சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோரின் நாடாளுமன்ற உரைகள் சிங்கள இனவாதிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
குறிப்பாக விக்னேஸ்வரனின் தோற்றத்துக்கு அந்த இடத்தில் ஓர் பண்பாட்டு பொலிவும் அரசியல் அழுத்தமும் இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் அவருடைய திருநீறையும் சந்தனப் பொட்டையும் விமர்சிப்பதுண்டு. அந்த மதச் சின்னங்கள் அவரை கிறிஸ்தவ வாக்காளர்களிடம் இருந்து விலக்கி வைக்கின்றன என்று ஒரு அவதானிப்பு உண்டு.
அவரை இந்துத்துவ சாய்வு உடையவராகக் காட்ட விரும்பும் சக்திகளுக்கு அவை வாய்ப்பாக அமைவதும் உண்டு. தவிர அவருடைய மடிப்புக் கலையாத வேட்டியும் சட்டையும் சால்வையும் அவருக்கு ஒரு மேட்டுக்குடி பிரமுகரின் தோற்றத்தையே வழங்கின.
ஆனால், விமர்சிக்கப்பட்ட இந்த அத்தனை அம்சங்களும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் அவருடைய முதல் உரையின் பின்னணியில் வேறுவிதமான ஒரு அபிப்பிராய திரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமையான வேட்டியும் நஷனலும் அணிந்து வந்திருந்தார்கள். சிலர் கோட்டுச் சூட்டுடன் வந்திருந்தார்கள்.
நமது தமிழ் சட்டத்தரணிகள் சிலரும் அப்படித்தான். ராஜபக்ஷக்கள் பெரும்பாலும் குரக்கன் நிறச் சால்வையோடு வந்திருந்தார்கள். பிள்ளையான் கூட தமிழுக்கும் சிங்களத்துக்கும் இடையிலான ஒரு அதிபரின் தோற்றத்தோடு வந்திருந்தார். கஜேந்திரகுமாரும் தமிழ் பண்பாட்டு உடுப்போடு வரவில்லை.
ஆனால், விக்னேஸ்வரன் ஒரு பண்பாட்டுத் தோற்றத்தோடு வந்திருந்தார். ஒரு தமிழ் வயோதிபர், ஒரு மங்கல நிகழ்வுக்கு போவது போன்ற ஒரு தோற்றத்தோடு அவர் நாடாளுமன்றத்தில் தோற்றமளித்தார். பெரும்பாலான சிங்கள உறப்பினர்களின் பண்பாட்டு உடுப்புக்களின் மத்தியில் அவருடைய தோற்றம் தனித்துவமாக துருத்திக்கொண்டு தெரிந்தது.
உரையின் தொடக்கத்தில் தமிழில் வணக்கம் சொன்னார். அதற்கு விளக்கமும் சொன்னார். உரையை முடிக்கும் பொழுது சிங்களத்தில் ஒரு முது மொழியைச் சொன்னார். அந்த முது மொழியின் விளக்கம் “நீ எங்களுக்கு தருபவை தான் உனக்கு திருப்பிக் கிடைக்கும் அதாவது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதே.
மொத்தத்தில் விக்னேஸ்வரன் ஒரு பண்பாட்டுத் தோற்றத்தோடு இனமொழி அடையாளத்தோடு நாடாளுமன்றத்தில் தோன்றி ஆற்றி வரும் உரைகள் ஆழமானவை, காரமானவை, அதேநேரம் செறிவானவை.
கஜேந்திரகுமாரின் உரைகளும் அப்படித்தான். அவர் பண்பாட்டுத் தோற்றத்தோடு வரவில்லை. தமிழில் உரையைத் தொடங்கவில்லை. ஆனால் நிராகரிக்கப்பட முடியாத தர்க்கத்தோடு வந்திருந்தார். சிங்கள இனவாதிகளால் திரும்பப் பதில் கூறமுடியாத ஆழமான கூர்மையான தர்க்கங்கள் அவை.
அவருடைய முதல் உரையும் பின்னர் நிகழ்த்திய உரைகளும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை ஆதரிக்கும் புத்திஜீவிகளாலும் லிபரல் ஜனநாயக வாதிகளாலும் நிராகரிக்கப்பட முடியாத தர்க்கங்களைக் கொண்டிருந்தன. நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் அவர் இறைமை தொடர்பாக ஆழமான பொருள் பொதிந்த ஒரு வகுப்பை அவர்களுக்கு எடுத்தார். மக்கள் ஆணை தொடர்பாகவும் ஒரு விளக்கத்தை வழங்கினார்.
மொத்தத்தில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இருவரும் ஆழமாகவும் அதே சமயம் அமைதியாகவும் தமது கருத்தை இனவாதிகளின் முகத்தில் அறைந்தாற் போல சொல்லி வருகிறார்கள். இருவருடைய உரைகளுக்கு முன் சுமந்திரனும் சிறீதரனும் மங்கிப்போய் விட்டார்கள்.
இதுவொரு அட்டகாசமான தொடக்கம். கடந்த சுமார் 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் காணப்படாத ஒரு தோற்றப்பாடு. கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பின் நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் பிரதிநிதிகள் தமது சட்ட புலமையை, மொழிப் புலமையை நிரூபிக்கும் விதத்தில் ஆற்றிய உரைகள் எவையும் சிங்கள இனவாதிகளைச் சீண்டவில்லை. கொதிப்படையச் செய்யவில்லை.
இனவாதிகளுக்கு நோகக் கூடாது என்று கவனமாகத் திட்டமிட்டு மழுப்பி மழுப்பி ஆற்றப்பட்ட உரைகளவை. மனித முகமூடி அணிந்த இனவாதிகளை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் ஆற்றப்பட்ட உரைகளவை. சில சமயம் தமது பங்காளிகளை செல்லமாக குட்டும் விதத்தில் அமைந்த உரைகளும் உண்டு. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் ஒரு தமிழ் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு இனவாதிகள் இந்த அளவுக்குக் கொதித்தது இதுதான் முதல் தடவை. இதுவொரு நல்ல தொடக்கம். உற்சாகமூட்டும் தொடக்கம்.
விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நாடாளுமன்றத்தை ஒரு பொருத்தமான பேச்சு மேடையாகப் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு நண்பர் சொன்னார் “இப்பொழுது இவர்கள் வெடி கொளுத்திப் போடுகிறார்கள். இதற்கு எதிர்வினையாக மறு தரப்பில் இனவாதிகள் வெடி கொளுத்திப் போடுவார்கள். இப்படியே பரஸ்பரம் வெடிகளைக் கொளுத்திப் போடும் அரசியலால் என்ன கிடைக்கும்” என்று.
உண்மைதான். உக்கிரமான உரைகள் இனவாதிகளை கொதிக்க வைக்கும். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தராது. அதற்கும் அப்பால் நாடாளுமன்றத்தை வேறு எந்தெந்த வழிகளில் எதிர்ப்பு மேடையாக அல்லது கவனயீர்ப்பு மேடையாக அல்லது சத்தியாக்கிரக மேடையாக பயன்படுத்தலாம் என்று மாற்று அணியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும். இதுவிடயத்தில் அவர்களோடு சேர்ந்து வரக்கூடிய ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த 11 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தைக் கூட்டமைப்பு கையாண்ட விதம் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரவில்லை. மாறாக கம்பெரலிய அபிவிருத்தியையும் இடையில் கருவிலேயே சிதைந்த நிலைமாறுகால நீதி என்ற ஓர் அழகிய பொய்யையும்தான் பெற்றுத் தந்தது.
ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக வெளி ஒன்று கிடைத்தது. ஆனால், அதற்கு கூட்டமைப்பு உரிமை கோர முடியாது. ஏனெனில் அந்த ஜனநாயக வெளியை பொருத்தமான விதங்களில் பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அதன் விரிவை பரிசோதிக்கும் மக்கள் மைய போராட்டங்களை கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களும் மாற்று அணியும் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் இயக்கங்களும்தான் அதை முன்னெடுத்தன.
எனவே, நாடாளுமன்றத்தில் தமிழ் தரப்பில் ஒரு மாற்றம் நிகழ்ந்து விட்டது என்ற செய்தி கொழும்புக்கும் வெளி உலகத்துக்கும் கூர்மையாக சன்னமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொடக்கத்தை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துசெல்ல வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
நாடாளுமன்றத்தில் தமிழ் தரப்புக்கு இருக்கும் வரையறைகளை விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்காக சட்டப்படிதான் எல்லாவற்றையும் செய்யலாம் என்று விளக்கம் தரக்கூடாது. மாறாக நாடாளுமன்றத்தின் விரிவைப் பரிசோதிக்கும் விதத்திலும் அல்லது நாடாளுமன்றத்தின் வரையறையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தும் விதத்திலும் சாத்வீக வழிகளில் போராடக்கூடிய எல்லா சந்தர்ப்பங்களையும் மாற்று அணி பயன்படுத்த வேண்டும்.
‘நீ ஓட எத்தனித்தால்தான் உன்னுடைய கால்கள் விலங்கிடப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்வாய்’ என்று ரோசா லக்சம்பேர்க் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ் தரப்பு தனது எதிர்ப்பை எப்படி எப்படி வித்தியாசமான வடிவங்களில் காட்டலாம் என்பதனை மாற்று அணி சிந்தித்து செயல்படுத்தினால்தான் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்குள்ள வரையறைகளை வெளி உலகத்துக்கு உணர்த்த முடியும்.
ஏற்கனவே, சிங்கள அரசியல்வாதிகள் இது தொடர்பாக பல முன்னுதாரணங்களைக் காட்டியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு கோவணத்தோடு போன தகநாயக்காவை இங்கு சுட்டிக்காட்டலாம். அதுபோல நாடாளுமன்றத்தில் வித்தியாசமான படைப்புத்திறன் மிக்க கவனயீர்ப்பு நடவடிக்கைகளைக் குறித்து மாற்று அணியும் கூட்டமைப்பும் சேர்ந்து யோசிக்கலாம். வெளிநடப்புச் செய்வது அல்லது வாக்கெடுப்பைப் பகிஷ்கரிப்பது போன்றவை பழைய முறைகள். அவை அல்லாத புதிய முறைகளை மாற்று அணி சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றம் எனப்படுவது உரைகளை ஆற்றி அதன்மூலம் எதிர்ப்பை காட்டும் ஒரு களம் என்பதற்கும் அப்பால் கொழும்பின் கவனத்தையும் வெளி உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க புதிய படைப்புத்திறன் மிக்க கவனயீர்ப்பு போராட்டங்களுக்கான ஒரு களமாக நாடாளுமன்றத்தை பயன்படுத்தலாமா என்று மாற்று அணி பரிசோதிக்க வேண்டும்.
அத்தோடு, மற்றோரு விடயத்தையும் சிந்திக்க வேண்டும். வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கும் சலுகைகள் வரப்பிரசாதங்களை அனுபவிப்பதா இல்லையா என்றும் அவர்கள் முடிவெடுக்கலாம். ஜே.வி.பி.யைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிகால் கலப்பதி முதன்முதலாக நாடாளுமன்றத்துக்கு போனபோது அப்படி ஒரு முடிவை எடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை அவர் அனுபவிக்கவில்லை. மாற்று அணியை சேர்ந்தவர்களும் அவ்வாறு தமது மாற்று அரசியலை சொல்லில் செயலில் நடைமுறையில் நிரூபித்துக் காட்டுவார்களா?
2009இற்குப் பின்னரான புதிய புரட்சிகரமான ஒரு மிதவாத அரசியலுக்குரிய போராட்ட வடிவங்களை மாற்று அணி கண்டுபிடிக்க வேண்டும். வீரமான உரைகள் தமிழ் மக்களுக்கு தெம்பூட்டக்கூடியவை. அறிவுபூர்வமான உரைகள் வெளி உலகத்துக்கு தமிழ் தரப்பின் நீதியை நிராகரிக்கப்பட முடியாத தர்க்கங்களுக்கூடாக எடுத்துக் கூறுபவை. ஆனால், அவற்றுக்கும் அப்பால் தமது எதிர்ப்பைக் காட்டும் புதிய சாத்வீக வழிமுறைகளை மாற்று அணி கண்டுபிடிக்க வேண்டும். அதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கு உரிய நீதியை பெறுவதற்குரிய புதிய போராட்டக் களங்களைத் திறக்கலாம்.