இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையில் 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் நிலவிய சிவில் யுத்த நிலைமையை தணிப்பதற்காக நிலைபேறான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இந்திய – இலங்கை உடன்படிக்கையின் நோக்கமாக அமைந்திருந்தது.
அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையிலும், ஏனைய தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான தேவைகளை அடிப்படையாகக் கொண்டே 13ஆவது திருத்தம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த திருத்தத்தின் பிரகாரம், இலங்கை 9 மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா என 9 மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாகாணங்களுக்கும் மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
9 மாகாணங்கள் இருந்த போதிலும், அந்த சந்தர்ப்பத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட மாகாணங்களாக அறிவிக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த மாகாண சபைகள் இரண்டும் ஒன்றாக இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தன.
மாகாண சபைக்குள் போலீஸ், காணி அதிகாரங்கள் உள்ளடங்கியுள்ள போதிலும், அதனை வழங்காதிருப்பதற்கு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை காண முடிந்தது.
இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
மாகாண சபைகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களும் வழங்கப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
தான் முன்பிருந்தே 13ஆவது திருத்தத்துக்கு எதிரானவன் என கூறிய அவர், தனக்கே அதற்குரிய அமைச்சு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது திருத்தத்தின் கீழ், காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இந்திய அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில், போலீஸ் திணைக்களம் பல துண்டுகளாக பிளவுப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போலீஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கும் பட்சத்தில், ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு போலீஸ் மாஅதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.