காங்கிரஸ் கட்சிக்கு ‘முழுநேரமான’, ‘வெளியில் நன்கு அறியப்பட்ட’, ‘களப் பணியாற்றும்’ தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்திற்கு பின், அவர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சசி தரூர், கபில் சிபல், குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தனர்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி நிர்வகிக்கப்படும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டுமென்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பிரதமர் நரேந்திர மோதிக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு குறித்து அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்னர்.

சுதந்திரத்திற்கு பிறகு சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக இந்தியா கண்டுள்ள மிகவும் மோசமான நிலை இப்போது நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார்.
மூத்த தலைவர்கள் கடிதம் எதிரொலி – சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகல்?

அதன்பின்பு அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும், அவர் தேர்வாகி ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இன்னும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு யார் வருவார் என்பது குறித்து தெளிவான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தனது உடல்நிலை காரணமாக தாம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்ய மூத்த தலைவர்களிடம் அவர் கூறி இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று கட்சியின் ஒரு சாரார் விரும்பினாலும் ராகுல் மற்றும் அவரது குழுவினர் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்ற குரலும் கட்சிக்குள் ஒலிக்கிறது.

Share.
Leave A Reply