்பதும், தேசிய உடையை உடுப்பதும் இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கான தகுதிகளில் ஒன்றாக கருதப்பட்டது. 1948 சுதந்திரத்தின் பின்னர் காலனித்துவ வெள்ளையினத்து கோர்ட்டும் சூட்டும் போதும் போதும் என்றாகியதுடன் தேசிய உடைக்கு அதைவிட அங்கீகாரம் கிடைக்கும் நிலை உருவானது.

இதே வேளை 1956 அரசியல் மாற்றத்தோடு ஏற்பட்ட கலாசார மாற்றத்தின் போது சாதாரணமாக ஆண்கள் அணிகின்ற சுதேசிய தேசிய உடையாக வெள்ளை வேஷ்டியுடன் (சரம்), மேலே வெள்ளை பனியனும் அணிவது பிரபல்யமாக ஆனது.

1947 டீ.எஸ்.சேனநாயக்கஅமைச்சரவை -பண்டாரநாயக்க தேசிய உடையில் பெரும்பாலானோர் கோர்ட் சூட்டுடன்

“சுதந்திர இலங்கையின்” 1948 டீ.எஸ்.சேனநாயக்கஅமைச்சரவை -பண்டாரநாயக்க தேசிய உடையில் பெரும்பாலானோர் கோர்ட் சூட்டுடன்

1956 பண்டாரநாயக்க “தேசிய உடை” அமைச்சரவை

1960 சிறிமாவோ பண்டாரநாயக்க அமைச்சரவை

1956 ஆம் ஆண்டு பண்டரநாயக்காவின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வில் ஒருவரைத் தவிர அனைவரும் தேசிய உடையில் தான் காணப்பட்டார்கள். அன்றைய ஆளுநராக சேர் ஒலிவர் குணதிலக்க மேற்கத்தேய அந்நிய உடையிலும் பண்டாரநாயக்க தேசிய உடையிலும் பல நிகழ்வுகளில் ஒன்றாக காட்சியளித்தார்கள். அது இருவேறு அரசியலை அப்பட்டமாக பிரதிபலித்துக்கொண்டிருந்தன.

1962 ஆம் ஆண்டு வில்லியம் கொபல்லாவ ஆளுநராக தெரிவாகி பின்னர் 1972இல் முதலாவது ஜனாதிபதியாக அவரின் பதவி தொடர்ந்தது. 1962 தொடக்கம் சமீபத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வரை தேசிய உடையை தேசத்தின் கௌரவத்தை பிரதிபலிக்கும் உடையாக அணிந்து வந்திருக்கிறார்கள். அதை முதலாவது தடவை மீண்டும் மாற்றி தேசிய உடையணியாமல் மேற்கத்தேய ஆடையை மீண்டும் அணிந்தவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, இலங்கை ஜனாதிபதியாக ஆன கோத்தபாய ராஜபக்ச தான்.

தேசிய உடை இப்படி சமூகத்தில் ஜனரஞ்சகமானாலும் அது அரசியல்வாதிகள் அணிகின்ற உடையாக மட்டும் சுருங்கியுள்ளது. அல்லது சில பாரம்பரிய, மத, கலாசார, வைபவ நிகழ்வுகளில் மாத்திரம் காண முடிகிறது. ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் வரை ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் கூட தேசிய உடை அணிகின்ற வழக்கம் புழக்கத்தில் இருக்கவே செய்தது. இந்தியாவிலிருந்து மகாத்மா காந்தியின் ஆதர்சத்தால் உள்வாங்கப்பட்ட இலங்கையின் தேசிய உடை இப்போது அதே இந்தியாவிலிருந்து கலப்படம் செய்யப்பட்ட பல மோஸ்தர்களில் சேலைகள், பஞ்சாபிகள், சுடிதார்கள், வேஷ்டிகள், குர்தாக்கள் எல்லாம் சாதாரண மக்கள் மத்தியில் தேசிய உடையின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன.

Share.
Leave A Reply