கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பலியாகியுள்ளனர்.
குருங்குடி கிராமத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு தொழிற்சாலைகள், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி ஊரடங்கு தளர்விற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டன. கோயில் திருவிழாக்கள் மற்றும் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி இங்கிருக்கும் தொழிற்சாலைகளில், பட்டாசு தயாரிக்கும் பணி மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குருங்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரது மனைவி காந்திமதிக்குச் சொந்தமான பாட்டாசு தொழிற்சாலையில் இன்று உரிமையாளர் உட்பட 9 பெண்கள் பணிக்குச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் தொழிற்சாலையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால், அங்கு பணிபுரிந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிறகு மேலும் இரு பெண்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், பலத்த காயங்களுடன் 2 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தினால் தொழிற்சாலை கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரணம் அறிவிப்பு
பட்டாசு தொழிற்சாலை விபத்தில், உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.