தாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்த முதல் ஆய்வு அறிக்கையை ரஷ்ய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆரம்ப சோதனைகள் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதைக் காட்டின என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட் -ல் வெளியாகி உள்ள அந்த அறிக்கையில், தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் உடலில் நோயெதிர்ப்பான்கள் உருவானதாகவும், கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஆக்ஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது ரஷ்யா.

உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷ்யாதான்.

தரவுகள் வெளியாகும் முன்னே அனுமதி அளித்த நாடும் ரஷ்யாதான்.

இந்த பரிசோதனைகள் சிறிய அளவில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை வைத்து இதன் திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிட முடியாது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த சோதனை முடிவுகளை ரஷ்ய அரசு கொண்டாடுகிறது. விமர்சகர்களுக்கான பதிலாக இந்த அறிக்கையை பார்க்கிறது.

முன்னதாக பல மேற்கத்திய ஆய்வாளர்கள் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்ட வேகம் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தினர். நுட்பமான சில விஷயங்களை பரிசோதனை செய்யாமல் இதனை பயன்பாடுக்கு கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த அறிக்கையை அந்த மேற்கத்திய வல்லுநர்களுக்கான பதிலாக ரஷ்யா பார்க்கிறது.

இந்த தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டுவிட்டதாக கடந்த மாதம் விளாதிமிர் புதின் தெரிவித்து இருந்தார். தனது மகள்களில் ஒருவருக்குக் கூட அந்த தடுப்பூசி போடப்பட்டதாக அவர் கூறி இருந்தார்.

அந்த அறிக்கை கூறுவது என்ன?

ஸ்புட்னிக் வி என்ற அந்த தடுப்பூசிக்கு இரண்டு பரிசோதனைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்ததாக அந்த மருத்துவ சஞ்சிகை தெரிவிக்கிறது.

தலா 38 மருத்துவ தன்னார்வலர்களுக்கு அந்த தடுப்பூசி முதலில் செலுத்தப்பட்டதாகவும், அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அந்த சஞ்சிகை கூறுகிறது.

பக்க விளைவுகள் பெரிதாக இல்லை

18 வயது முதல் 60 வயது வரை உடைய அந்த தன்னார்வலர்கள் 42 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டதாக கூறும் அந்த சஞ்சிகை, அனைவரது உடலிலும் ஆண்டிபாடிஸ் எனப்படும் எதிர்ப்பான்கள் மூன்று வாரங்களில் வளர்ந்ததாக அந்த சஞ்சிகை கூறுகிறது.

மிகவும் பொதுவான பக்க விளைவுகளாக தலைவலி மற்றும் மூட்டு வலி ஆகியவை இருந்தன.

ஆய்வு முறை குறித்த கருத்துகள்

இந்த பரிசோதனைகள் திறந்த முறையில் நடத்தப்பட்டன என்றும், பரவல் முறையில் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் பொருள் வழக்கமான சோதனைகளில் செய்யப்படுவதைப் போல ஒரு சில நோயாளிகளுக்கு பொய்யான திரவம் செலுத்தப்படவில்லை. தன்னார்வலர்களுக்கு தங்களுக்கு செலுத்தப்பட்டது தடுப்பு மருந்துதான் என்று தெரியும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இது போன்ற தடுப்பூசி பரிசோதனையின்போது சிலருக்கு மருந்து போலவே தோன்றும் பொய்யான திரவம் செலுத்துவார்கள். சிலருக்கு மருந்து செலுத்துவார்கள். தங்களுக்கு செலுத்தப்பட்டது எது என்று நோயாளிகளுக்குத் தெரியாது. பிறகு இரு குழுக்களின் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

இதைப் போன்ற ஒப்பீடு ரஷ்ய தடுப்பூசிக்குத் தேவை என்றும், இந்த சோதனைகளைப் பெரிய அளவில், நீண்ட காலத்துக்கு நடத்தவேண்டும் என்றும் மேலதிக கண்காணிப்பு தேவை என்றும் இந்த லான்செட் அறிக்கை கூறுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் நீண்டகாலப் பாதுகாப்பு, கோவிட் -19 தொற்று நீண்டகாலம் ஏற்படாமல் தடுப்பதற்கான இத் தடுப்பூசியின் திறன் ஆகியவற்றை அப்போதுதான் நிறுவ முடியும் என்கிறது அந்த அறிக்கை.

இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனையில், பலதரப்பட்ட வயது வரம்பும், இடர் வாய்ப்பும் உள்ள 40 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பாளர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய தடுப்பூசியை காரணமே இல்லாமல் விமர்சித்தவர்களுக்கான பதில் இதுவென இந்த தடுப்பூசிக்கு பின்னால் உள்ள ரஷ்ய முதலீட்டு நிதியத்தை சேர்ந்த கிரில் டிமிட்ரிவ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு இதுவரை 3000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறி உள்ளார்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, அதிக தொற்று ஆபத்துள்ளவர்களுக்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ரஷ்யா இந்த தடுப்பூசியை செலுத்தும் என கூறி உள்ளார்.

ஆனால் ஒரு தடுப்பூசி சந்தைக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply