உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதுடன், கடந்த 1980 களிலிருந்து நாட்டில் நடைபெற்ற இனமோதல்களில் சுமார் 60,000 -100,000 பேர் வரையில் காணாமல்போயிருக்கிறார்கள் என்று இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காக தொடர்ச்சியாகப் போராடிவரும் அவர்களது குடும்பத்தினருடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்.

உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதுடன், கடந்த 1980களிலிருந்து நாட்டில் நடைபெற்ற இனமோதல்களில் சுமார் 60,000 -100,000 பேர் வரையில் காணாமல் போயிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின்  போது பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் போர் வலயத்திலிருந்து வெளியேறி, அரச படைகளிடம் சரணடைந்தனர். அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்வதாக படையினரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அவர்கள்  சரணடைந்தனர். எனினும் தற்போது வரையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் காணாமல்போனோரின் குடும்பத்தினர் இவ்விவகாரம் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் குறித்தும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply