உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21  ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம்  நேற்று சுமார் 10 மணி நேரம் வரையில் நீண வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பொலன்னருவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைதிரிபால சிறிசேனவின் கொழும்பு, பெஜட் வீதி இல்லத்துக்கு நேற்று முற்பகல் 9.00 மணியளவில் செனற விசாரணையாளர்கள், இரவு 7 மணி வரை அங்கு வாக்கு மூலம் பதிவு செய்திருந்தனர்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவின் பணிப்பாளராக செயற்படும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேவின் தலைமையில்  சென்றிருந்த விசாரணைக் குழுவே இரவு 7.00 மணியளவில் பெஜட் வீதி வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.

முன்னதாக நேற்றைய தினம் வாக்கு மூலம் அளிக்க ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு கடந்த 21 ஆம் திகதி அறிவித்தல் அனுப்பட்டுள்ள நிலையில், தன்னால் அந்த பொலிஸ் பிரிவில் ஆஜராக முடியாது என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைதிரிபால சிறிசேன அறிவித்திருந்தார். அதன்படி  தனது வாக்கு மூலம் அவசியமாயின் கொழும்பிலுள்ள தனது வீட்டுக்கு வந்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் ஆணைக் குழுவுக்கு அறிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே நேற்றைய தினம் முற்பகல் 9.00 மணிக்கு பெஜட் வீதி வீட்டுக்கு பொலிஸ் குழுவினர் வாக்கு மூலம் பெற சென்றனர். அவர்கள்  முதலில் சுமார் 4 மணி நேரம் வாக்கு மூலம்பதிவு செய்த பின்னர் பகல் போசனத்துக்காக இடைவேளை வழங்கியிருந்த  நிலையில், பின்னர் மீளவும் இரவு 7.00 மணி வரை தமது பணிக்ளை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply