இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு சிறுவர் இலங்கையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறுவன் ஒருவனுக்கு போதைப்பொருளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 42 வயது நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவன் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் (24) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடன அரங்கேற்ற நிகழ்வு பயிற்சியின்போது, ஒரு நாள் இரவு சிறுவனை ஆசிரியர் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பயிற்சியின் பின்னர் இரவு உணவு வாங்கும் போர்வையில் இளைஞனை கவர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர், சிறுவனுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை வழங்கி பின்னர் அவர் மயக்கத்தில் இருந்தபோது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதிதா விதாரணவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் செய்த காரியம்

ஆசிரியர் வெளிநாட்டிலும் ஒரு சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த சம்பவத்திற்கு முன்பே, நடன ஆசிரியர் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் கொண்ட குழுவை ஒரு வெளிநாட்டு நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களில் ஒரு சிறுவனை சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் குறித்த குழு வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நடன ஆசிரியர் இலங்கைக்கு திரும்பியுள்ளார். சிறுவர்கள் நாடு திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு திரும்பியபோது, அவர்களின் பயணச்சீட்டுகள் இரத்து செய்யப்பட்டு அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்,

அதன் பின்னர் சிறுவர்களில் ஒருவர் தூதரகத்துடன் பேசியுள்ளார். அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்து சிறுவர்களை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று, தேவையான நலன்புரி வசதிகளை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் சந்தேகத்திற்கிடமான நடன ஆசிரியருடன் தொடர்புகொண்டு விமான பயணச்சீட்டுகளை மீளப்பெற்று சிறுவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.”

சந்தேகத்திற்குரிய நடன ஆசிரியர் முன்னதாக இரண்டு சிறுவர்களைப் பயன்படுத்தி இணையம் மூலம் ஒரு சிறுமியை துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபதிரண, பிரதித் தலைவர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அலஹபெருமா, பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply