ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி, அவருடைய தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பேரறிவாளனுக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகவும் சிறையில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்ததோடு, பெற்றோர்கள் இருவரும் வயதானவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017ஆம் ஆண்டில் 30 நாட்களும் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரிவரை 60 நாட்களும் சிறை விடுப்பு வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, சிறுவிதிகளின்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சிறை விடுப்பு வழங்க முடியுமெனக் கூறினார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உடல்நலக் குறைபாட்டிற்காகவே சிறை விடுப்பு கேட்கப்படுவதாகவும் இதில் விதிகளைப் பார்க்கத் தேவையில்லை என்றும் கூறியதோடு, இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
அப்போது அந்தத் தீர்மானம் குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்தத் தீர்மானத்தை ஆளுநர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
ஆனால், முடிவெடுக்காமல் இருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பினர். மேலும், அரசியல்சாஸனப் பொறுப்பில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற விஷயங்களில் காலக்கெடு விதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இதற்குப் பிறகு தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.