தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டுவாச்சாவடி சேர்த்த விவசாயி மாரியப்பன் என்பவரின் மகன் வீரமணி(வயது 22). இவர் கந்தரக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார்.

வீரமணியின் தந்தை தினந்தோறும் ஆடு மேய்த்து வந்து கொண்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஆடு மேய்க்கச் செல்லவில்லை. இதனையடுத்து அவரது மகன் வீரமணி, அன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

அப்போது மந்தையிலிருந்த ஆடு ஒன்று தவறி கல்லணை கால்வாய் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து விழுந்த ஆட்டை காப்பாற்ற நீச்சல் தெரியாமலேயே ஆற்றுக்குள் வீரமணி இறங்கியுள்ளார். ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் உள்ள சுழலில் சிக்கிக்கொண்டார். வீரமணி சுழலில் மாட்டிக்கொண்டதைக் கண்ட அருகே இருந்தவர்கள் வருவதற்குள் நீரின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு அவரை மீட்க முயற்சித்தனர். தொடர்ந்து தேடியதில் மறுநாள் காலையில் தான் வீரமணியை உயிரிழந்த நிலையில் மீட்டனர். பின்னர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறாய்விற்காக அவரது உடலை அனுப்பிவைத்தனர். ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply