இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றிருந்தன.

நாடு முழுவதும் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயாதீன குழுக்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம், ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

196 மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளதுடன், எஞ்சிய 29 வேட்பாளர்கள் தேசிய பட்டியலில் ஊடாக தெரிவாகவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த நாடாளுமன்றம் மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

எனினும், இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த பின்னணியில், தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட தேர்தல், இன்றைய தினம் முழுமையாக சுகாதார வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்கள் முழுமையாக கிருமி ஒழிப்பு செய்யப்பட்டதுடன், வாக்களிப்பு நடவடிக்கைகளும் சுகாதார வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.

நாடு முழுவதும் சுமார் 60 வீதத்திற்கு அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

தேர்தல்கள் ஆணையாளர் வாக்களிப்பு

2011ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் முதல் முறையாக இந்த முறையே வாக்களித்ததாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் காணப்படுகின்ற போதிலும், வாக்களிப்பு நிலையங்களின் கொரோனா அச்சுறுத்தல் கிடையாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தான் இந்த முறை வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தனக்கு 65 வயதாகின்ற போதிலும், வாக்களிப்பு நிலையங்கள் முழுமையாக பாதுகாப்பாகவுள்ளது என்பதை உறுதிப்படுத்தவே தான் வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.

வாக்களிப்பு நிலையங்களின் ஊடான கொரோனா எந்தவிதத்திலும் பரவாது என மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள்

நடைபெற்று நிறைவடைந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு முன்னர் தேர்தல் நடைபெற்ற தினத்திலேயே வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறுவது வழக்கமான விடயம் என்ற போதிலும், இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறுதினம் வாக்கெண்ணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே நாளைய காலை வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் வேளையில் முடிவுகளை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய குறிப்பிட்டுள்ளார்.

பாரதூரமான வன்முறைகள் அற்ற தேர்தல்

இலங்கையில் பாரதூரமான வன்முறைகள் அற்ற தேர்தலான இந்த தேர்தல் நடந்து நிறைவடைந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித படுகொலை, தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட பாரதூரமான வன்முறைகள் எதுவும் இந்த முறை தேர்தலில் பதிவாகவில்லை என கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், சிறு அளவிலான வன்முறைகள் சம்பவங்கள் சில இம்முறை பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், தேர்தல் வாக்களிப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், வாக்காளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிய ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply