‘கடனுக்குப் பாலியல் சேவை’ என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் மலேசியாவில் இதை சாத்தியமாக்கி உள்ளது.

கொரோனா விவகாரத்தால் பெரும்பாலானோர் வருமானத்தையும் ஊதியத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

இதைப் புரிந்துகொண்டு மலேசியாவில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் கும்பல் ஒன்று வெளியிட்ட நூதன மற்றும் கவர்ச்சிகர அறிவிப்பு, வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறது.

“முதலில் எங்கள் சேவையை அனுபவியுங்கள்… கட்டணத்தைப் பிறகு செலுத்துங்கள்,” என்பது தான் அந்த அறிவிப்பு.

வெளிநாட்டவர்களை குறிவைத்து இந்த அறிவிப்பை ரகசியமாக பரப்பிய அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தற்போது கைதாகி உள்ளனர்.

அண்மையில் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இந்தக் கும்பல் இயங்கி வருவது தெரிய வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது வியட்னாம், இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 பெண்கள் கைதாகினர்.

மேலும் இந்தக் கும்பலை இயக்கி வந்த 12 ஆடவர்களும், உள்ளூர் பெண்மணி ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போதே வாடிக்கையாளர்களைக் கவர இந்தக் கும்பல் தீட்டிய கவர்ச்சிகரமான திட்டம் குறித்து தெரிய வந்தது.

இந்தக் கும்பல் ஒரு நாளில் 24 மணி நேரமும் செயல்பட்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களிடம் அவர்கள் விரும்பும் பாலியல் சேவைக்கு ஏற்ப 200 முதல் 650 மலேசிய ரிங்கிட் வரை (இந்திய மதிப்பில் ரூ.3,500 முதல் ரூ.11,000) கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது வெளிநாட்டு ஊழியர்கள் குறைந்தபட்சம் 75 விழுக்காடு ஊதியத்தையேனும் பெற்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. எனவே தான் அவர்களைக் குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் கவர்ச்சி அறிவிப்புகளை பரப்பியதாக கருதப்படுகிறது.

“கையில் பணம் இல்லையே என்று வருந்த வேண்டாம். முதலில் எங்கள் சேவை… பிறகு எங்களுக்கான கட்டணம்” என்ற அறிவிப்பு வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட்டது.

கடன் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என்று அக்கும்பல் கருதியிருக்கக் கூடும் என்றும், அவர்களை மீண்டும் வரவைப்பதற்கான ஒரு யுக்தி இது என்றும் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு வசதியாக கையடக்க நோட்புக் (Notebook) கருவிகளையும் இந்தக் கும்பல் அளித்துள்ளது.

இதன் மூலம் அவர்களால் தங்களுக்குப் பிடித்த பெண்ணையும் பாலியல் சேவையையும் தேர்வு செய்ய முடியும். மேலும் அதற்கான கட்டணத்தை பின்னாட்களில் செலுத்துவதற்கு விபச்சார கும்பல் முன்வைக்கும் வழிமுறைகளில் ஒன்றையும் தேர்வு செய்யலாம்.

இவை எல்லாம் போக, WeChat, Michat, WhatsApp உட்பட சமூக வலைத்தளங்களில் அழகிகளின் கவர்ச்சிப் படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளியிட்டும் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது இக்கும்பல்.

இவர்களின் சேவையை அதிகம் பயன்படுத்திக் கொண்டது வெளிநாட்டு ஊழியர்கள்தான் என்றும், வார இறுதியில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர் விரும்பும் இடத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லவும், பயண தூரம் மற்றும் நேரத்துக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

சட்டவிரோதப் பாலியல் தொழில் தடுக்கப்பட வேண்டும் என்பது அவசியம் தான் என்றாலும், இந்த தொழிலிலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது சுவாரசியம்தான்.

Share.
Leave A Reply