பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கினார். காலையில் அவர் கண் விழித்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்பதை தெரிந்து வெளியேற்றுவதற்காக எண்டோஸ்கோபி கருவியை வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தினர்.
பின்னர் பெண் டாக்டர் ஒருவர் எண்டோஸ்கோபி கருவியுடன் சேர்ந்து அந்த உயிரினத்தை வெளியில் பிடித்து இழுத்தார். எண்டோஸ்கோபி கருவியுடன் நீளமாக வந்ததைப் பிடித்து இழுத்த டாக்டர், முதலில் அது என்ன என்பதை கவனிக்கவில்லை. ஆனால், முழுவதும் வெளியே எடுத்த போது, அது 4 அடி நீள பாம்பு என்பதை அறிந்து, பதறிப்போய் பின்வாங்கினார்.
4-feet snake pulled out from woman’s mouth in Russia… https://t.co/BiTRfd9DmG
— Sanjay Kareer (@sanjaykareer) September 1, 2020
பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக பாம்பை வெளியே எடுக்கும் காட்சியை அங்கிருந்த சக டாக்டர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாம்பு இன்னும் உயிருடன் இருக்கிறதா? அந்த பெண்ணின் வயிற்றுக்குள் எவ்வளவு நேரம் பாம்பு இருந்தது? என்பன போன்ற தகவல்கள் தெரியவில்லை.
அதே சமயம் இதுபோன்ற சம்பவங்கள் அந்த கிராமத்தில் சகஜமானவை என்றும், திறந்தவெளியில் தூங்குவதை மக்கள் தவிர்க்குமாறு பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.