பெரு நாட்டில் ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட கேளிக்கை விடுதியை போலீசார் பார்வையிட வந்தபோது அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓட்டினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

பெரு நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் இரவு நேர விடுதிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் வேகமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரில் லிமாவில் உள்ள லாஸ் ஆலிவோஸ் மாவட்டத்தில் தாமஸ் ரெஸ்டோபர் என்ற இரவு விடுதியில் தடையை மீறி செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விடுதி இருந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை உணர்ந்த விடுதியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல வேண்டும் என எண்ணி அங்கும் இங்கும் ஓடினர்.

120-க்கும் அதிகமானவர்கள் அந்த இரவு விடுதியில் இருந்த ஒரே ஒரு வாசல் வழியாக வெளியே செல்ல முற்பட்டனர். இதனால் வாசல் பகுதியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது போலீசாரும் அங்கிருந்தவர்களை விரட்டிக்கொண்டிருந்ததால் பெரிய அளவில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இதில் பலருக்கு மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால் இந்த கூட்டநெரிசலில் சிக்கி 12 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையில் இந்த இரவு விடுதியில் இருந்து பலர் தப்பிச்சென்ற நிலையில் 23 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேரில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறி இரவு கேளிக்கை விடுதி நடத்தியதாக விடுதியின் உரிமையாளர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply