திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தாய் மற்றும் அவரது 5 மகன்கள் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 88 வயது நிரம்பிய இவருக்கு மொத்தம் 6 மகன்கள் உள்ளனர். அதில் 5 பேர் ஜார்க்கண்டிலும்,ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர். அவர்கள் அனைவரும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருந்தனர்.

இதற்கிடையில், இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் நடந்த தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த
ஊரான கட்ரசுக்கு ராணி திரும்பினார்.

சொந்த ஊர் திரும்பிய ஒரிரு நாளிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ராணி போக்ரோவ் பகுதியில் உள்ள மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் கடந்த ஜூலை 4 ஆம் தேதி மருத்துவமனையில் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சமயத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை.

இதையடுத்து, உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது 5 மகன்கள் சேர்ந்து அடக்கம் செய்தனர். அதற்கு அடுத்த நாள் ராணிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது.

அதில் உயிரிழந்த ராணிக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ராணியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதில் உயிரிழந்த ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 5 மகன்கள் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த குடும்பத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 (உயிரிழந்த ராணி உள்பட) ஆனது.

இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சகோதரர்கள் அனைவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடைசியாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) 5-வது சகோதரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதாவது ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரையினால 16 நாட்கள் இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தாய் ராணி மற்றும் அவரது 5 மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

வைரசால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் 2 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் தாய் ராணி மற்றும் அவரது 5 மகன்கள் உயிரிழந்துள்ளனர்.

ராணியின் 6 மகன்களில் டெல்லியில் வசித்து ஒரே ஒரு மகன் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராணி குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், ராணி வீடு உள்ள கட்ரஸ் பகுதி முழுவதையும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து அப்பகுதியை முற்றிலும் அடைத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் ஒற்றை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று தாய் மற்றும் அவரது 5 மகன்கள் வைரஸ் தாக்குதலுக்கு 16 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை மட்டுமல்லாமல் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply