பெலாரஸில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ தானே துப்பாக்கி ஏந்திய நிலையில் காணப்பட்ட வீடியோவொன்று வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி லூக்காஷென்கோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் துப்பாக்கியுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
65 வயதான அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ 1994 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் நீடிக்கிறார். கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அவர் 6 ஆவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவானார்.
எனினும், இந்த தேர்தல் பெறுபேற்றை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் மறுத்து வருகின்றனர். ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் மின்ஸ்கிலுள்ள தனது மாளிகைக்கு நேற்றுமுன்தினம் அவர் ஹெலிகொப்டரில் வந்திறங்கியபோது, குண்டுதுளைக்காத கவச உடை அணிந்திருந்ததுடன், கையில் இயந்திரத் துப்பாக்கியொன்றை ஏந்தியிருந்தார்.