ஒருவரை”கழுதை” என்று அழைப்பது, ஒருவகையில் முட்டாள் என்று அர்த்தமாகிறது. அதுதவிர தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவரை, சாதாரண பேச்சு வழக்கில் “கழுதையை போல வேலை செய்பவன்” என்றும் சொல்வதுண்டு.
இந்தியாவில் ஒரு காலத்தில் கழுதைகள் சுமை தூக்கப் பயன்படுத்தப்பட்டன. இப்போதும் சில இடங்களில் அந்த வழக்கத்தை காணலாம். ஆனால் மோட்டார் வாகனங்கள் வந்த பிறகு, கழுதைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளன.
இப்போது கழுதைகளைப் பற்றி வெளிவரும், இது போன்ற விஷயங்கள், மக்களின் ஆர்வத்தை அதிகமாக்கலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின், ஹிஸ்ஸாரில் (ஹரியாணா) உள்ள தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் (என்.ஆர்.சி.இ) விரைவில் கழுதை பால் பண்ணை ஒன்றை அமைக்கப் போவதாக டைம்ஸ்ஆப்இந்தியா செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.
ஹலாரி இன கழுதைகள் வளர்க்கப்பட்டு அவற்றின் மூலம் பால் எடுக்கப்படும் என்று அந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது.
இது தவிர, ஏபிபி நியூஸ், நவபாரத் டைம்ஸ், நேஷனல் ஹெரால்ட் போன்ற ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு, கழுதை பால் லிட்டருக்கு ரூ. 7,000 வரை விற்கலாம் என்று தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கைகளில், கழுதைப் பாலின் நன்மைகள் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது.
உண்மையில் கழுதை பாலின் நன்மைகள் என்ன, அதன் விலை லிட்டருக்கு ரூ .7,000 வரை எப்படி இருக்க முடியும்?
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தனது ஆராய்ச்சியில் பல விலங்குகளின் பாலை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இதில் பசு மற்றும் குதிரை பாலும் அடக்கம்.
கழுதை மற்றும் குதிரை பாலில் உள்ள புரதம், பசுவின் பாலில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது என்று இந்த அமைப்பு கூறுகிறது.
மேலும், இந்த பால் மனித பால் போன்றது, இது குறைந்த புரதமும் கொழுப்பும் கொண்டது, ஆனால் அதிக லாக்டோஸ் கொண்டது என்று அந்த அமைப்பு கூறுகிறது.
கழுதை
இது விரைவில் கெட்டுப் போகாது, ஆனால் அதில் இருந்து பாலாடை கட்டி தயாரிக்க முடியாது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, கழுதைப்பால் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துத் துறையில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறுகிறது,
ஏனெனில் இது செல்களைக் குணப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.
பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளரான கிளியோபாட்ரா தனது அழகை பராமரிக்க கழுதைப் பாலில் குளிப்பார் என்று கூறப்படுகிறது.
என்.ஆர்.சி.இ முன்னாள் இயக்குநர் டாக்டர் முக்தி சாதன் பாசு கூறுகையில், “கழுதைப் பாலில் இரண்டு முக்கிய நன்மைகள் உள்ளன. முதலில் இது பெண்களின் பால் போன்றது, இரண்டாவதாக அதில் ஆண்டி ஏஜிங், ஆண்டி ஆக்சிடென்ட் மாறும் ரிஜெனரேட்டிங் காம்பவுண்ட்ஸ் உள்ளன, இவை தோலுக்கு சத்துணவு அளிப்பதுடன், அதை மென்மையாக்க உதவுகிறது” என்று தெரிவித்தார்.
“இந்தியாவில் கழுதை பால் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்படவில்லை, ஏனெனில் அதன் நன்மைகள் பற்றி மக்களுக்குத் தெரியாது, ஐரோப்பாவில் மக்கள் இதைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறார்கள்,வேலை செய்யும் பெண்கள், தங்களின் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட கழுதை பால் பயன்படுத்துகின்றனர், இப்போது அமெரிக்கா கூட அதன் அனுமதியை வழங்கியுள்ளது”
“இதில் லாக்டோஸ், வைட்டமின் ஏ, பி -1, பி -2, பி-6, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன. கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சோப், கிரீம், மற்றும் மாய்ஸ்சரைசர்க்கு இன்று இந்தியாவில் நல்ல சந்தை உள்ளது. பல பெண்கள் கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர் “என்று டாக்டர் பாசு கூறுகிறார்.
கழுதைப் பாலில் இருந்து தற்போது இந்தியாவில் குறைந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என டாகடர் பாசு தெரிவித்தார்.
ஆனால் அது அதிகரிக்கும்போது கழுதைப் பால் பற்றாக்குறை ஏற்படும், ஏனெனில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கழுதை எவ்வளவு பால் தரும்?
என்.ஆர்.சி.இ, கழுதை பால் பண்ணைக்காக குஜராத்தில் இருந்து ஹலாரி இனக் கழுதைகளை கொண்டு வருகிறது.
ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகத்தின் விலங்கு மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறையின் தலைவர் பேராசிரியர் டி.என் ராங்க், இந்தியாவில் கழுதைகளின் இனங்கள் குறித்து இதுபோன்ற பணிகள் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்.
“இந்தியாவில், கழுதைகளின் ஸ்பிட்டி இனம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. இப்போது ஜாம்நகர் மற்றும் குஜராத்தின் துவாரகாவில் காணப்படும் ஹராலி இனத்தின் கழுதைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த வகை கழுதை பொதுவான கழுதைகளை விட சற்று உயரமாகவும்,குதிரைகளை விட சற்று சிறியதாகவும் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இப்போது வரை இந்தியாவில், தெருக்களில் சுற்றித் திரியும் கழுதைகளின் இனம் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் இப்போது இரண்டு இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இது ஒரு நல்ல விஷயம்.”
“கழுதைகளை சரியாக கவனிக்காமல்,அதிக வேலைகள் வாங்கினால்,அதனால் பால் கொடுக்க முடியாது. ஒரு கழுதை ஒரு நாளில் அதிகபட்சம் அரை லிட்டர் பாலைக் கொடுக்கிறது என்றும் ஒவ்வொரு கழுதையின் பாலும் அதன் பராமரிப்பு முறைக்கு ஏற்ப குறையலாம்” என்கிறார் பேராசிரியர் ராங்க்.
கழுதை பால் லிட்டருக்கு 7,000 ரூபாயா?
இந்தியாவில் கழுதை பால் வணிகம், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொடங்கியிருப்பது போல அல்ல. பேராசிரியர் ராங்க் கூறுகையில், இந்தியாவில் இப்போதுதான் தொடங்கியுள்ளது, கழுதைப் பால் நிச்சயமாக விலை அதிகம்தான், ஆனால் அது லிட்டருக்கு ரூ .7,000 வரை விற்கப்படுவதில்லை.
பல்வேறு ஊடக நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ. 7,000 என்ற எண்ணிக்கையை வெளிநாட்டு செய்திகளிலிருந்து வழங்கியுள்ளன என்று அவர் கூறுகிறார்.
அதே சமயம், இது ஒரு தொடக்கம்தான் என்று டாக்டர் பாசு கூறுகிறார்,
தமிழ்நாடு, கேரளா மற்றும் குஜராத்தில் ஒரு சிலரே பண்ணையில் கழுதைகளை வளர்க்கின்றனர், அதன் கொள்முதல் பெரும்பாலும் ஆன்லைனில் தான்.
சலீம் அப்துல் லத்தீப் தாதன் மும்பையில் இருந்து www.veryrareonline.com என்ற வலைதளத்தை நடத்தி வருகிறார், இது ஒட்டகம், செம்மறி ஆடு, மாடு மற்றும் கழுதைப் பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய் மற்றும் பால்பவுடர் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பனை செய்கிறது.
“கழுதைப் பாலின் விலை நிர்ணயிக்கப்படுவதில்லை, அது பண்ணை மூலமாகவும் வருவதில்லை. கிராமத்திலுள்ள எங்கள் மக்களின் மூலம் இந்த பாலைப் பெறுகிறோம். பெரும்பாலான மக்கள் இந்த பாலை மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.
“நீங்கள் தொலைவில் உள்ள ஒருவருக்கு இதை அனுப்பும்போதுதான் லிட்டருக்கு ரூ .7,000 விலையாக இருக்க முடியும், ஏனெனில் இது விரைவாக கெட்டுவிடும். அதுவே மும்பையிலேயே உடனுக்குடன் வாங்கினால், லிட்டர் ரூ. 5,000க்கு கிடைக்கும்” என்று சலீம் கூறுகிறார்.
சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பு தவிர, வயிற்றில் உள்ள பாக்டீரியா தொற்றுகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார.
கழுதை பால் பொருட்களின் ஸ்டார்ட் அப்
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸில் எம்.ஏ படித்த பின், டெல்லியைச் சேர்ந்த பூஜா கெளல் கழுதைகளை வைத்து வேலை செய்யும் மக்களுக்கு சிறப்பாக ஏதாவது செய்ய முடிவு செய்தார். இதன் பின்னர் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் கழுதைகள் வைத்திருந்த அத்தகைய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர் ஒன்று சேர்த்தார்.
அவர் கழுதைப் பாலை பொது மக்களுக்கு விற்க ஒரு மாதிரியை வடிவமைத்தார்.
ஆனால் அது அந்த நேரத்தில் தோல்வியடைந்தது, ஆனால் அவர் அதை விட்டுவிடவில்லை, தனது சகாக்களுடன், கழுதைப் பாலில் இருந்து தோல் பராமரிப்புப் பொருட்களை தயாரித்து விற்கும் ஆர்கானிக்கோ என்ற பெயரில் ஒரு தொழிலை தொடங்கினார்.
“டெல்லியில் ஸ்டார்ட்அப் 2018 இல் தொடங்கியதும், தலைநகரை அடுத்த காஜியாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழுதைகளை வைத்திருந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டோம். அவர்கள் ஒரு நாளைக்கு 300 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தனர், ஆனால் நாங்கள் பால் விற்க அவர்களை சம்மதிக்க வைத்தோம். ஆரம்பத்தில், அவர்களது வீட்டின் பெண்கள் இதை எதிர்த்தனர். நாங்கள் இதை ஏதோ மாய மந்திரம் செய்ய கேட்கிறோம் என்றும் அவர்களின் கழுதை இறந்துவிடும் என்று அவர்கள் நினைத்தனர், ஆனால் பின்னர் அவர்கள் பால் கொடுக்க தொடங்கினர். இன்று மற்றவர்களுக்கு, நாங்கள் கழுதை பால் வாங்குவது தெரிந்து பலர் எங்களுக்கு போன் செய்கிறார்கள்” என்று பூஜா கூறுகிறார்,
தற்போது லிட்டருக்கு ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை பால் வாங்குவதாகக் கூறும் அவர், ரூ. 7,000 என்ற அளவில் கழுதைப்பால் எங்கும் விற்கப்படுவதில்லை என்கிறார் பூஜா.
கழுதை பாலால் செய்யப்பட்ட சோப், மாய்ஸ்ச்சரைசர், கிரீம் ஆகியவை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஏராளமான ஆன்லைன் ஸ்டோர்களில் காணப்படுகின்றன, ஆனால் நீங்கள் அதன் விலையை பாரத்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
100 கிராம் சோப்புக்கு 500 ரூபாய் செலவாகும் என்றும் அவற்றை வாங்க ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றும் பூஜா கூறுகிறார்.
இந்தியாவில் கழுதை நிலை
கழுதை பாலின் விலை, லிட்டருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும்போது, கழுதைகளின் எண்ணிக்கை வெறும் ஒரு லட்சமாக குறைந்துள்ளது.
2012 ஆண்டுடன் ஒப்பிடும்போது கழுதைகளின் எண்ணிக்கை 61% குறைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் விலங்குகளின் தொகை கணக்கெடுப்பில் கழுதைகளின் எண்ணிக்கை 3.2 லட்சமாக இருந்தது, இது 2019ஆம் ஆண்டின் கணக்கீட்டில் 1.2 லட்சமாக குறைந்து விட்டது.
கழுதைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் வேளையில் அவற்றின் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால்தான் அதன் விலை உயரும் நிலை உள்ளது. ஆனால் தற்போது, பிபிசி ஹிந்தியின் ஃபேக்ட் செக் தகவலில், கழுதைப் பாலின் விலை இன்னும் லிட்டருக்கு ரூ .7,000 ஆக உயரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.