ஜுலை மாதத்தில் நான்காவது வாரம் 1983 ஜுலையின் அவலங்களின் ஊடாக வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் பயங்கரமான நினைவுகளை மீட்கிறது. ஜுலையின் அந்த வாரத்தில்தான் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
ஒருவாரகாலம் தொடர்ந்த தமிழருக்கெதிரான வன்முறைகளில் 4000 இற்கும் அதிகமான தமிழர்களும், தமிழர்கள் என்று தவறாக எண்ணப்பட்ட சில முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தார்கள். அவர்களில் சிலர் வைத்தியசாலைகளில் இறந்தார்கள். இந்தக் கொடுமைகளின் விளைவாக 300,000 இலட்சம் வரையான தமிழ்மக்கள் தமது சொந்த உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்தார்கள். சுமார் 130,000 பேர் தற்காலிக அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். தொழிற்சாலைகள் தொடங்கி சிறிய விற்பனை நிலையங்கள் வரை 2500 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள், பெரும் எண்ணிக்கையான வீடுகள், குடியிருப்புக்கள், வாகனங்கள் சேதமாக்கப்பட்டன அல்லது நிர்மூலம் செய்யப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இன்றுவரை முழுமையாகக் கணிப்பிடப்படவில்லை.
1983 ஜுலை வன்செயல் தமிழர்களுக்கு எதிரான புறத்தூண்டுதல் இல்லாத ஒரு பொதுஜனக்கிளர்ச்சி அல்ல. வன்முறை வெடிப்பதற்கு முன்னதாகத் தமிழர்களைக் கொலை செய்வதற்கும், அவர்களது உடமைகளை அழிப்பதற்கும் பரந்தளவிலான தாக்குதலைத் தொடுப்பதற்கு முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அந்த வன்முறைகளை நியாயப்படுத்துவதற்கு ஒரு சாட்டாகப் பாரதூரமான சம்பவமொன்றே அந்தத் திட்டத்தைத் தீட்டியவர்களுக்குத் தேவைப்பட்டது. வடக்கில் 1983 ஜுலை 23 சனிக்கிழமை இரவு இராணுவ ரோந்து வாகனங்கள் மீது மறைந்திருந்து விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவவீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தச் சம்பவத்தை அடுத்தே ஜுலை 24 ஞாயிற்றுக்கிழமை வன்முறைகள் வெடிக்கத்தொடங்கின. இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அந்தத் தாக்குதலும்கூட ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஜுலை 15 ஆம் திகதி வெற்றிகரமான இராணுவத்தாக்குதல் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டதன் விளைவாக விடுதலைப்புலிகள் தங்களது தாக்குதலைத் துரிதப்படுத்தினார்கள். 1983 ஜுலை வன்செயல் இரு தாக்குதல்களினதும், ஒரு திட்டமிடப்பட்ட படுகொலைகளினதும் ஒரு கதையாகும்.
சீலனின் மரணம்
ஜுலை முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இலங்கைப் பாதுகாப்புப்படைகளுக்கு யாழ்ப்பாணக்குடாநாட்டின் தென்மராட்சிப்பிரிவில் மீசாலை, அல்லாலையில் தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் அமைந்திருந்த வீட்டில் சில விடுதலைப்புலிகள் தங்கியிருப்பதாகத் தகவலொன்று கிடைத்தது. அந்தத் தகவலைத் தீர ஆராய்ந்த பிறகு இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதல்களை நடத்தினர். அது விடுதலைப்புலிகள் இயக்கம் 32 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்த காலகட்டமாகும். சீலன், அருணா, கணேஷ், ஆனந்த் என்ற 4 விடுதலைப்புலிகள் அந்த மீசாலை வீட்டில் இருந்தனர். இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலையடுத்து அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். துப்பாக்கிப்பிரயோகங்களை அடுத்து விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களுடன் தப்பியோடத் தொடங்கினார்கள்.
படையினர் துரத்திச்சென்று துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் இரண்டு புலிகள் காயமடைந்தனர் என்றாலும் அவர்கள் பனந்தோப்பு ஒன்றுக்குள் மறைந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனந்த் சுயநினைவை இழந்த அதேவேளை, அன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவத்தளபதியான சீலனின் உடலிலிருந்து பெருமளவு குருதி வெளியேறியது. தன்னையும், ஆனந்தையும் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதங்களுடன் தப்பிச்செல்லுமாறு அருணாவிற்கும் கணேஷ{க்கும் அப்போது சீலன் உத்தரவிட்டார். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளிடம் சொற்ப ஆயுதங்களே இருந்தன. அவற்றை அவர்கள் மிகவும் பெறுமதிவாய்ந்த சொத்துக்களாகக் கருதினார்கள். அந்த உத்தரவிற்குப் பணிந்து அருணாவும், கணேஷ{ம் சீலனையும் ஆனந்தையும் சுட்டுக்கொலை செய்தார்கள். பிறகு அந்த இடத்திலிரந்து சென்று வாகனமொன்றைக் கடத்தி, அதில் தப்பியோடிவிட்டார்கள்.
இரண்டு சடலங்களையும் படையினர் மீட்டுக்கொண்டு சென்றார். இரண்டு புலிகளும் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சீலன் (திருகோணமலை அஸீர் என்றும் அறியப்பட்டவர்), இராமநாதன் அருளானந்தம் என்கிற ஆனந்த் (மயிலிட்டியைச் சேர்ந்தவர்) என்று அடையாளங்காணப்பட்டனர். சாள்ஸ் அன்ரனி என்ற சீலனின் மரணம் தொடர்பாகப் பாதுகாப்புப்படைகள் குதூகலமடைந்தன. அவரே யாழ்நகரின் ஸ்டான்லி வீதியில் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டது உட்பட பல தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர். சாவகச்சேரி பொலிஸ்நிலையம் மீதான விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான தாக்குதல்களுக்கும் அவரே தலைமை தாங்கியவராவார். விடுதலைப்புலிகளின் இராணுவத்தளபதியாக சீலன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்தார்.
சீலனின் மரணம் பிரபாகரனைப் பெரிதும் ஆத்திரமடையச்செய்தது. சீலன் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பரும், இயக்கத்தின் உற்ற தோழருமாவார். சீலன் மீதான பிரபாகரனின் பாசத்தையும், மதிப்பையும் இரண்டு செயல்களின் ஊடாக அறிந்துகொள்ள முடியும். பிரபாகரன் இந்துவாக இருந்தபோதிலும் தனது முதல் மகனுக்கு நண்பனைக் கௌரவிக்கும் விதமாக சாள்ஸ் அன்ரனி என்று பெயர்வைத்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் விரிவுபடுத்தப்பட்டு, அதன் முதலாவது காலாட்பிரிவை அமைத்தபோது அதற்கும் பிரபாகரன் ‘சாள்ஸ் அன்ரனி காலாட்பிரிவு” என்றுதான் பெயர்வைத்தார்.
அதனால் சீலனின் மரணம் பிரபாகரனை எந்தளவிற்குப் பாதித்தது, ஆத்திரமூட்டியது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இராணுவ ரோந்து வாகனங்கள் மீது மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்துவுதற்கு விடுதலைப்புலிகள் நீண்டகாலமாகத் திட்டம் தீட்டிவந்தனர். அதனால் சீலன் மரணமடைந்தபோது இராணுவம் மீதான அந்தத் தாக்குதலைத் துரிதப்படுத்துமாறு புலிகளுக்குப் பிரபாகரன் உத்தரவிட்டார். ஜுலை 16 சாள்ஸ் அன்ரனியின் மரணத்தை பிரபாகரன் கேள்விப்பட்டபோது, உற்ற நண்பனின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்கு ஒருவாரகாலத்திற்குள் இராணுவத்தின் மீது தாக்குதலொன்றைத் தொடுக்கவேண்டுமென்று பிரபாகரன் தனது ஆட்களுக்குக் கூறினார். சரியாக ஒருவாரத்திற்குப் பிறகு ஜுலை 23 ஆம் திகதி புலிகள் தாக்கினர்.
இராணுவத்தாக்குதல்
விடுதலைப்புலிகள் வேவுபார்த்த பிறகு இராணுவம் இரவு ரோந்தில் கிரமமாக ஈடுபடுவதைக் கண்டுபிடித்தார்கள். யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 2 மைல் தொலைவிலுள்ள திண்ணைவேலி என்று அழைக்கப்படும் திருநெல்வேலியில் தாக்குதல்களை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி வீதியோரமாகத் தபால்கட்டை சந்திக்கு சுமார் 150 மீற்றர்கள் தெற்கேயுள்ள ஒரு இடம் தாக்குதலுக்கென்று தெரிவு செய்யப்பட்டது. தொலைத்தொடர்புக் கம்பிகளை வைப்பதற்காக ஏற்கனவே அந்த வீதி தோண்டப்பட்டிருந்தது. இதனால் புலிகள் கண்ணிவெடிகளைப் புதைப்பதற்கு வசதியாக இருந்தது.
சீலனின் மரணத்தையடுத்து சதாசிவம் செல்வநாயகம் என்ற செல்லக்கிளியை (கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்) புலிகளின் இராணுவத்தளபதியாக பிரபாகரன் நியமித்தார். பிரபாகரனின் ஆதரவுடன் செல்லக்கிளியினால் மேற்பார்வை செய்யப்பட்டு, திண்ணைவேலித்தாக்குதல் திட்டமிடப்பட்டது. சீலனும் ஆனந்தும் மரணமடைந்த பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் உட்பட 30 முழுநேர உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். அவர்களில் திண்ணைவேலித்தாக்குதலில் 13 பேர் சம்பந்தப்பட்டனர். பிரபாகரன், செல்லக்கிளி, புலேந்திரன், பொன்னம்மான், ரெஜி, ரஞ்சன் லாலா, கிட்டு, சந்தோசம், விக்டர், அப்பையா, கணேஷ், லிங்கம், அல்பட், பஸீர், ராஜேஷ், சுப்பண்ணா, ராமு, ஞானம் மற்றும் ரகு (குண்டப்பா) ஆகியோரே அவர்களாவர்.
நான்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு, அவற்றை வெடிக்கவைப்பதற்கான தொடர்புக்கம்பிகள் அந்த வீதியை நோக்கியிருந்த சிறிய கடையொன்றின் கூரையில் நிறுத்திவைக்கப்பட்டது. சரியான நேரத்தில் கண்ணிவெடிகளை வெடிக்கவைப்பதற்குக் கூரையின் மீது செல்லகிளி ஏறிக்கொண்டார். ஏனைய விடுதலைப்புலிகள் வீதியின் இருமருங்கிலும் உள்ள மதில்களுக்குப் பின்னால் இரு குழுக்களாக மறைந்திருந்தனர்.
மாதகல் இராணுவமுகாமிலிருந்து வந்துகொண்டிருந்த ‘குழரச குழரச டீசயஎழ’ ரோந்திலும், ஒரு ஜீப்பிலும், டாட்டா பென்ஸ் திறந்த ட்ரக்கிலும் 15 படைவீரர்கள் இருந்தனர். அவர்கள் சகலரும் இலங்கை இராணுவத்தின் இலகு காலாட்படைப்பிரிவின் முதலாவது அணியைச் சேர்ந்தவர்கள். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான இரண்டாவது லெப்டினன் வாஸ் குணவர்தன அவர்களுக்குத் தலைமை தாங்கிவந்தார். அவரிடம் ஒரு சப் மெஷின் துப்பாக்கி இருந்தது. மற்றவர்களிடம் ரவைகள் நிரப்பப்பட்ட ரைபிள்களும் கிரனைட்டுக்களும் இருந்தன. இரு வாகனங்களும் அண்மித்தபோது கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. அவை ஜீப்பின் வலது பக்கத்திலும், ஜீப்பிற்கும் ட்ரக்கிற்கும் இடையிலும் வெடித்தன. அதையடுத்து புலிகள் துப்பாக்கிப்பிரயோகம் செய்து கிரனைட்டுக்களையும் வீசினர். படையினர் திருப்பித்தாக்கினர். முடிவில் லெப்டினன் வாஸ் குணவர்தன உட்பட 15 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கோப்ரல் பெரேராவும், லான்ஸ் கோப்ரல் சுமதிபாலவுமே உயிர்தப்பிய இருவராவர். இந்தத் தாக்குதல் பற்றிய செய்தி தெரிய வந்ததும் காலாட்படை வீரர்கள் கிளர்ந்தெழுந்து அங்குமிங்கும் மூர்க்கத்தனமாகத் தாக்கத்தொடங்கினர். அந்தப் படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிய லெப்டினன் கேர்ணல் உபாலி தர்மரத்ன அவர்களைக் கட்டுப்படுத்தாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். யாழ்ப்பாணம் முழுவதற்குமான தளபதி பிரிகேடியர் லைல் பல்தஸாரினாலும் கூடத் தனது அதிகாரத்தைச் செலுத்திப் படையினர் மத்தியில் ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியவில்லை.
சீற்றமடைந்த படைவீரர்கள் திண்ணைவேலியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களில் 51 குடிமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் எனக்குத் தெரிந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாபரமேஸ்வரனும் ஒருவர். 7 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மினிவான் ஒன்று படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, சாரதி உட்பட 8 பேரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டுக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் எனது நண்பனான மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ‘மனிதன்” சஞ்சிகையின் ஆசிரியருமான விமலதாசனும் ஒருவர். இந்த அட்டூழியங்களுக்குப் பிறகு அந்தக் காலாட்படை முதலாவது அணியை யாழ்ப்பாணத்தைவிட்டு ஜெனர் திஸ்ஸ வீரதுங்க இடமாற்றம் செய்தார். லெப்டினன் கேர்ணல் தர்மரத்னவின் இடத்திற்கு லெப்டினன் கேர்ணல் ஏ.எம்.யூ.செனெவிரத்ன நியமிக்கப்பட்டார்.
கொழும்புச் சம்பவங்கள்
அதேவேளை கொழும்பில் ஆட்சியதிகாரத்தின் வாசற்படிகளில் என்ன நடந்துகொண்டிருந்தது? அந்தக் கேள்விக்கான பதிலை முன்னாள் பிரதிப்பொலிஸ்மாதிபர் சுந்தா (இராமசந்திரா சுந்தரலிங்கம்) எனக்கு அனுப்பிய இலத்திரனியல் அஞ்சலை மீளப்பிரசுரம் செய்தவதன் மூலம் நான் வழங்க விரும்புகின்றேன். சுந்தா இலங்கையில் எனது சந்ததிப் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஒரு நல்ல நண்பராக இருந்தார். நல்லதொரு சட்டம், ஒழுங்கு செய்தி எமக்குத் தேவையெனின் நாம் அவரைத் தொடர்புகொண்டார் போதும். சுந்தரலிங்கம் 1983 ஜுலை வன்முறை நேரத்தில் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மாதிபராக சேவையாற்றிக்கொண்டிருந்தார். பிறகு அவர் பாரிஸில் உள்ள இன்டர்போலில் பதவியொன்றையேற்றுப் போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஒரு நிபுணராகப் பிரபலமானார். ஓய்வுபெற்ற பிறகு அவர் தமிழ்நாட்டின் சென்னையில் வாழ்ந்து வந்தார். சுந்தாவும் நானும் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கிரமமாகத் தொடர்பில் இருந்தோம். அந்தத் தொடர்பு 2018 டிசம்பரில் அவர் மரணமடையும் வரை தொடர்ந்தது.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக நான் ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்த போது 2017 ஜுலையில் அவரால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அகப்பட்டது. 1983 ஜுலை பற்றி என்னுடன் பேசுவதற்கு விரும்பிய அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நான் வீட்டில் இல்லாத காரணத்தினால் உடனடியாக அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அமையிழந்த சுந்தா தனது சிந்தனைகளைத் தொகுத்துத்தரும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். எவ்வாறெனினும் பிறகு நாம் தொலைபேசி சும்பாஷணையில் அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினோம்.
‘அன்பான டி.பி.எஸ் இற்கு”
1983 ஜுலையில் இலங்கைச் சரித்திரத்தின் நீண்ட அத்தியாயத்தில் சில விடயங்களைச் சுருக்கமாகக் கூறவிரும்புகிறேன். திண்ணைவேலித்தாக்குதலில் 1983 ஜுலை 23 ஆம் திகதி 13 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இராணுவத்தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி ஜே.ஆர் ஜெனரல் ஆட்டிகல ஊடாக இராணுவத்தளபதி வீரதுங்கவிற்கு உடனடியாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார். வடமாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ்மாதிபராக இருந்த ராஜகுரு, பொலிஸ்மாதிபர் ருத்ர ராஜசிங்கம் ஆகியோருடனும் என்னுடனும் தொடர்புகொண்டு இராணுவம் காட்டுதர்பாரில் இறங்கியிருக்கிறது. பொலிஸார் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினார்.
யாழ்ப்பாண நிலைவரங்களைக் கண்காணிப்பதற்கு ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கும் வேறு இடங்களுக்கும் சென்றிருந்த இராணுவத்தளபதியைத் தவிர சகல படைத்தளபதிகளுடனும் பாதுகாப்புச்சபை கூடியது. வடமாகாண பிரதிப்பொலிஸ்மாதிபரை மேற்பார்வைசெய்யும் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மாதிபர் என்றவகையில் நானும் அந்தப் பாதுகாப்பு நானும் அந்தப் பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் பிரசன்னமாக வேண்டும் என்று ருத்ரா என்னிடம் கோரிக்கைவிடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தும், பலரைத் தாக்கிக்காயப்படுத்தியும் இராணுவம் கிளர்ச்சியில் இறங்கியதையடுத்து வடக்கில் மோசமடைந்த நிலைமை குறித்து யாழில் இருந்த இராணுவத்தளபதி ஜெனரல் வீரதுங்கவுடன் பலமணிநேரம் (பி.ப 3 – பி.ப7) ஆராய்ந்த ஜெனரல் ஆட்டிகல தளபதி வீரதுங்கவினால் எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க முடியவில்லை என்பதைக் கூறினார்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் ஆட்டிகல களநிலவரத்தைத் தெரியப்படுத்தினார். திருநெல்வேலித்தாக்குதலில் பலியான இராணுவவீரர்களின் சடலங்கள் போர்நிலைவரம் ஒன்றில் இடம்பெறுவதைப்போன்று யாழ்ப்பாணத்திலேயே புதைக்கப்பட வேண்டும் என்று ஜெனரல் ஆட்டிகலவிற்குக் கூறினார். ஜனாதிபதியின் அந்தச் செய்தி ஜெனரல் வீரதுங்கவிற்குத் தெரியப்படுத்தப்பட்டபோது அவர், ‘சேர், நானும் இங்கேயே புதைக்கப்படப்போகிறேன். சடலங்களை அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கு நேரகாலத்தோடு ஏற்பாடு செய்யுங்கள்” என்று பதிலளித்தார்.
சடலங்கள் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு 13 படைவீரர்களினதும் 13 கிராமங்களுக்கு அவற்றை அனுப்புவதென்று பாதுகாப்புச்சபை தீர்மானிக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து விமானநிலையத்தில் சடலங்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டபோது 13 குளிரூட்டப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டிகளைத் தயார்நிலையில் வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஜெனரல் ஆட்டிகலவுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் இந்த ஏற்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகள் சகலவற்றுக்கும் நான் கண்கண்ட சாட்சி.
அம்பியூலன்ஸில் சடலங்களைக் கொண்டுவரும் திட்டம் கைவிடப்பட்டு கனத்தையில் பொது அடக்கத்திற்காக சடலங்களை இரத்மலானைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படும் என்று பொலிஸ் தலைமையகத்திற்குத் தகவல் கிடைத்தது.
பொலிஸ்மாதிபர் ருத்ராவும், பிரதிப்பொலிஸ்மாதிபர் ரேனஸ் பெரேராவும், நானும் கனத்தைக்குச் சென்றோம். எங்கு பார்த்தாலும் பதற்றமாக இருந்தது. நிலைவரம் பாரதூரமானதாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ரேனஸ் பெரேராவும் நானும் ருத்ராவிடம் இரவு 9 மணியளவில் ஊரடங்குச்சட்டத்தைப் பிறப்பிக்குமாறு உடனடியாக ஜே.ஆர்.ஜெயவர்தனவைச் சந்தித்துக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினோம்.
அல்லாவிடின் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் என்றும் கூறினோம். அவர் ஜே.ஆர்.ஜெயவர்தனவைச் சந்திக்க வார்ட் ப்ளேஸ{;ககுச் சென்றார். அடுத்தநாள் மாலைவரை ஊரடங்குச்சட்டம் ஒருபோதும் பிறப்பிக்கப்படவில்லை. அதற்குள்ளாக தமிழர்களுக்கும், அவர்களது உடைமைகளுக்கும் பாரிய அழிவு ஏற்பட்டுவிட்டது. இது எமது வரலாற்றில் மிகவும் மோசமானதாகும். ஜே.ஆர் அந்த நிலைவரத்தைத் தடுத்திருக்க முடியும். ஆனால் ஊரடங்குச்சட்டத்தைப் பிரகடனப்படுத்த அவர் தவறிவிட்டார். படைவீரர்களின் சடலங்களைப் பொது அடக்கத்திற்காகக் கனத்தைக்குக் கொண்டுவரும் தீர்மானத்தை எடுத்தது யார் என்பது பெரியதொரு கேள்வி. அவ்வாறு வலியுறுத்தியவர் சிரில் மத்தியூ என்று அமைச்சர் தொண்டமான் என்னிடம் கூறினார்.
தமிழருக்கு எதிரான வன்முறைகள்
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மாதிபர் சுந்தாவின் மின்னஞ்சல் அன்று நடந்தவை பற்றிய நுண்ணிய விபரங்களைத் தருகிறது. விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்ட 13 படைவீரர்களுக்காகவும் ககனத்தையில் பொது இறுதிக்கிரியையொன்றை ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நடத்தியது. 1983 ஜுலை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனத்தையில் பெருமளவானோர் கூடியிருந்தனர்.
அவர்கள் பெரும்பாலும் அரசாங்க வாகனங்களிலேயே அங்கு கொண்டுவரப்பட்டனர். மாலைநேரம் அரையிருளாகியதும் நிலைவரம் வன்முறைத் திருப்பமொன்றை எடுத்தது. கும்பல்கள் கனத்தையிலிருந்து பொரளை மற்றும் திம்பிரிகஸ்யாய பக்கமாக நகரத்தொடங்கின. தமிழர்களின் வீடுகளும், வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுத் தீவைக்கப்பட்டன. எசல பூரணை தினமான அன்று சந்திரன் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கையில் தீவைக்கப்பட்ட தமிழ் நிறுவனங்களிலிருந்து கிளம்பிய புகைமண்டலம் வானமெங்கும் பரவியது.
மறுநாள் ஜுலை 25 திங்கட்கிழமை தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள் காட்டுத்தீ போல் பரவின. மணிச்சுருக்கமாகக் கருத்துக்களைக் கூறுவதற்குப் பெயர்போன தோட்டத்தொழிலாளர்களின் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் போயா தினத்தைத் தொடர்ந்து வன்முறை மூண்டதை வர்ணிக்கையில் ‘சன்டே சில், மன்டே கில்” என்று கூறினார்.
ஊரடங்குச்சட்டத்தைப் பிரகடனப்படுத்துமாறு அன்றைய பொலிஸ்மாதிபர் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்தபோதிலும் திங்கட்கிழமை வரை ஊரடங்ககைப் பிறப்பிப்பத ஜெயவர்தன தாமதித்தார். ஊரடங்கு நடைமுறையிலிருப்பதாகக் கருதப்பட்ட போதும்கூட ஜுலை 27 புதன்கிழமை வரை மூன்று நாட்களாக வன்முறை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கொழும்பிற்குத் தனது விசேட தூதுவராக பி.வி.நரசிம்மாராவை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அனுப்பிய தினமான 28 ஜுலை வன்முறைகள் உச்சத்திற்குப் போயின.
ஜுலை 29 வெள்ளிக்கிழமை புலிகள் கொழும்பிற்கு வந்திருப்பதாகக் கிளம்பிய வதந்திகளால் கொழும்பும், புறநகர் பகுதிகளும் கிலியடைந்தன. அந்த விதிவசமான ‘கொட்டி தவச” புலிதினத்தில் புலிகள் எவரும் கொழும்பிற்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு வன்முறைக்கும்பல் தமிழர்களை மீண்டும் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். இறுதியா ஜுலை 30, 31 ஆம் திகதிகளில் வன்முறை படிப்படியாகத் தணியத்தொடங்கியது. நிலைவரத்தை வழமைக்குக் கொண்டுவருமாறு சர்வதேச அபிப்பிராயமும், நெருக்குதலும் ஜே.ஆர்.ஜெயவர்தனவை நிர்பந்தித்த நிலையில் ஆகஸ்ட் அளவில் வன்முறை முடிவிற்கு வந்தது.
தன்னியல்பான கிளர்ச்சியல்ல
ஜனாதிபதி ஜெயவர்தனவும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் கறுப்பு ஜுலை வன்செயல்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் இராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு சிங்களமக்கள் புறத்தூண்டுதலின்றி – தன்னியல்பாக வெளிக்காட்டிய எதிர்ப்பு என்று விளக்கமளிப்பதற்கு முயற்சித்தார்கள். ஜனாதிபதியினாலும், அவரது அரசாங்கத்தினாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்காக சிங்களமக்கள் கூட்டாகப் பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டார்கள். இது அரசாங்கத்தின் மீது வந்த குற்றச்சாட்டுக்களைத் திசைதிருப்புவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
1983 ஜுலை வன்செயல்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டவையாகும் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். பலபேர் தாங்களாகவே வன்முறையில் ஈடுபட்டிருக்கக்கூடும். ஆனால் வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்திய முக்கிய சூத்திரதாரிக்குழுக்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தன. வழமையான கும்பல் வன்முறைகளில் இடம்பெறுவதைப்போன்று இந்தக்குழுக்களுடன் ஏனையவர்கள் சேர்ந்துகொண்டார்கள். இந்தக்குழுக்கள் சட்டத்திலிருந்து முற்றுமுழுதாக விடுபாட்டுரிமை கொண்டவர்கள் போன்று நடந்துகொண்டனர். அதிகாரத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முக்கியமானவர்களின் பாதுகாப்பு அவர்களுக்கு இருந்தது.
கும்பல்களிடம் தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகள், வர்த்தக நிலையங்கள் பற்றிய பட்டியல் இருந்தன. அவற்றின் உரிமையாளர்கள் பற்றிய விபரங்களும் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. சிங்களவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் வாடகைக்கு இருந்த தமிழர்களினதும், கட்டடங்களைக் குத்தகைக்கு எடுத்து வியாபாரங்களில் ஈடுபட்ட தமிழர்களினதும் தளபாடங்களும் பொருட்களும் மாத்திரமே நிர்மூலம் செய்யப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அந்தக் கட்டடங்கள் எரிக்கப்படவோ, சேதப்படுத்தப்படவோ இல்லை.
பல வன்முறைக் கும்பல்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கத்தின் உறுப்பினர்கள் தலைமைதாங்கினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் பல மாநகரசபை, நகரசபை உறுப்பினர்களும் வன்முறைகளில் சம்பந்தப்பட்டார்கள். அமைச்சரவை அமைச்சர்கள் பலரின் முக்கிய ஆதரவாளர்களும், அடியாட்களும் இதில் சம்பந்தப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவேண்டாம் என்று ஐக்கிய Nதுசியக் கட்சியினரால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குண்டர் குழுக்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமான போக்குவரத்துச்சபை வாகனங்களில் அல்லது கூட்டுத்தாபனங்களின் வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இந்தக் கும்பல்களுக்கு ஒழுங்காக ஏற்பாடு செய்யப்பட்ட வகையில் உணவுப்பொதிகளும், மதுபானங்களும் கூட விநியோகிக்கப்பட்டன.
ஷெல்டன் நடராஜா மற்றும் ரேணுகா ஹேரத் ரணசிங்க போன்ற பண்பான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் சிலர் கண்டியிலும், நுவரெலியாவிலும் வன்முறைக் கும்பல்களைப் பொலிஸாரைக் கொண்டு கைதுசெய்த போது அவர்கள் சிரில் மத்தியூவினாலும், காமினி திஸாநாயக்கவினாலும் விடுதலை செய்யப்பட்டார்கள். வன்செயல்களில் சிரில் மத்தியூவினதும், அவரது அரசியல் விசுவாசிகளினதும் பங்கு எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உயர்பதவிகளை வகிக்கிறார்கள்.
திட்டமிட்ட அட்டூழியம்
1983 ஜுலையில் நடைபெற்றது ஒரு திட்டமிட்ட அட்டூழியமே தவிர, தன்னியல்பான கலவரமொன்றல்ல. அட்டூழியம் (Pழபசழஅ) என்பது குறிப்பிட்ட இன, மதக்குழுக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் அல்லது இராணுவத்தினால் தூண்டிவிடப்பட்டு கொலைகளையும், சூறையாடல்களையும் செய்கின்ற வன்முறைக்கலகம் அல்லது குண்டர்களின் தாக்குதலே அட்டூழியம் என்று வர்ணிக்கப்படுகிறது. ‘Pழபசழஅ’ என்பது அடிப்படையில் ஒரு ரஷ்ய சொல்லாகும். அதன் அர்த்தம் நிர்மூலம் செய்து, அழிவை ஏற்படுத்தி வன்முறையைத் துவம்சம் செய்தல் என்று ரஷ்யமொழியில் அர்த்தப்படும்.
1983 ஜுலை அட்டூழியத்தின் மிகவும் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்று ஜே.ஆர்.ஜெயவர்தனவும், சிரேஷ்ட அமைச்சர்களும் தொலைக்காட்சியில் வெளிப்படுத்திய மிகவும் வெறுக்கத்தக்க பிரதிபலிப்பாகும். வன்முறையினால் உயிர்களையும், உடைமைகளயும் இழந்து நிராதரவாக நின்ற தமிழர்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை.
ஜே.ஆர் மறைமுகமாக சிங்கள மக்களைக் குற்றஞ்சாட்டி வன்முறைகளை அவர்களது இயற்கையான வெளிப்பாடு என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதற்குப் பதிலாக நாட்டுப்பிரிவினையைத் தடை செய்வதற்கு சட்டமூலமொன்றை ஜனாதிகதி அறிவித்தார். அன்றைய இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் கலவரங்களின் பின்னால் அந்நிய மறைகரமொன்று பொறுப்பாக இருப்பதாகப் பேசினார். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில், சிங்களவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மோதல்களைத் தூண்டிவிடுவதற்கு சதித்திட்டமொன்று இருந்ததாகக் கூறினார். இந்தியத்துருப்புக்கள் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு வருவதற்கு 14 மணித்தியாலங்கள் தேவைப்படும்.
ஆனால் சிங்களவர்கள் விரும்பினால் தமிழர்களை 14 நிமிடங்களில் அழித்துவிடமுடியும் என்று காணி, மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸாநாயக்க எச்சரிக்கைவிடுத்தார். வன்முறை காரணமாக நாட்டுமக்கள் மீண்டும் அத்தியாவசியப்பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய ஏற்பட்டமைகுறித்து அமைச்சர் லலித் அத்துலத்முதலி கவலைப்பட்டார். நிதியமைச்சர் ரொனி டி மெல் சேன மற்றும் குத்திக பற்றி சரித்திரத்தில் விரிவுரை நிகழ்த்தினார். கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர் சிரில் மத்தியூ இந்தியப் பூச்சாண்டியைக் கிளப்பி 1983 ஜுலை வன்செயல்களுக்குப் பின்னால் அந்நிய சக்திகளின் சதியொன்று இருக்கிறது என்று சொன்னார்.
அவரது சகாவான கிராமியக் கைத்தொழில் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் அரசுக்கு நெருக்கமான உட்சக்திகளே வன்முறைகளுக்குப் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டினார். வன்முறைகளுக்கு சிங்கள மக்கள் மீது கூட்டுப்பொறுப்புச் சுமத்தி, அவர்கள்மீது சேறுபூச ஜனாதிபதி ஜெயவர்தன மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியிலும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவைச் சேர்ந்த போல் சீ கார்ட் போன்ற மதிப்பிற்குரிய அவதானிகள் உண்மைநிலையை அம்பலப்படுத்தினார்கள்.
சீ கார்ட் ‘இலங்கை: குவியும் தவறுகளின் ஒரு அனர்த்தம்” ;” SriLanka: A Mounting Tragedy of Errors) என்ற தலைப்பிலான அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
1983 ஜுலை தாக்குதல் சிங்கள மக்கள் மத்தியிலான இனவெறுப்பின் தன்னியல்பான ஒரு கிளர்ச்சியோ, சில வட்டாரங்களில் கூறப்பட்டதைப்போன்று தமிழ்ப்புலிகளினால் முதல்நாள் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாத் தாக்குதலில் 13 படைவீரர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு மக்கள் காண்பித்த எதிர்ப்புமல்ல என்பது தெளிவானது. கலவரங்கள் தொடங்கும்வரை படைவீரர்கள் பலியான அந்தச் சம்பவம் பத்திரிகைகளில் வெளியாககவும் இல்லை. அது முன்கூட்டியே தீட்டப்பட்ட ஒன்றிணைந்த திட்டமொன்றின் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட கொடுமைகளின் ஒரு தொடர்ச்சியாகும்.
-டி.பி.எஸ்.ஜெயராஜ்