பிரேசிலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை துரிதமுடன் செயல்பட்டு காப்பாற்றிய 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இடாபெருனா பகுதியில் வசித்து வரும் 3 வயது சிறுவன் ஆர்தர் டி ஒலிவியரா. சிறிய நீச்சல் குளம் ஒன்றில் பொம்மையை தூக்கி போட்டு அதனை தள்ளி விட்டு விளையாடி கொண்டிருந்துள்ளான்.
அவனுடன் சேர்ந்து விளையாட வந்த 3 வயதுடைய ஹென்ரிக் என்ற அவனது நண்பன் ஆர்தருடன் சேர்ந்து தண்ணீரை தள்ளி விட்டுள்ளான். இதில், திடீரென ஹென்ரிக் நீச்சல் குளத்திற்குள் தவறி விழுந்து விட்டான். இதனால் என்ன செய்வது என்று தெரியாத ஆர்தர் உதவிக்காக அக்கம் பக்கம் பார்த்துள்ளான்.
குளத்திற்குள் விழுந்த சிறுவன் ஹென்ரிக் தலையை மேலே கொண்டு வர முயற்சித்துள்ளான். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், ஆர்தர் துணிந்து குளத்தில் கையை நீட்டி துரிதமுடன் செயல்பட்டு, நண்பனை இறுக பிடித்து மேலே தூக்கி வெளியே கொண்டு வந்துள்ளான்.
இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ளன. அதனை ஆர்தரின் தாயார் பொலியானா கன்சோல் டி ஒலிவியரா பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், 30 வினாடி கவனமின்மையால், தனது தாயாரிடம் கூறாமல் சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.
ஆர்தரின் நண்பன் உயிர் பிழைத்ததற்கு எனது மனம் நன்றி சொல்கிறது. என்னுடைய மகனின் துணிச்சல், பாசம் மற்றும் உடனடியாக செயல்பட்டதற்காக நான் பெருமை கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
அவனது துணிச்சலான செயலை அறிந்த உள்ளூர் போலீசார், ஆர்தரை ஆச்சரியப்படுத்தும் வகையில் கூடை நிறைய இனிப்புகள் மற்றும் புது கூடைப்பந்து ஒன்றையும் பரிசாக அளித்து விட்டு சென்றனர். பின்னர் சான்றிதழ் மற்றும் கோப்பை ஒன்றும் சிறுவன் ஆர்தருக்கு வழங்கப்பட்டது. நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை துணிச்சலுடன் காப்பாற்றியதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் ஆர்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன