பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, வடக்கின் முன்னைய நாள்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த  லலித் ஜயசிங்கவை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் இல்லை என அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு  தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைமைப்பாட்டைநாளை மறுதினம் 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஆணைக் குழ்வுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியான சுவிஸ் குமார் எனும் மகாலிங்கம் சிவகுமார்  தப்பி கொழும்புக்கு செல்ல  உதவி புரிந்ததாக , அப்போதைய வடக்கு  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க  மீது குற்றம் சுமத்தப்ப்ட்டது.

அது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு,  தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  எனினும் தொடர்ந்தும் அவர்  பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியாகவே உள்ளார்.

இந் நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லலித் ஜயசிங்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு  செய்து, தனது சட்டத்தரணியான மகேஷ் கொட்டுவெல்ல ஊடாக  நேற்று அறிவித்தார்.

அத்துடன்  தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பணிப்புரையை விடுக்குமாறும் அவர் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

‘ எனது சேவை பெறுநர் ஓய்வு பெறுவதற்கு 11 மாதங்களே எஞ்சியுள்ளது.  இந் நிலையில் அவரை சேவையில் மீளவும் இணைத்துக்கொள்ளுமாறு தேசிய பொலிஸ் ஆணைக் குழ்வுக்கு  இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்கவும்.’ என சட்டத்தரணி மகேஷ் கொட்டுவெல்ல  ஆணைக் குழுவைக் கோரினார்.

இந் நிலையிலேயே இந்த கோரிக்கை தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அறிவிப்பதாக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை   ஆராய்ந்து அறிவிப்பதாக,   சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய  ஆணைக் குழுவுக்கு அறிவித்த நிலையிலேயே, அதனை நாளை மறுநாள் திங்கட் கிழமை ஆணைக் குழுவுக்கு அறிவிக்குமாறு ஆணைக் குழு அறிவித்தது.

‘ வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நியோமல் ரங்கஜீவவை, பொலிஸ் பரிசோதகராக  மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள முடியுமாயின், லலித்  ஜயசிங்க தொடர்பிலும் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல் என்ன ?’ என இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்  ஓய்வுபெற்ற நீதியர்சர் உபாலி அபேரத்ன கேள்வி எழுப்பியமையும் இங்கு சுட்டிக்காட்டடத்தது.

இதேவேளை, பொலிஸ் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவை எதிர்வரும் 31 ஆம் திகதி, பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அரசியல் பழி வாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க முன்வைத்த முறைப்பாடு  ஒன்று தொடர்பில்,  பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் கே.கே.கே குணசேகர இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் சாட்சியம் பதிவு செய்யவே அஜித் ரோஹணவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதிவாதியின் சாட்சியாக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply