இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மத்துகமே லசந்த சந்தன பெரேரா என அழைக்கப்படும் அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதா, தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், கோவையில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இதுகுறித்து தமிழக காவல்துறையினர் உறுதி செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையில் தேடப்பட்டுவரும் குற்றவாளி கோவையில் உயிரிழந்துள்ளதைக் கோவை மாநகர காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளனர்.

என்ன நடந்தது?

இதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதேநாள், உயிரிழந்த நபரின் உடலை சிவகாமி மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரைக்கு எடுத்துச்சென்று, தகனம் செய்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் ஆதார் அட்டையைக் கோவை மாநகரக் காவல்துறையினர் ஆய்வு செய்ததில், அதில் உள்ள பெயர் போலியானது என தெரியவந்துள்ளது. அத்தோடு, உயிரிழந்தவர் இலங்கையில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவரும் குற்றவாளி மதுமா சந்தனா லசந்தா பெரேரா என்கிற அங்கட லக்கா என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் அங்கட லக்காவோடு கொழும்புவைச் சேர்ந்த 27 வயது பெண் ஆமானி தான்ஜி என்பவரும் வசித்து வந்தது கண்டறியப்பட்டது.

புலன் விசாரணை

இவ்வழக்கின் புலன்விசாரனையில், மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி மற்றும் அவருக்கு பழக்கமுள்ள ஈரோட்டைச் சேர்ந்த தியானேஷ்வரன் ஆகியோர் அங்கட லக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோரின் பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மாற்றி மறைத்து ஆதார் அட்டை எடுக்கப் போலியான ஆவணங்களை அளித்ததும், போலி ஆதார் அட்டையை உண்மை என்று பயன்படுத்தி ஏமாற்ற உதவி செய்து வந்துள்ளதும் உறுதியாகியது.

இதனையடுத்து, போலி ஆவணங்கள் தயார் செய்து பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்ததற்காகச் சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி ஆகியோர் கோவையிலும், தியானேஷ்வரன் ஈரோட்டில் வைத்தும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அமானி தான்ஜி உடல்நலக்குறைவு காரணமாக தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த அங்கட லக்கா?

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகம், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, பலவந்த செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் அங்கொட லொக்கா தொடர்புப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷின் நெருங்கிய சகாவாக அங்கொட லொக்கா செயற்பட்டு வந்துள்ளார்.

அங்கொட லொக்கா உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் 2000ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலேயே அதிகளவிலான குற்றச் செயல்களை முன்னெடுக்க ஆரம்பித்திருந்ததாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட செயற்பட்ட அங்கொட லொக்கா உள்ளிட்ட சிலர் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியிருந்ததாகத் தகவல்கள் பதிவாகியுள்ளன.

போலீஸாரின் தகவல்களின் பிரகாரம், அங்கொட லொக்கா உள்ளிட்ட தரப்பினர் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் இந்தியாவிற்கு முதலில் சென்று அங்கிருந்து துபாய் நோக்கி பயணித்துள்ளனர்.

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை அடுத்தே, 2014ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் குறித்த நிழலுலக கோஷ்டி உறுப்பினர்கள் வெளிநாடுகளை நோக்கி சென்றிருந்தனர்.

வெளிநாடுகளில் இருந்தவாறே இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், ஆட்கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை அங்கொட லொக்கா உள்ளிட்ட தரப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

இதேவேளை, அங்கொட லொக்காவுடன் நெருங்கிப் பழகிய மாகந்துர மதுஷ், 2019ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

2019ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் வைத்து மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், பிரபல நிழலுலக தலைவராக அங்கொட லொக்காவை கைது செய்ய இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த

நிலையிலேயே, அவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளதாகக் கடந்த ஜுலை மாத இறுதி நாட்களில் செய்திகளில் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் கடந்த 23ஆம் தேதி போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தியாவில் அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply