பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது.
மத்தியிலும், அசாமிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி, அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுரங்கப்பாதை குறித்து ஜூலை 16-ம் தேதி விளம்பரப்படுத்தியது.
”பிரம்மபுத்திரா ஆற்றுக்கு அடியில் நான்கு வழிச் சாலை கொண்ட சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அசாமையும், அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் இந்த சாலையில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முழு இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்காக எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு இது,” என அசாம் பா.ஜ.க தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், பிரம்மபுத்திரா, அதன் கிளை ஆறுகள் மற்றும் வடிநிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் எழுபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 85 பேர் இறந்துள்ளனர் எனவும் அசாம் மாநில முதல்வர் சரபானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அசாமில் இதுவரை 25,382 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 58 பேர் இறந்துள்ளனர்.
ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை ஏன்?
சினாவின் திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்திரா, இந்தியா, பூட்டான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பாய்கிறது.
நீரோட்டத்தை வைத்துப் பார்த்தால், உலகின் பெரிய 10 ஆறுகளில் ஒன்றாக பிரம்மபுத்திரா உள்ளது. ஒரு நொடிக்கு 19,830 கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்த நதியில் பாய்கிறது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கு இந்த ஆறு மிக முக்கியமானது. 1228 முதல் 1826 வரை இப்பகுதியை ஆண்ட அஹோம் ராஜ்ஜியம், எதிரிகள் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க பிரம்மபுத்திரா ஆற்றில் ஒரு கப்பல் படையை வைத்திருந்தது.
1671ஆம் ஆண்டு நடந்த சாராய்காட் போரில், பேரரசர் ஔரங்கசீப்பின் தளபதி ராம் சிங் தலைமையிலான மிகப் பெரிய முகலாயப் படையை, அஹோம் கடற்படை வீழ்த்தியது. இதன் மூலம் இப்பகுதியை கைப்பற்ற நினைத்த மொகலாயர் திட்டமும் வீழ்த்தப்பட்டது.
முன்பு அஹோம் ராஜ்ஜியத்திற்குப் பாதுகாப்பு அரணாக இருந்த பிரம்மபுத்திரா ஆற்றினை தற்போது இந்திய ராணுவம் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாகக் கருதுகிறது.
இந்த நதியால் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்குச் சீன ராணுவம் சுலபமாக நுழையும் வாய்ப்புகள் உள்ளன. 1962 போரின் போது, இந்த நதி வழியாகத்தான் சீனா ஊடுருவியது.
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையிலான ஐந்து பாலங்களைச் சீன ராணுவம் தகர்த்தால், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டாகும் என இந்திய ராணுவம் அஞ்சுகிறது.
இந்திய அரசால் தற்போது திட்டமிடப்பட்டுள்ள 14.85 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை, பிரம்மபுத்திரா நதி தென்கரையில் உள்ள நுமலிகர் மற்றும் வடக்கு கரையில் கோஹ்பூரை இணைக்கிறது. இதன் மூலம் பொது மக்களும், ராணுவமும் சுலமபாமாக நதியைக் கடக்க முடியும்.
இந்தியா – சீனா எல்லை பதற்றம்
சமீபத்தில் இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டதற்கும், இந்த சுரங்கப்பாதைக்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே.
இருந்தாலும், சீனாவின் உள்கட்டமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில், எல்லையில் தனது உள்கட்டமைப்புகளை இந்தியா சமீப காலமாக மேம்படுத்தி வருகிறது.
ஆனால், கடந்த ஜூன் மாதம் இந்தியச் சீன ராணுவத்தினர் இடையே மோதல் நடந்தநிலையில், கடந்த மார்ச் மாதமே இந்த சுரங்கப்பாதை திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதியளித்துவிட்டது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது.
எல்லையில் சாலைகளை அமைக்க 2016-ல் இந்தியா 615 மில்லியன் டாலர்களைச் செலவிட்ட நிலையில், 2020-ல் 1.6 பில்லியின் டாலர்களுடன் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என ஆங்கில செய்தி தொலைக்காட்சியான வயான் தெரிவித்துள்ளது.
எதிர்வினை என்ன?
சுரங்கப்பாதை அமைப்பது குறித்து இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீனாவிடம் இருந்து எந்த கருத்துகளும் வரவில்லை.
இந்தியாவின் தேசிய ஊடகங்களும் இதுகுறித்து பெரிதாகச் செய்திகளை வெளியிடவில்லை. ஆனால், அசாம் ஊடகங்கள் இதுகுறித்து பல செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அசாமில் விரைவு நெடுஞ்சாலை, பிரம்மபுத்திரா நதி சுத்தப்படுத்துவது உட்பட ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்ட திட்டங்களே நிறைவேற்றப்படாத நிலையில், சுரங்க திட்டமும் மக்களின் கவனத்தைப் பெற வெளியிடப்பட்ட வெற்றுத்திட்டமே என அசாம் நாளிதழான அசோமியா பிரதிதின் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளத்தால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாத அரசு, சுரங்கப்பாதை கட்டப்போகிறதா என சிலர் சமூக ஊடகங்களில் கேலி செய்துள்ளனர்.
”சுரங்கப்பாதை தேவையில்லை. முதலில், ஆற்றங்கரைகளை வலுப்படுத்தி அசாம் மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுங்கள் “என்று ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.