திருவண்ணாமலை அருகே, இறந்த மாமியார் தன்னை அழைப்பதாக கூறிவந்த பெண், தனது 6 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன், விவசாயி. இவரது மனைவி சுகன்யா (வயது 30). இவர்களுக்கு 6 வயதில் நிவேதா என்ற மகள் உண்டு. சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். சுகன்யாவின் மாமியார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அன்று முதல் சுகன்யா தனது மாமியார் தன்னை அழைப்பதாக புலம்பி வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தனது மாமியார் நினைவாக இறைச்சி படைப்பதற்கு ஏற்பாடு செய்து உள்ளார். படையல் போடுவதற்கு சுகன்யா தனது கணவன் கலையரசனிடம் வாழை இலை அறுத்து வரும்படிகூறி வயலுக்கு அனுப்பி உள்ளார்.

இதற்கிடையில் சுகன்யா சாமி வந்து ஆடியதாக தெரிகிறது. அப்போது சுகன்யா வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தனது மகள் நிவேதாவின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் சிறுமி நிவேதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தாள். மேலும் சுகன்யா தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்து கிடந்தார். வீடு திரும்பி வந்த கலையரசன் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சுகன்யா மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த டாக்டர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுகன்யாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply