“அச்சுறுத்தல்களைக் கடந்தும், அரசியல் மிரட்டல்களைக் கடந்தும் என்னுடைய குரல் உங்களுக்காக ஒலிக்கும். தம் உயிர், வாழ்வு என அனைத்தையும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இனத்திற்காக தியாகம் செய்த இந்த மண்ணில், எங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும் உயிர்வாழ்தலுக்காகவும் பொய்களைப் பேசி, மக்களுக்கு அநியாயங்களைச் செய்வது எந்த வகையிலும் நியாயம் ஆகாது என்பதை உறுதிபடச் சொல்கின்றேன். இன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது” எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரின் தேர்தல் வெற்றி பற்றிய கிளிநொச்சி மக்களின் எழுச்சிமிகு பொதுக்கூட்டம் கிளிநொச்சிச் சந்தைக்கருகில் இன்று காலை நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே இதனை அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாகக் றியவை வருமாறு;
“கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை ஓர் உறுப்பினராக தேர்வு செய்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இன்று உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டி என்னை மனம் நெகிழச் செய்துவிட்டீர்கள். ஆனாலும் என்னைப் பாராளுமன்றம் அனுப்பி எனது சுமையைக் கூட்டிவிட்டீர்கள்! தனித்து பயணிப்பது எனக்கொரு புதிய அனுபவமாக உள்ளது. அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பதின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணர்கின்றேன். கட்சியில் பலரின் உதவி இருந்தன. பாராளுமன்றமோ தனி மனிதப் பிரயாணமாக அமைந்துவிட்டது எனக்கு. ஆனால் என் கடமையைச் செய்ய வேண்டும் என்ற பேரவா என்னை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது.
“கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்றது கீதை. ஆனால் தங்கள் கடமையை நிறைவேற்றாமல், காலத்திற்கு காலம் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என எமது அரசியல் தலைமைகள் இருந்தமையினால்தான் மக்களுக்கு எமது அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கான பாதையைத் திறந்திருக்கின்றது என்றே நம்புகின்றேன்.
இம்முறை தேர்தலில், தென்னிலங்கையின் பேரினவாத சக்திகள் மாத்திரமின்றி, நாம் பிரதானமாக விமர்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமின்றி எம்முடன் கடந்த காலத்தில் இணைந்து நின்றவர்களும் மற்றும் என்னைத் தனிப் பயணத்திற்கு அழைத்தவர்களுங்கூட எம் மீது அவதூறுகளையும் சேறடிப்புக்களையும் செய்துள்ளனர்.
விசமத்தனமான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்திடப்பட்ட போதும் அவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது எனக்கும் எமது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு, குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும் தோல்வியாகவும் அமைகின்றது என எண்ணுகின்றேன். அந்த வகையில் இத் தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு முன்னால் மிகப் பெரும் கடமைகள் காத்து நிற்கின்றன.
தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு என்கின்ற எமது நிதியத்தின் வாயிலாக வடக்கு கிழக்கு மக்களின் துயர் துடைக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான காலமும் சூழலும் இப்போதே வாய்த்து வருகின்றது. புலம்பெயர் உறவுகள் மற்றும் தாயகத்தின் உறவுகளின் பங்களிப்பில் எம் மக்களுக்கான இப் பணியை நிறைவேற்றுவது எனது அவசிய கடமை என்பதை உணர்கின்றேன்.
நீங்கள் எந்த வேளையிலும் என்னைத் தொடர்பு கொள்ள முடியும். எமது கிளிநொச்சி கிளை வாயிலாக உங்கள் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். உடனுக்குடன் உங்களுக்கு அதற்கான தீர்வுகளும் பதில்களும் வழங்கும் வகையில் வினைத்திறனாக எமது பணிகளை ஆற்றத்; தலைப்பட்டுள்ளோம்.
நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் எதிர்கொள்ளுகின்ற விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் நீங்களும் அறிவீர்கள் என்று நம்புகின்றேன். இதேபோலவே மாகாண சபைக் காலத்தில் கூட பல எதிர்ப்புக்களை எதிர்கொண்டேன். அன்று இலங்கை அரசால் மாத்திரமல்ல என்னை அழைத்து வந்த எம்மவர்களே எனக்கு எதிராக நின்றார்கள். எனக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வந்து என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறிய முற்பட்ட வேளையில் கிளிநொச்சியிலிருந்தும் எனக்கு ஆதரவு கொடுக்க பலர் திரண்டு வந்ததை நான் அறிவேன்.
இப்போது பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்ப்பு வருகின்ற போது எம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மௌனிகளாக இருக்கின்றார்கள். நான் பேசுவது அவர்களுக்காகவுந் தான் என்பதை மறந்து நிற்கின்றார்கள்.
உலகின் மூத்த மொழி தமிழ், உலகின் மதிப்பு மிக்க செம்மொழி அது என்பதை இந்தியாவில் மாத்திரமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கூறி வருகின்றார்கள். ஆனால் தென்னிலங்கையில் இருப்பவர்களுக்கு அது தெரியவில்லையா? தெரியாததைப் போல நடிக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
நான் அன்று சொன்னது இதைத்தான். தமிழ் உலகின் மூத்த மொழி; தமிழர்கள் இந்த நாட்டின் மூத்த குடிகள் என்றேன். தமிழ் மக்கள் இந்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு இலக்கியங்களும், தொல்பொருட்களும், கல்வெட்டுக்களும் என பல ஆதாரங்கள் உள்ளன. இதனை ஆதாரங்களுடன் முன்வைத்தேன். அதற்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றார்கள். அவர்கள் இதுகாறும் செய்துவந்த மோசடி எங்கே வெளிவந்துவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள்.
அவர்கள் தங்கள் வரலாற்றைப் புனைகின்றார்கள். புனைந்து பேசுகின்றார்கள். நாமோ எங்களுக்கு என இருக்கின்ற உண்மையான வரலாற்றை இதுகாறும் பேசாது இருந்துவிட்டோம். இந்த உண்மைகளை நான் பேசுவது, நாட்டைப் பிரிக்கவல்ல. இனப்பிரச்சினையில் இனியாவது சிங்கள மக்கள் விட்டுக் கொடுப்புடன் நடப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே. அப்படி நடந்தால் இலங்கைத் தீவின் அமைதிக்கு அது வழியமைக்கும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு. நெருக்குதல் ஒன்று தான் பெரும்பான்மையினரை தமது மாட மாளிகைகளில் இருந்து கீழிறக்கும் என்பது எனது கருத்து.
துரதிஷ்ட வசமாக எமது தலைவர்கள் எமது வரலாற்றைப் பேசத் தயங்குகின்றார்கள். அவர்களுக்கு எமது வரலாறு பற்றி உண்மையில் தெரியாதா அல்லது தெரிந்தும் மௌனிகளாக மாறிவிட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவ மாணவியர்க்கும் பல்கலைக்கழக மாணவ மாணவியர்க்கும் இந்த உண்மைகள் தெரியும்.
கற்றறிந்தவர்களும் அறிஞர்களும் சொல்லுகின்ற உண்மை வரலாற்றை எவர் வேண்டுமானாலும் படிக்கலாம். அறிந்துகொள்ளலாம். எங்கள் வரலாற்றை பற்றி சரியாகத் தெரியாத எமது தலைவர்கள் எப்படி சிங்களத் தலைவர்களுடன் பேச முடியும்? அல்லது அதைப் பேசத் தயங்குபவர்களால் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும்?
எல்லா வினைகளுக்கும்; எதிர்வினை உண்டு என்பதை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது, அதனைப் பிரிவினைவாதம் என்று எச்சரிக்கின்ற சிங்கள தலைவர்கள் இருக்கும் பாராளுமன்றத்தில், எங்கள் நியாயங்களை இனத்திற்காகப் பேசுகின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையே! படைத்துறை உயர்தளபதி சரத் பொன்சேகா என்னைச் சுடுவோம் என்ற தொனியில் பேசியதை நீங்கள் பார்த்துக் கேட்டிருப்பீர்கள். அதாவது சிங்கள மக்களைக் கோபம் ஊட்டியவர்களைத் தாம் சுட்டுக்கொன்றதை எனக்கு நினைவுபடுத்துவதாகத்தான் பொன்சேகா அவர்கள் சொல்லி எச்சரித்தார்.
மரணம் என்பது எல்லோருக்கும் பொது. படைத்துறை உயர் தளபதிகளுக்குங் கூட மரணம் வரும். நான் ஓய்வெடுத்து என் பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் களிக்கலாம். ஆனால் வடக்கின் முதலமைச்சர் பதவிக்காக இழுத்து வரப்பட்ட எனக்கு, சில கடமைகள் இருப்பதை உணர்ந்தேன். பல உண்மைகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும் இப்போது உணர்ந்துகொண்டுள்ளேன். அதைத் தடுக்க சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உயர் இராணுவ அதிகாரிகள் எனக்கு மரணம் பயம் ஊட்டுவதால் ஆவதொன்றுமில்லை.
அந்த வகையில் எத்தகைய அச்சுறுத்தல்களைக் கடந்தும், அரசியல் மிரட்டல்களைக் கடந்தும் என்னுடைய குரல் உங்களுக்காக ஒலிக்கும். தம் உயிர், வாழ்வு என அனைத்தையும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இனத்திற்காக தியாகம் செய்த இந்த மண்ணில், எங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும் உயிர்வாழ்தலுக்காகவும் பொய்களைப் பேசி, மக்களுக்கு அநியாயங்களைச் செய்வது எந்த வகையிலும் நியாயம் ஆகாது என்பதை உறுதிபடச் சொல்கின்றேன். இன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது.
எதற்காக என்னைப் பாராளுமன்றம் அனுப்பினீர்களோ அந்தக் கடமையை நிவைவேற்றுவதை என் உயரிய கொள்கையாக, பணியாகக் கொண்டு செயலாற்றுவேன்.
நீங்கள் அனைவரும் பார்வையாளர்களாக இருக்காமல் பங்காளர்களாக இணைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால், கடந்த காலத்தைப் போன்று சிங்களத் தலைவர்கள் மாத்திரமல்ல, தமிழ் தலைவர்களும் உங்களை ஏமாற்றி விடுவார்கள்.
கடந்த வருடம் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் சந்தித்தபோது, அவர்களை எமது கட்சியின் தலைமைப் பதவிகளை ஏற்க வருமாறு அழைத்திருந்தேன். பலரும் எம்முடன் இணைந்தார்கள். மீண்டும் அவர்களைத் தலைமை ஏற்க அழைக்கின்றேன். உண்மையில் மாற்றத்திற்கான இந்தப் பயணத்தை ஆரம்பித்து காலக் கிரமத்தில் தலைமைத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டும் என்பதே எனது அவா என்பதையும் சொல்லி வைத்துள்ளேன்.
அன்பிற்குரிய முன்னாள் போராளிகளே! உங்கள் இளமையை, வாழ்வை, கல்வியை என அனைத்தையும் கடந்த காலத்தில் எமது மக்களுக்காக ஈந்தீர்கள். உங்களை மதிக்காத உங்களை தலைமையேற்க இடமளிக்காத அரசியல் என்பது எமது மக்களை ஏமாற்றும் அரசியலாகவே இருக்கும். நீங்களும் உங்கள் மேலான பங்களிப்புக்களை வழங்குவதுதான் ஏமாற்று அரசியலுக்கு முடிவாகும்.
எமது வரலாற்றில் கிளிநொச்சிக்கு என்று ஒரு மதிப்பு இருக்கின்றது. கிளிநொச்சி என்ற பெயருக்கு உலகமெங்கும் ஒரு கௌரவம் இருக்கின்றது. எமது மக்களின் குருதியாலும் கண்ணீராலும் ஆன எங்கள் போராட்ட வரலாற்றின் செயலிடம் இது. இந்த மண்ணில் இருந்து சத்தியமும் நேர்மையுங் கொண்ட எமது அரசியல் பயணத்தைப் பற்றி பேசுவதிலும் அதில் என்னைப் பலப்படுத்திய உங்களுக்கு நன்றி தெரிவிப்பதிலும் நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு இங்கு தழைத்தோங்க வாழ்த்தி விடைபெறுகின்றேன்.”