விடுதலைப்புலிகள் சமாதான முயற்சிகளில் மிகவும் நேர்மையாகயிருந்தனர் என தெரிவித்துள்ள நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில் இலங்கை இராணுவமே தன்னை பலப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரரின் ஈஸ்வரன் ரட்ணத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி
விடுதலைப்புலிகளுடன் நீங்கள் மேற்கொண்ட உள்ளக பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து விடுதலைப்புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் நேர்மையான ஆர்வத்தை கொண்டிருந்தார்கள் என கருதுகின்றீர்களா?
பதில்- நிச்சயமாக.
தெற்கில் இது குறித்த தவறான கருத்து காணப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் மிகவும் வலுவான நிலையிலிருந்தவேளையே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள் என்பதை தயவு செய்து நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
2000-2001 போன்று விடுதலைப்புலிகள் முன்னர் ஒருபோதும் வலுவாகயிருந்ததில்லை பின்னரும் வலுவாகயிருந்ததில்லை.
அவர்கள் ஆனையிறவை கைப்பற்றியிருந்தார்கள்.
அவர்கள் யாழ்குடாநாட்டை கைப்பற்றும் நிலையிலிருந்தார்கள்,இலங்கை அரசாங்கத்துக்கு பாக்கிஸ்தான் வழங்கிய பேட்டி காரணமாகவே அவர்கள் இறுதி நிமிடத்தில் தோற்கடிக்கப்பட்டார்கள்.
பண்டாரநாயக்க விமானநிலையத்தின் மீதான தாக்குதல் மூலம் அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை அழித்திருந்தார்கள்.
ஆகவே அவர்கள் மிகவும் வலுவான நிலையிலிருந்த தருணத்திலேயே சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.
ஆகவே அவர்கள் சமாதான முயற்சிகளில் மிகவும் நேர்மையாகயிருந்தனர் என்பதை வெளிப்படுத்தியது.
ஆனால் அவர்கள் சமஸ்டி தீர்வு வரை செல்வதற்கு தயாராகயிருந்தார்களா என கேள்வி எழக்கூடும்.
பிரபாகரன் சமாதானத்தை விரும்பினார் அவர் சமாதானத்துக்கு தயாராகயிருந்தார் ஆனால் நிறையவிட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியிருந்தது.
கேள்வி- விடுதலைப்புலிகள் சமாதானத்தை பேச்சுக்களை பயன்படுத்தி தங்களை இராணுவரீதியாக பலப்படுத்த முயன்றனர் நோர்வே அதற்கு உதவியது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன- இதில் ஏதாவது உண்மையுள்ளதா?
பதில்- நிச்சயமாக இல்லை.
நாங்கள் எந்த தரப்பிற்கும் வெகுமானங்களை வழங்குவதில்லை , பெற்றுக்கொள்வதும் இல்லை.
மிக முக்கியமாக தென்பகுதியில் காணப்பட்ட மற்றுமொரு தவறான கருத்து இது.
சமாதான முயற்சிகள் இடம்பெற்றவேளை இலங்கை இராணுவமே அதிகளவில் தன்னை பலப்படுத்தியது.
2007 முதல் 2009 வரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது நாங்கள் இதனை உணர்ந்தோம்.
உலகின் அனைத்து நாடுகளினதும் ஆதரவும் இலங்கைக்கு கிடைத்தது.இந்தியா அமெரிக்கா சீனா ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவளித்தன.
அவர்கள் அனைவரும் சமாதானத்தை விரும்பினார்கள் அதேவேளை அவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு தரப்பை தெரிவு செய்ய விரும்பினார்கள் அவர்கள் இலங்கை அரசாங்கத்தை தெரிவு செய்தனர். ஆகவே இலங்கை அரசாங்கமே தனது நிலையை பலப்படுத்தியது விடுதலைப்புலிகள் இல்லை.
கேள்வி- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு வருவது கடினமாகயிருந்ததா?
பதில்- மகிந்த 2005 இல் ஆட்சிக்கு வந்தார், அவரிடம் சமாதான பேச்சுவார்த்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தெளிவோ திட்டமோ இருந்தது என நாங்கள் கருதவில்லை.
அவர் எங்களை செவிமடுத்தார் அதேவேளை பிரபாகரன் அந்த வேளையில் மகிந்த ராஜபக்சவின் நிலையை நெருக்கடிக்குள்ளாக்கினார்.
விடுதலைப்புலிகள் வீதியோர குண்டுதாக்குதல்கள் படையினர் மீதான தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
ஜெனீவாவில் மகிந்தவும் பிரபாகரனும் இரண்டு சுற்றுபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்,பிரபாரகனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயார் என மகிந்த ராஜபக்ச என்னிடம் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச அவ்வேளை நீண்டகால பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை.
2006 இல் நாங்கள் எதிர்பார்த்தை விட நிலைமை வேறு மாதிரியாக காணப்பட்டது அதுவே சமாதானத்துக்கான இறுதி சந்தர்ப்பம் – தவறவிடப்பட்ட சந்தர்ப்பம் என நான் கருதுகின்றேன்.