மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தைக்காகத் விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வரப்படும் நெகிழ்ச்சி மிக்க நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த டோர்ஜே பால்மோ என்பவருக்குக் கடந்த ஜூன் 16-ம் தேதி லே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயன்றபோது, குழந்தையால் தாய்ப்பால் குடிக்க முடியவில்லை. இதைக் கண்டு குழந்தையின் தாய் டோர்ஜே அதிர்ச்சியடைந்தார்.

’’நான் அப்போது மைசூரில் இருந்தேன். தாய்ப்பால் குடிக்காததால் குழந்தையை சண்டிகர் அல்லது டெல்லியில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

எனது மனைவியின் சகோதரர் ஜூன் 18-ம் தேதி காலை குழந்தையை விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தார்’’ என்கிறார் குழந்தையின் தந்தை ஜிக்மெட் வாங்டஸ்.

மைசூரில் வேலை செய்து வந்த ஜிக்மெட், அதே நாளில் கர்நாடகாவிலிருந்து டெல்லி வந்து சேர்ந்தார்.

’’ நான் எனது குழந்தையை அதிக நேரம் கையில் வைத்திருக்கவே அஞ்சினேன். ஏனெனில் கர்நாடகாவிலிருந்து வந்த எனக்கு கொரோனா அச்சம் இருந்தது’’ என்கிறார் அவர்.

டெல்லிக்கு அழைத்துவரப்பட்ட குழந்தை மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

குழந்தையின் உணவுக்குழாயில் பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ’’esophageal atresia எனும் இந்த பாதிப்பு ஆயிரம் குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு ஏற்படும்’’ என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply