பாம்பை வாலில் பிடித்து விளையாட முனையும் பாலகனை போலவும், வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து அதைத் தன்னால் ஓட்ட முடியும் என்று கூறும் 3 வயது சிறுவனைப் போலவும் அரசியல் பிரகடனங்களை செய்யும் தமிழ் தலைவர்களின் அரசியல் உள்ளது.

அளவால் மிகவும் பெரிய சிங்கள பௌத்த இனம் அறிவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் செயல்முறை ரீதியாகவும் தேர்தல் மூலம் ஒன்றுதிரண்ட பெரும் அசுர பலம் கொண்ட சக்தியாய் உருப்பெற்றிருக்கும் போது , வளம் பொருந்திய ஆனால் அளவால் சிறிய தமிழினம் துண்டுபட்டு , சிதறுண்டு எதிரியின் காலடியில் கையேந்தி கிடக்கின்றது.

தமிழ் தலைவர்கள் யார் , எவர் எப்படித்தான் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கிக் கொண்டு நின்றாலும் தமிழ் மக்களை எதிரியின் காலடியில் வீழ்த்திவிட்டு, தமிழ் மக்களின் முகங்கள் சேற்றில் புதைந்திருக்கும் நிலையின் தங்கள் மீசையில் மண்படவில்லை என்று கூறும் சாகசப் பொம்மை வீரர்களாய் காட்சியளிக்கின்றனர்.

“அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்று கூறும் சினிமா பாணி வசனங்களோ , “வானத்தில் இருக்கும் சந்திரனைப் பிடுங்கிவந்து உன் கழுத்தில் பதக்கமாய் தொங்கவிடுவேன்” என்று கூறும் பருவ வயது காதல் வசனங்களோ தமிழ் மக்களுக்கு ஒருபோதும் வாழ்வளிக்காது.

“நீங்கள் வானத்தில் கோட்டைகளைக் கட்டிவைத்திருந்தால் அவை எவ்வித சேதத்துக்கும் உள்ளாக இடமின்றி, நீங்கள் கட்டியவாறு அவை அங்கு அப்படியே இருக்கும். இப்போது நீங்கள் அவற்றிற்கு கீழே அத்திவாரங்களை இடுங்கள்”

“If you have built castles in the air your work need not be lost;

that is where they should be.

Now put the foundations under them.””

– Henry David Thoreau

என்ற ஹென்றி டேவிட் தோரோவின் கூற்றிற்கிணங்க தமிழ் மக்கள் கற்பனை அரசியலில் இருந்து விடுபட்டு முற்றிலும் நடைமுறைச் சாத்தியமான அரசியலுக்கு அத்திவாரம் போடவேண்டும்.

சுமாராக கடந்த முக்கால் நூற்றாண்டாய் “பொன்னன் முதல் சம்பந்தன் வரை” நாடாளுமன்ற மைதானத்தில் ஆடிய ஆட்டத்தால் ஓட்டம் எதனையும் எடுக்க முடியவில்லை. மாறாக தொடர்ந்து ஆட்டமிழந்ததே மிச்சம்.

தற்போது துடுப்புகள் கைமாறி உள்ளன. பந்தும் கைமாறி உள்ளது. ஒன்றரை இலட்சம் மக்கள் மீது துப்பாக்கி குண்டுகளை வீசிய தளபதி தற்போது நாடாளுமன்ற மைதானத்தில் தன் முதலாவது பந்து வீச்சின் போது “துடுப்பை உயர்த்தினால் தலைக்குப் பந்து வீசுவேன்” என்று தெளிவாக பிரகடனப்படுத்தி உள்ளார்.

“கடந்தக் காலத்தில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.”

முள்ளிவாய்க்காலில் குண்டு வீசிய தளபதியின் பந்துவீச்சு நாடாளுமன்றத்தில் இப்படி அமைந்துள்ள போது நாடாளுமன்ற துடுப்பாட்டத்தில் எந்தவிதமான விளையாட்டு விதிமுறைகளும் இருக்காது என்பது புலனாகிறது.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்னான பனிப்போர் புதிய உலக ஒழுங்கின் கீழ் இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது போல கொரோனாவின் பின்னான புதிய உலக ஒழுங்கின் கீழ் தற்போது இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இத்தருணத்தில் தமிழ் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்னான உலக ஒழுங்கின் கீழ் உருவாக்கிய சோல்பரி அரசியல் யாப்பை நோக்கி தமிழ் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன?

, அதற்கு ஏற்பட்ட கதி என்ன? தொடர்ந்து தமிழ் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன? அவற்றிற்கெல்லாம் ஏற்பட்ட கதைகள் என்ன? என்ற வகையில் அனைத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து சரியான அரசியல் மடிப்பீட்டை முதலில் செய்ததாக வேண்டும்.

எங்கு தொடங்கி எங்கு வந்து நிற்கின்றோம்? எங்களின் கோரிக்கைகளுக்கு எல்லாம் என்ன நடந்தது? இந்த தோழிகளுக்கு எல்லாம் யார் பொறுப்பு? தோல்விகள் ஏற்பட காரணங்கள் என்ன? இவற்றை எல்லாம் புத்திபூர்வமாக சரிவர ஆராய்ந்து விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சரிவர எடைபோடாமல் நிகழ்கால , எதிர்கால அரசியலை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது.

இப்போது தமிழ் அறிஞர்களும் தமிழ் தலைவர்களும் முதலில் கடந்தகால கோரிக்கைகளை சோல்பரி அரசியல் யாப்பில் இருந்து இன்று வரை முதலில் சரிவர பட்டியலிடவேண்டும்.

அடுத்து அந்தக் கோரிக்கைகள் பின்பு எப்படி தோல்வியடைந்தன என்பதையும் நேர்மையாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

இறுதி அர்த்தத்தில் குதிரையை வண்டிக்கு பின்னால் பூட்டி குதிரை வேகத்தில் வண்டியை பின்னோக்கி ஓட்டும் கதையாய் தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்குப் பின்னான காலத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடர்கிறது.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு தோன்றிய உலக அரசியல் ஒழுங்கை அன்றைய தமிழ் தலைவர்கள் சிறிதும் புரிந்து கொள்ளாமல், உலக அரசியல் போக்குக்கும் புவிசார் அரசியலுக்கும் இடையேயான தொடர்புகளை கண்கொண்டு பார்க்க முடியாமல் , இவற்றிற்கும் சோல்பரி அரசியல் யாப்புக்கும் இடையே உள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள இயலாமல் தமிழ் தலைவர்கள் இருந்ததுபோல் இன்றைய கொரோனாவின் பின்னான உலக ஒழுங்கை புரிந்துகொள்ள இயலாதவர்களாய் தமிழ் மக்களின் அரசியல் இனியும் இருக்கக் கூடாது.

இந்நிலையில் இன்றைய புதிய உலக அரசியல் போக்கையும் , சர்வதேச உறவுகளையும், புவிசார் அரசியலையும், பட்டுப் பாதை அரசியலையும், இந்தோ– பசிபிக் அரசியலையும் , இலங்கை அரசியலையும் ஈழத்தமிழரின் தலைவிதியையும் ஒன்றிணைத்து பார்க்கவல்ல நடைமுறை சாத்தியமான ஒரு புதிய பார்வையை தமிழ் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் முதலில் கைக்கொள்ள வேண்டும்.

அத்தகைய தெளிவான வீரியம்மிக்க ஒரு பார்வையுடன் தமிழ் தலைவர்கள் தமக்கான போராட்ட வழிமுறைகளை வகுத்துக் , கையில் எடுத்துச் செயல்பட வேண்டும்.

அந்த வழிமுறைகள்தான் என்ன? அப்படியான வழிமுறைகளை உருவாக்குவதற்கு முதலில் ஜனநாயக நடைமுறைகளையும் அதற்கான கலாச்சாரத்தையும் கையில் எடுக்க வேண்டும். ஜனநாயகம் வழிமுறைகளும் அதற்கான கலாச்சாரமும் இன்றி ஒரு போதும் எம்மை முதலில் நாம் அணி படுத்த முடியாது , வழிப்படுத்தவும் முடியாது , வலுப்படுத்தவும் முடியாது.

சிங்களத் தலைவர்கள் குதிரைகளை வண்டிக்கு முன்னே பூட்டி , முன்னோக்கி வேகமாக பாய்கிறார்கள்.

தமிழ் தலைவர்களோ குதிரைகளை வண்டிக்குப் பின்னால் பூட்டி பின்னோக்கி வேகமாய் பார்க்கிறார்கள்.

கடந்த முக்கால் நூற்றாண்டு கால அரசியலை கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிங்கள அரசியல் முன்னோக்கியும் தமிழ் அரசியல் பின்னோக்கியும் எதிர் சார்ப்பு வேகத்தில் பயணிக்கும் போது இடைவழி இரட்டிப்பாகி தமிழ் அரசியல் அதலபாதாளத் தோல்வியில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது.

இன்னிலையில் காணப்படும் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்து தமிழ் மக்களுக்கென ஒரு பரந்த தேசிய அவையை உருவாக்க வேண்டும். இதில் அரசியல்வாதிகளையும், சமய – சமூக தலைவர்களையும், பொது அமைப்புகளின் தலைவர்களையும், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் , மற்றும் பொதுமக்கள் பிரதிகள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தமிழ் தேசிய பேரவையை உருவாக்க வேண்டும்.

கிழக்குக்கான பிரதிநித்துவம், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான பிரதிநிதித்துவம், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பனவெல்லாம் கருத்தில் எடுக்கப்பட்டு பரந்த தமிழ்தேசிய சிந்தனையுடன் இதனை வடிவமைக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கவல்ல ஒரு குறியீட்டுப் பெறுமானம்மிக்க தலைவனது தோற்றத்தோடு கூட்டுத் தலைமையை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாழ்வில் நாடாளுமன்றத் தலைமை முடிவடைந்துவிட்டது. இனியும் மக்களுக்கு”” மாயமான் “” காட்டி தேரோடும் அரசியலை விட்டுவிட்டு புதிய அரசியல் வியூகத்துக்கு தயாராக வேண்டும். இதனை யார் முன்னெடுக்க வல்லவர்களோ அவர்களே மக்களின் தலைவர்கள் ஆவார்கள்.

1977 ஆம் ஆண்டு அசுர பலத்தோடு சிம்மாசனம் ஏறிய யானைகள் நாட்டை இரத்தச் சகதியாக் இறுதியில் இன்று சகதிக்குள் அந்த யானைகள் எல்லாம் வீழ்ந்து கவிழ்ந்து கிடக்கின்றன.

தமிழ் மக்களுடன் அவர்களுக்கான உரிமைகளை பகிர்ந்து அமைதியும், சமாதானமும் வளமும் நிறைந்த நாட்டை உருவாக்குவதற்கு பதிலாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அந்நியர்களிடம் கையேந்தி ஆயுதங்களை வாங்கி இந்த நாட்டையே அன்னியர்களின் வேட்டைக்காடாகவும் இரத்தக் காடாகவும் மாற்றுவதிற்தான் அவர்களின் அரசியல் முடிவடைந்தது. கூடவே அவர்களும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

இனப்டுகொலை வெற்றிவாதத்தின் பின்னணியில் தற்போது 2020ஆம் ஆண்டு அசுர பலத்துடன் வாளேந்திய சிங்கங்கள் தாமரை மொட்டுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் பசிய தாமரை மொட்டை வெட்டிப் பிளக்கவல்ல பௌத்த மேலாதிக்கத்தின் கூரியவாள் சமாதானத்தை துண்டாடுமே தவிர நாட்டை ஒன்றாக்காது.

கொரானாவின் பின்னான புதிய சர்வதேச சூழலில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறிய, பெரிய எத்தகைய வாய்ப்புகளையும் பயன்படுத்தவல்ல புத்திக்கூர்மையும் , சாதுர்யமும் , சீரிய மனப்பாங்கும் கொண்ட தலைவர்கள் வாய்க்கப் பெறுவார்களேயானால் தமிழ் மக்கள் முன்னேற வாய்ப்புண்டு.

Share.
Leave A Reply