20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது.
குறித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் 19 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
19 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் புதிய அரசால் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
அதன் முதலாவது வரைபு தற்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கேட்கப்பட்ட போது அதனை ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்தே வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து அது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்துக்கு விடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இரட்டை பிரஜாவுரிமையை உடையவர்கள் பாராளுமன்றத்திற்ககோ அல்லது ஜனாதிபதியாகுவதற்கு தடை செய்யும் விதத்தில் 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட ஏற்பாடுகள் 20 ஆவது திருத்தத்தின் சட்டமூல வரைபில் நீக்கப்பட்டுள்ளன.
20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவருக்கு இருக்க வேண்டிய வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் 35 வயதிற்கு மேற்பட்டவர்களே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.
இதேவேளை, அரசாங்கமொன்றில் 30 அமைச்சுகளே காணப்படலாம் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய விடயம் 20 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைபில் வழங்கப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபின் பிரகாரம் ஜனாதிபதியால் பிரதமரை பதவியில் இருந்து நீக்கவும் நியமிக்கவும் முடியும்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும்.
ஜனாதிபதி பதவிக்கு வந்து பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடகாலத்தின் பின்னர் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைக்கலாம் என 20 ஆவது திருத்தச் சட்டத்தின் சட்டமூல வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் நான்கரை வருடங்களின் பின்னரே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசமைப்பு பேரவை என்பது பாராளுமன்ற பேரவை என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
முழுமையாக தமிழில் பார்வையிட
http://cdn.virakesari.lk/uploads/medium/file/133281/PL-011963-Gazette-suppleiment-T.pdf