பெண்களை வேதனைப்படுத்தும் வகையில் தேர்தல் மேடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார் எனக்கூறி அவருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் பங்கேற்று, பிரதமர் மஹிந்தவின் கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தி, பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.
பெண்களின் மகப்பேற்று சுதந்திரம் என்பது ஒவ்வொரு கணவன் – மனைவியினதும் தனிப்பட்ட விடயமாகும். இவைகள் அரசியல் மேடையில் பேசப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளதாவது, அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாச ஆகியோரை விசனப்படுத்தும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாறான கருத்தை வெளியிட்டு முழுப் பெண் இனத்தையும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டு மக்களுக்கு அவர் வெளிப்படுத்தும் முன்னுராதணம் என்ன ?
பிரதமர் மஹிந்தவினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து, ஒரு பெண் அல்லது தம்பதியர் மீது மாத்திரம் கூறப்பட்டதாக நாம் கருத முடியாது. குழந்தை பாக்கியம் அற்ற அனைத்து பெண்கள் மீதும் முன்வைக்கப்பட்ட விமர்சனமாகவே இதனை பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.