உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமினதும் அவரது சகாக்களினதும் பாதுகாப்பான புகலிடமாக இந்தியாவே விளங்கியது என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரானும் அவரது சகாக்களும் அவரது சகோதரர்களும் இந்தியாவுக்கு பல தடைவ சென்றுள்ளனர் அங்கு தங்கியிருந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் நான்காம் திகதி வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்த தகவலில் ஜஹ்ரான் குழுவினர் தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர் என தெரிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கான திறனுக்கும் தாக்குதலுக்கு தயாரான நிலைக்கும் இடையில் பாரிய வித்தியாசமுள்ளது என குறிப்பிட்டுள்ள முன்னாள் இயக்குநர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஜஹ்ரான் குழுவினரின் தாக்குதலுக்கான திறன் குறித்து மாத்திரம் குறிப்பிட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகம் நிச்சயமான ஒரு இலக்கு என குறிப்பிட்டிருந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு நாட்டின் பல கிறிஸ்தவ தேவலாயங்கள் இலகுவான இலக்குகள் எனவும் குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமான தேவாலயங்கள் தாக்கப்படலாம் என மாத்திரம் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது என குறிப்பிட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன நாட்டில் 100க்கும் அதிகமான முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதால் நாங்கள் இந்த தகவலை ஏனைய அதிகாரிகளுக்கு அனுப்பாமல் துல்லியமான தகவல்களை பெற முயன்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.