உயர் பொலிஸ் சி.ஐ.டி. குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்துக்கு இன்று காலை திடீரெனச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தலைமையிலான சி.ஐ.டி. குழுவினரே இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் முதலமைச்சரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தொடர்பாகவே இவர்கள் விசாரணையை அமைந்திருந்தது. கேள்வி – பதில் வடிவில் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட அறிக்கை சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது. இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அந்த அமைந்திருப்பதாகவும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்கினேஸ்வரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையானவையா இல்லையா என்பதை உறுதிப்படுத்துமாறு விசாரணைக்காக வந்திருந்த பொலிஸ் அதிகாரிக்கு உயர் மட்டம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக விக்கினேஸ்வரனிடம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி கேள்வி எழுப்பினார்.

உடனடியாகவே இது தொடர்பான ஆவணத்தை கையளித்த விக்கினேஸ்வரன், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விக்கினேஸ்வரன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலிடத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, தேவை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளார்.

Share.
Leave A Reply