தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை நடைபெறும் போது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழரசுக் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு ‘ரெலோ’ தயாராகிவருவதாகத் தெரிகின்றது.
திருமலையில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற ‘ரெலோ’வின் மத்திய குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ரெலோவின் முக்கியஸ்த்தர் ஒருவர் இன்று காலை தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த கலையரசன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் தமிழரசுக் கட்சியால் இந்த நியமனம் வழங்கப்பட்டது. இது தொடர்பில் பங்காளிக் கட்சிகள் சீற்றடைந்துள்ளன.
இந்த நிலையில், இரண்டரை அல்லது மூன்று வருடங்களுக்கு இந்த தேசியப்பட்டியல் எம்.பி. பதவி பங்காளிக் கட்சிகளான தமக்கு அல்லது ‘புளொட்’டுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது ‘ரெலோ’ முன்வைக்கப்போகும் முதலாவது கோரிக்கையாகும்.
கூட்டமைப்பில் வெற்றிபெற்ற ஒன்பது எம்.பி.க்களில் 3 பேர் ‘ரெலோ’வையும், ஒருவர் ‘புளொட்’டையும் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் இந்தக் கோரிக்கையை தாம் முன்வைக்க இருப்பதாக ‘ரெலோ’ பிரமுகர் தெரிவித்தார்.
இரண்டாவது கோரிக்கையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை தமிழரசுக் கட்சி எடுத்துக்கொண்டால், பேச்சாளர் பதவி தமக்கு அல்லது புளொட்டுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைக்கவுள்ளார்கள்.
தலைமைப் பதவி தமக்குத் தரப்பட்டால், பேச்சாளர் பதவியை தமிழரசுக் கட்சி வைத்துக்கொள்ளலாம் எனவும் தமது மத்திய குழு தீர்மானித்திருப்பதாகவும் தினக்குரலுக்குத் தகவல் தந்த ரெலோ பிரமுகர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நாளை மறுதினம் வியாழக்கிழமை கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் 10 உறுப்பினர்களும் முதல் தடவையாகக் கூடவுள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர், பேச்சாளர் போன்ற பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறும்.
அந்த வேளையில் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு ‘ரெலோ’ திட்டமிட்டுள்ளது.