இலங்கையில் காணாமல்போனோரின் உறவினர்களும் நண்பர்களும் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
அவர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சாட்சியங்கள் மற்றும் இவ்விவகாரத்தைச் சட்டரீதியாக அணுகுவோர் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் வலியுறுத்தியிருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதி நிதி ஹனா சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான எமது முழுமையான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்.
இவ்வாறானதொரு நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர்கள், தமது பணியைத் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
மேலும் காணாமல்போனோரின் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தொடர்ந்தும் முன்னணியில் நின்று செயற்படும் பெண்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள் என்பதுடன், அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சாட்சியங்கள் மற்றும் இவ்விவகாரத்தைச் சட்டரீதியாக அணுகுவோர் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பினை உறுதிசெய்வதும் அவசியமாகும்.
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறது:
‘யார் யாருடைய கதி குறித்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றதோ, அவர்கள் மீதான அவதானம் செலுத்தப்பட வேண்டிய தினமாக சர்வதேச காணாமல்போனோர் தினம் இருக்கின்றது.
இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களைத் தொலைத்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருப்போருக்கு இந்த நாளில் எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.