கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிச்சைக்காரரின்  சொகுசு மாடி வீட்டில் தோட்டத்தில்  இரு கார்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டின் மேல்மாடியை வாடகைக்கு கொடுப்பதன் மூலம்  மாத வருமானமாக 30 ஆயிரம் ரூபாவும் பிச்சை எடுப்பதில் தினசரி வருமானமாக 5 ஆயிரம் ரூபாவும் கிடைத்துள்ளது.

கொழும்பு – கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில்  ரூபா 20 ஆயிரம் மதிப்புள்ள பழங்களுடன் தள்ளு வண்டியை திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சி.சி.டி.வி கமரா வீடியோவை அவதானித்த பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (23) குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சி.சி.டி.வி கமரா வீடியோவில் வண்டியைத் தள்ளுவதும், பின்னர் தேவாலயத்தின் அருகே பிச்சை எடுப்பதில் வழக்கமாக ஈடுபடுவதும் பதிவாகியுள்ளதை பொலிசார்  கண்டறிந்துள்ளனர்.

குறித்த பிச்சைக்காரர் வண்டியை தனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு பிறிதொரு நபருக்கு ரூபா 5,000 கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கடலோர பொலிஸ் குற்றப்புலனாய்வுத் தலைமை அதிகாரி ஜந்த குமாரா தலைமையிலான பொலிஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது.

Share.
Leave A Reply