வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவனின் இறுதி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதன்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாள் வெட்டுக் குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவுடிகளிடம் இருக்கும் வாள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.