இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள் “Talk to TBC” எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல் நிலவரம் தொடபாக வழங்கிய நேர்காணல்.
வினா: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், அதனூடாக இந்திய – இலங்கை நலன் சார்ந்த விடயங்கள், பிராந்திய அளவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றனவற்றை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர் கொள்வது? இவை குறித்த சில விடயங்களை எதிர்பார்க்கிறோம்.
விடை: ஒரு வகையில் பார்த்தால் இவை பழைய நிலைக்கே திரும்பியுள்ளன. அதாவது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போரிற்கு முன்னர் இருந்த மட்டத்திற்குச் சென்றுள்ளது.
ஆனால் உலக சூழலும், இலங்கையின் உள்நாட்டுச் சூழல்களும் மற்றும் இந்திய – பசுபிக் பெருங்கடல் சூழலும் மாறியுள்ளன.
நான் காணும் குறைபாடு எதுவெனில் பலரும் பழைமை நிலமைகளையே பேசிக்கொள்கின்றனர். நான் திரும்பத் திரும்பக் கூறுவது என்னவெனில் பழைய நிலமைகளில் அதிக பாடங்கள் உள்ளன.
இவை நமக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களையும் மறக்க முடியாது. ஏனெனில் அவர்களும் சாமான்ய மக்கள் இவற்றால் பாதிக்கப்பட்டார்கள்.
இவற்றை நாம் ஓர் நெடுங் கதையாகப் பார்த்தால் பலர் இதனை இலங்கையில் கூறினால் என்னைத் துரோகி என்பார்கள். அது மிக எளிதாக முடிவுறும் பேச்சாகவே அமையும். ஆனால் இவைபற்றி நாம் ஆக்கபூர்வமாகப் பேசுதல் அவசியம் என்பதே எனது அடிப்படை வேண்டுகோள்.
இந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி கனடிய தமிழர் ஒன்றியம் இவ்வாறான நேர்காணல் ஒன்றினை என்னுடன் நடத்தினார்கள்.
அதில் முக்கியமான தமிழ் தலைவர்கள் உருத்ரகுமார் உட்பட பலர் பேசினர். நான் அடிப்படையில் தெரிவிப்பது என்னவெனில் நாம் புதிய பார்வையை நோக்கிச் செல்லவேண்டும்.
அவ்வாறெனில் அப் புதிய பாதையின் வடிவம் என்ன? நாம் இன்று கணிப்பது போலிருக்காது. ஏனெனில் கோதபய ராஜபக்ஸ பதவி ஏற்ற பின்னர் அரசியல் மட்டுமல்ல, சகல மக்களினதும் வாழ்வு முறையை மாற்றும் கருத்துக்களை அவர் முன்வைக்கிறார்.
இவ்வாறான நிலை அவரது சகோதரர் மகிந்த பதவியில் இருந்தபோது காணப்படவில்லை. எனவே மகிந்த ஆட்சி மீண்டும் ஏற்பட்டுள்ளதாகப் பேசுவதில் அர்த்தமில்லை.
இதனை எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதன் மூலமே அவதானிக்க முடியும். அவர் தனது உரையில் இலங்கை என்பது பெரும்பாலான தேரவாத பௌத்தர்கள் வாழும் நாடு என்பதால் சிங்கள பௌத்த கலாச்சாரத்தினைப் பாதுகாப்பது தனது கடமை என்றார்.
அவரது முதலாவது உரையே அவ்வாறுதான் ஆரம்பமாகியது. அதனை அவர் மூன்று தடவைகள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். அதனை நாம் பகைமை உணர்வுடன் அணுக முடியாது.
இதைப் போல மாற்றங்கள் பல நாடுகளில் நடைபெறுகிறது. அதனால் இதனை யதார்த்த ரீதியாகவே எடுத்துச் செல்லல் வேண்டும்.
ஆரம்பமே அவ்வாறான பகைமை உணர்வுடன் ஆரம்பித்தால் ஆக்கபூர்வமான செயல்கள் எவை? என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். இவ்வாறாக மகிந்த பதவியில் இருந்த வேளையில் கோதபய கூறவில்லை.
அடுத்ததாக இவர் எடுத்துள்ள முடிவுகள் பற்றியதாகவும், அவற்றில் முக்கியமான சிலவற்றில் 19வது திருத்தம் சம்பந்தமானதாகவும், அதில் பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவது மட்டுமல்ல, ஜனாதிபதியை ஓரளவு கட்டுப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
அதனை நீக்கி 20வது திருத்தத்தைத் தற்போது அவர் முன்வைத்துள்ளார். அவற்றில் அடிப்படை மாற்றங்கள் உள்ளன. அவர் முழு அதிகாரங்களையும் தமது கையில் எடுத்துள்ளார்.
அம் மாற்றங்களை அவர் யார் மூலமாக நிறைவேற்ற எண்ணுகிறார்? என்பதை நாம் அவதானிக்க வேண்டும். அவர் திறமை வாய்ந்த சட்டத்தரணியான அலி சப்ரி மூலமே நிறைவேற்றுகிறார்.
அவர் யார்? அரச மந்திரி சபையில் அமைச்சர் அந்தஸ்துள்ள ஒரே ஒரு உறுப்பினராகும். இது ஒரு சமிக்ஞை ஆகும்.
இரண்டாவது சமிக்ஞை எதுவெனில் அவர் சிறுபான்மையினருக்கு ஏற்றவாறான பங்கை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு சில சமிக்ஞை மூலம் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். உதாரணமாக தாம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தருணமாகும்.
இச் சம்பவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருவான்வெலிசாயா விகாரையில் மேற்கொள்கிறார்.
அதாவது தாம் “கூறியதைச் செய்பவர்” என்பதை அடையாளப்படுத்தவே அவ்வாறு தெரிவு செய்தார். அவர் மறைத்துச் செயற்படும் ஒருவர் அல்ல. ஏனெனில் அவர் அரசியல்வாதி அல்ல, முன்னாள் ராணுவ வீரர் என எண்ணியே உரையாற்றுகிறார்.
அரச திணைக்கள நிர்வாகங்களில் முன்னாள் ராணுவ, கடற்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கென ‘வியத் மக’ எனத் தனியான அமைப்பைத் தோற்றுவித்துள்ளார். அதன் தலைவராக பஸில் ராஜபக்ஸ செயற்படுகிறார்.
அவர் மந்திரி சபையில் இல்லாத போதிலும் வெளியிலிருந்து கட்டுப்படுத்துகிறார். எனவே அணுகுமுறை வேறு விதமாகச் செல்வதை அவதானிக்க வேண்டும்.
இம் மாற்றங்களை அவரது கட்சி சார்ந்த அரசியல்வாதிகளால்கூட புரிந்து கொள்ள முடியுமா? என்பதில் எனக்குச் சந்தேகமே. எனவே இவை பற்றித் தீர்க்கமாக புரிந்து கொண்டபின்னரே ஏனையவற்றை நோக்கலாம்.
வினா: தற்போது அரசியல் அமைப்பு அடிப்படையிலான ஆட்சி முறை என்பது கேள்விக்குட்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்.
அதாவது இலங்கை என்பது ஜனநாயக சோசலிசக் குடியரசு எனில் அங்கு ஜனநாயகமும் இல்லை. சோசலிசமும் இல்லை என்ற நிலை காணப்படுகிறது.
அதிகாரம் மீளவும் ஜனாதிபதியின் கைகளில் குவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் நாட்டின் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன?
பதில்:
இவை பற்றி என்னை விட ஊடகம் என்ற வகையில் நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த நிலமைகளை ஜனநாயகத்திற்கான ஆபத்து எனக் கூறமாட்டேன்.
ஏனெனில் இது ஜனநாயகத்தை முழுமையாக வளர்க்கத் தவறியதன் விளைவு ஆகும். விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னர் 10 ஆண்டுகள் பதவியிலிருந்த மகிந்தவை பதவியிலிருந்து அகற்றியதும் இதே மக்களே.
அவர்கள் மீண்டும் ஏன் ராஜபக்ஸவை ஆட்சியில் அமர்த்தினார்கள்? இந் நிலையில் அவர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துள்ளதா? அவரைத் தோற்கடிப்பதற்கான அரசியல் காரணங்களை நிறைவேற்றினார்களே தவிர கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இலங்கை மக்கள் அவ்வாறான முடிவுக்குச் செல்லக்கூடாது. நான் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகக் கூறவில்லை. ஒரு இடைக்கால தோல்வி அல்லது பின்னடைவு என்பேன்.
வினா: நீங்கள் குறிப்பிடுவது போல பின்னடைவு என எடுத்துக்கொண்டால் இங்கு 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுள்ள அரசியல் யாப்பு செயற்பாட்டிற்கு வருகிறது.
அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், போர் என்பவற்றின் பின்னணியில் ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றார்கள்.
ஆனால் அவர்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இவ்வாறான பின்னணியில் தற்போது கிடைத்துள்ள மூன்றில் இரண்டு
பெரும்பான்மை மூலம் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியுமா?
பதில்:
இது கடினமான கேள்விதான். அவர்கள் பார்வையில் அது முக்கியமானது அல்ல எனக் கருதுவதாக எண்ணுகிறேன். ஏனெனில் 13வது திருத்தம் என்பது இந்தியாவால் ஓரளவு கிடைக்கப்பட்டது.
அத் திருத்தத்தில் வெற்றியும், தோல்வியும் உண்டு. அது பலரும் அறிந்ததே. இருப்பினும் அத் திருத்தம் அடிப்படையில் தமிழர்களுக்குச் சுயாட்சி என்றால் என்ன? என்பதைக் காட்டுகிறது. அவ்வளவுதான்.
அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழர்களும் அதனைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.
நாம் அதனை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் அது செயற்படுத்தப்பட்ட வேளையில் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் இந்தியாவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகள் ஒத்துழைப்பு வழங்கிய அளவிற்கு தலைவர் அமிர்தலிங்கம்கூட ஒத்துழைக்கவில்லை.
நான் அவரைச் சந்தித்த வேளைகளில் பலதடவைகள் கூறியுள்ளேன். அவர் அதற்கான தெளிவான விளக்கங்களையும் தந்தார். அவரை நான் நன்கு அறிவேன்.
அவர் மரணித்த தினத்தன்று நான் கொழும்பிலிருந்தேன். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பில் நின்ற வேளையில் அவரைச் சந்தித்து “ ஐயா, நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது.
அரசியல் ரீதியாக நீங்கள் என்ன செய்விர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்” என்றேன்.
“இது தீயுடன் விளையாடுவது போன்றது. நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்” என்றேன்.
அவரது வீடு ஒரு சந்திற்குள் உள்ள பாகாப்பான இடம்தான். அவர் நான் கொழும்பில் இருந்தமையால் என்னை அழைத்து வீட்டின் பாதுகாப்பைச் சரி செய்யுமாறு வேண்டினார்.
நான் பார்வையிட்டு ஒரு வாரத்தின் பின்னர் நான் இலங்கைக்குக் கூட்டமொன்றிற்காக ஆகஸ்ட் மாதமளவில் வந்தபோது அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
“ ஐயா, உங்களை முக்கியமான விடயத்திற்காக சந்திக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தபோது நாம் தங்கியிருந்த ஹோட்டலில் தமக்கும் ஓர் கூட்டம் இருப்பதால் தாம் அங்கு சந்திப்பதாக தெரிவித்தார்.
ஆனால் சில நிமிடங்களின் பின்னர் அங்கிருந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றார்.
இதை இங்கு நான் குறிப்பிடுவது ஏனெனில் அவர் சிறந்த அரசியல்வாதி. அவரை முழுமையாகப் பயன்படுத்த நாம் தவறிவிட்டோம்.
நாம் தொடர்ந்தும் தமிழ் அரசியல்வாதிகள் இன்று வரை தமது ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொள்வதற்கு நாம் உற்சாகம் வழங்க வேண்டும். பயமுறுத்தல்கள் காரணமாக அவர்கள் பாதுகாப்புத் தேடி அலைய வேண்டியுள்ளது.
இவ்வாறு கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டுள்ளோம்.
நான் அவர்களைக் குறை கூறவில்லை. ஆனால் தற்போது அவ்வாறான சூழல் இல்லை. அதனால் அவர்கள் ஒருங்கிணைந்து ஓர் உருவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான சூழலில் நாம் எவ்வாறு செயற்படுவது? ஜனநாயகச் சூழல் இல்லாவிடினும் அக் குறைபாடுகளை எடுத்துக் காட்டும் வாய்ப்பு உள்ளது. இவை தொடரக்கூடாது என உணர்ந்து இதர கட்சிகளோடு தொடர்புகளை மேற்கொண்டால்தான் விடிவு.
வினா: நீங்கள் குறிப்பிட்டவாறு 1987ம் ஆண்டளவில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகியன இணைந்து செயற்பட்டன.
இவ் வேளையில் நிலமைகள் குறித்து தலைவர் அமிர்தலிங்கம் அவர்களோடு பேசிய வேளையில் அவர் மிகவும் அழுத்தத்தில் சிக்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
அவ்வாறான சூழலில் எம்மைத் தொடரும்படி வேண்டினார். துர்அதிர்ஸ்ட வசமாக அவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அப்போது யார் யார் 13வது திருத்தத்தை எதிர்த்தார்களோ அவர்கள் இன்று அதன் தேவையை வற்புறுத்துகிறார்களே! இதில் நாம் என்ன செய்ய முடியும்?
பதில்: ( சிரிப்புடன் ) இதன் பின்னணியை நீங்களே அறிவீர்கள். இவை தொடர்பான சிறு வரிச் செய்திகளுடன் பல வரிகளை உள்ளடக்கும் பின்னணி வருகிறது.
வினா:
நாம் இலங்கையில் பல தலைவர்களுடன் உரையாடிய வேளையில் இலங்கையில் தமிழ் மக்களுக்குரிய ஒரே பாதுகாப்பு 13வது திருத்தமே என்கின்றனர்.
புதிய யாப்பு உருவாக்கப்பட்டாலும், அத் திருத்தம் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை இந்தியாவே வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்கள். இலங்கை – இந்திய உறவுகளும் தற்போது நன்றாகவே உள்ளது.
குறிப்பாக பல அபிவிருத்திகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இவை வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, தெற்கிலும் நடைபெறுகிறது. இவ் வேளையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளிலும் கரிசனை கொண்டிருக்கிறது.
நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் இணைந்து இந்தியா சென்றதும் இல்லை.
இலங்கையிலும் இணைந்து இதுதான் வேண்டும் எனக் கேட்டதும் இல்லை. இதுவே நம்முள் காணப்படும் பாரிய பிரச்சனை.
பதில்: அந்த தலைவர்களை நீங்களே வாக்களித்து தேர்ந்தெடுத்தீர்கள். நான் எப்படிப் பதிலளிக்க முடியும்? திரு. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்ததில்லை.
தமிழர் தேசியக் கூட்டமைப்பினரே அவரை அழைத்து முதலமைச்சாராக அமர்த்தினார்கள். அவரது செயற்பாடு பற்றி நான் எழுதியதால் அவர் என்னில் கோபமாக உள்ளார்.
இதில் கோபிப்பதற்கு எதுவுமில்லை. நல்ல உள்ளம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களை உதவக்கூடாது. போகக்கூடாது எனத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
யார் உதவினார்கள்?
போர் முடிந்த பின்னர் அவலப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமோ, வீடுகளோ இல்லை. அவ் வேளையில் தமிழ் நாட்டிலிருந்து ‘அசின்’ என்ற மலையாள நடிகை அங்கு சென்று பலருக்குக் கண் சிகிச்சை அளிக்க உதவினார்.
இதனைத் தடை செய்யவேண்டும் என தமிழ் நாட்டில் குரல் எழுப்பினார்கள். தமிழர்களே இவ்வாறு செயற்படும்போது சிங்கள மக்களைக் குறை கூறுவதில் பலனில்லை. இதில் ஊடகங்களின் அழுத்தம் முக்கியமானது.
வினா: தற்போது 13வது திருத்தத்தினை அவதானிக்கையில் அதன் உள்ளடக்கம் படிப்படியாக அகற்றப்பட்டு வெறும் ‘கோது’ மட்டுமே உள்ளது.
இந் நிலையில் 13வது திருத்தத்தினை நீக்கப் போவதாக அரசு கூறுகிறது. இது குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய கவலை காணப்படுகிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் தம்முடையது ஆனால் 13வது திருத்தம் இலங்கையின் தயாரிப்பு என்பதால் இலங்கை அது குறித்து மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து எமக்கு கவலை இல்லை என இந்திய தரப்புக் கூறுகிறது.
எமது கேள்வி என்னவெனில் இலங்கை அரசு இதனை எடுத்த பின் இந்திய தரப்பின் உதவியுடன் உருவாக்கப்படும் புதிய பகுதியை இணைக்கும் நோக்கம் உள்ளதாக நாம் கருத முடியுமா?
பதில்: இப் பிரச்சனையை இந்தியாவின் தமிழ் நாட்டின் கோணத்திலிருந்து பார்க்கிறேன். 2021ம் ஆண்டு தமிழ் நாட்டில் புதிய தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதில் தி மு க, அ தி மு க என்பன இரு அணிகளாகப் பிரிந்துள்ளன. இப் பின்னணியில் அ தி மு க விற்கு மத்திய அரசுடன் நெருங்கிய உறவு உள்ளது.
அ தி மு க விற்குள் விரிசல்கள் எழுந்தபோது மத்திய அரசு தலையிட்டு அவை ஒட்டப்பட்டுள்ளன. தற்போது வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழ் நாட்டில் தம்மைப் பலப்படுத்த பாரதிய ஜனதாக் கட்சி பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ் ஊடகங்களும் இவை பற்றி விமர்ச்சித்து வருகின்றன.
பல்வேறு தலைவர்கள் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்புலத்தில் இப் பிரச்சனைகளை யாரிடத்தில் முன்வைப்பது? இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்கள் பலரும் ஏற்கும் வகையிலான அரசியல் பொதி ஒன்றினைத் தயாரித்து வழங்கி அந்த ஆபத்தைத் தவிர்க்கலாம்.
அதற்குத் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களின் உதவி தேவை. அதனையும் உபயோகித்தால் சாத்தியமாக்கலாம்.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்திய – சீன நெருக்கடிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. இங்கு கோதபய அவர்கள் பாதுகாப்பு விடயங்களில் தாம் இந்தியாவின் பக்கமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அது ஒரு முக்கியமான அறிகுறி. இலங்கையின் தூதுவர்களாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரித்தானியா என்பனவாகும்.
இலங்கையின் வெளிநாட்டுச் செயலராக அட்மிரல் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்து சமுத்திரத்திலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பார். இந் நியமனம் என்பது இன்னொரு சமிக்ஞை ஆகும். அட்மிரல் கொலம்பகே வழங்கிய ஊடக அறிக்கையில் நான் குறிப்பிட்டவற்றையே தெரிவித்துள்ளார்.
அடுத்து மிலிந்த மொறகொட அவர்களின் நியமனமாகும். அவர் இந்தியாவை முழுமையாக அறிந்தவர். அவர் நெருக்கடி நிறைந்த சூழல்களில் செயற்பட்டுள்ளார். பொருத்தமான ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
கோதபய தனது ஜனாதிபதி பதவி ஏற்பு முடிந்தவுடன் இந்தியா வந்தபோது ‘இந்து’ பத்திரிகைக்கு செவ்வி வழங்கியுள்ளார்.
அதில் இந்தியாவுடன் நல்லுறவை வைத்திருப்பதே தனது விருப்பம் என்றார். மகிந்த காலத்தில் சிறிது விரிசல் ஏற்பட்ட போதிலும் 2017 இல் பிரதமர் மோடி இலங்கை வந்திருந்த வேளையில் அவரைத் தனியாகச் சந்தித்தார்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு மற்றும் இந்திய – இலங்கை நட்புறவு பற்றிப் பேசினர்.
அப்போது மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்திருந்த வேளையில்தான் அச் சந்திப்பு நிகழ்ந்தது.
ஏன் அச் சந்திப்பு அவசியமாகியது? இதுவும் நட்புறவை வளர்ப்போம் என்பதற்கான அடையாளமாகும்.
இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வாறான சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. நாம் பழமைக்குள் நில்லாது புதிய உத்வேகம் எது? இந்தியா எதற்கு முன்னுரிமை வழங்கும்? எனப் புரிதல் வேண்டும்.
13வது திருத்தத்தினை எடுக்கக்கூடாது.
இதன் அடிப்படை நியாயம் என்பது மாநில அளவிலான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவை முழு அளவில் இல்லையாயினும் மாற்று ஏற்பாடுகள் எவை? ஏற்கெனவே நீர்த்துப்போயுள்ள நிலையில் தொடர்ந்தும் நீர்த்து விடாமல் தடுக்க என்ன செய்யலாம்? இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்.
இவை குறித்துத் தமிழ் நாட்டிலோ அல்லது டில்லியிலோ யாரும் சிந்திக்கப் போவதில்லை. அவர்களின் முன்னுரிமைகள் வேறானவை. அதுவும் தேர்தல் வந்தால் அவர்கள் கவனம் திரும்பி விடும்.
எனவே தமிழ் தலைவர்களே அதனைத் தயாரித்து வழங்க வேண்டும். அதில் சில பகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாவிடினும், சிறிய அளவிலாவது விட்டுக் கொடுக்கும் நிலை வேண்டும். இதுதான் வழி என நம்புகிறேன்.
வினா: நீங்கள் தலைவர்களின் பணி குறித்து தெரிவித்த அதே வேளையில் இலங்கையின் அரசியலில் பௌத்த மகா சங்கங்கள் அரசாங்கத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அவர்களின் கருத்துப்படி இந்தியாவில் இந்து மதமும், இலங்கையில் பௌத்த மதமும் ஒரே சமாந்தரமாக பயணிப்பதால் நாம் சிறுபான்மையினர் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும், இந்திய அழுத்தங்கள் பாரிய அளவில் இருக்காது எனவும் வாதிடப்படுகிறது. உங்கள் அபிப்பிராயம் எவ்வாறனது?
பதில்:
( சிரிப்புடன் ) இலங்கையில் தேர்தல் அண்மிக்கும் போது அவர்களின் ஆளுமை அதிகரிக்கும். அதில் ஒன்று இந்தியாவைச் சாடுவது. அடுத்தது இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது.
இக் கருத்து சரித்திர ரீதியாக அமைந்தது என்பதே உண்மை. இந்தியாவில் வெளியேற்றப்பட்ட பௌத்தர்கள் இலங்கையில்தான் தஞ்சமடைந்தார்கள்.
பலர் தமிழ் நாட்டிலிருந்த போதிலும் இலங்கையில்தான் அதிகம் தஞ்சமடைந்தார்கள். அதனால் அந்த மனப்பான்மை வளர்க்கப்பட்டது. இதனை மிகைப்படுத்த இடமளிக்கலாகாது. இதனைப் பழுத்த அரசியல்வாதியான மகிந்த நன்கு அறிவார்.
மகிந்த, கோதபய ஆகியோர் பௌத்த மதம் தொடர்பாக மேலோங்கும் கருத்துக்களை எதற்காக முன்னிலைப்படுத்துகிறார்கள்? தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவா? அல்லது முற்றிலுமாக மாற்றி அமைக்கவா? ஆனால் அவர்களால் முற்றிலுமாக மாற்ற முடியும் என நான் நம்பவில்லை.
உலகளவில் எவ்வாறு மதங்களுக்கு எதிராக மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை இலங்கையிலும் உண்டு. இவர்கள் சொல்வதால் சகலரும் வாக்களிப்பார்கள் என எண்ணவில்லை.
இருப்பினும் அவர்களிடம் தற்போது வலுவுள்ளது. அவர்கள் ராஜபக்ஸவினரை ஆதரித்தார்கள். தொடர்ந்தும் ஆதரிப்பார்கள்.
உதாரணமாக டில்லியிலுள்ள அரசியல்வாதிகளின் முடிவுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது போல கொழும்பின் முடிவுகளும் தாக்கமும் அதிகமானது.
தற்போது புத்த சாசனத்தை ராஜபக்ஸ குடும்பத்தினர் கையிலெடுத்துள்ளார்கள். அவர்கள் கிராமப் புறத்திற்கு எவை அவசியமோ, அதனை ஆரம்பித்துள்ளார்கள்.
கிராமப்புற மேன்மைகள், சிறு தொழில் முன்னேற்றம், சிறு வணிகம் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையிலான கடன் வசதிகள் இதுவரை மறுக்கப்பட்ட உரிமைகள் என ஏற்பாடுகள் உள்ளன.
எனவே அண்மித்துள்ள மாகாணசபைத் தேர்தலுக்கு இவற்றையே முழுமையாக உபயோகிப்பார்கள். இவற்றில் முழுமையாக அரசியல் உடன்பாடு இல்லாமையால் பௌத்த மதத்தை முன்னிறுத்திச் செல்வதாக நான் எண்ணவில்லை.
நீங்கள் பலரும் இலங்கையோடு தொடர்புகளை வைத்திருப்பதால் புதிய பக்கத்தை ஆரம்பித்து அதிலிருந்து ஆரம்பிக்கும்படி கூறுகிறேன். அவ்வாறான மாற்றத்தின் மூலமே இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியும்.
ஐ தே கட்சி முற்றாக அழிந்துள்ளது. சஜீத் பிரேமதாஸ அவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்துச் சில குறியீடுகளைக் காண்பிக்கிறார்.
அதாவது பௌத்த மதத்திற்கு ஆதரவாகப் பேசி வருகிறார். இவரது உரைக்குத் தமிழர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இலங்கையின் கல்விச் சமூகத்தினர் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்பவர்கள். எதிர்த்தும், எழுதியும், பேசியும் வருகின்றனர்.
தயான் ஜயதிலக போன்றவர்கள் 13 வது திருத்தத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேசியும், எழுதியும் வருகிறார். அவர் இவர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டவர்.
தற்போது அரசியலமைப்பு மாற்றம் ஏற்படப் போவதாகத் தெரிவித்தீர்கள். இச் சந்தர்ப்பத்தில் எச்சரிக்கையாக செயற்பட்டு எதிர்க் கட்சிகளுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசியலமைப்பு மாற்றம் என்பது எளிதாக நடந்துவிடப் போவதில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது.
ஏனெனில் பல அம்சங்களில் கட்சி மட்டங்களில் முரண்பாடு வெளிப்படுகிறது. எனவே இவை எளிதாக நடைபெற வாய்ப்பு இல்லை. அதற்கு இப்போதிருந்தே விழிப்புடன் செயற்பட வேண்டும். அதனைச் செய்ய முடியும்.
வினா: தற்போது சீன முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இவை இந்திய – இலங்கை உறவை எவ்வாறு மேம்படுத்த உதவும்?
விடை: அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு மகிந்த கையளித்த பின்னர் அவரைச் சந்தித்த வேளையில் இதனை இந்தியாவை ஏற்கும்படி ஒரு வருடமாகக் கேட்டேன். பதிலில்லை. அதனால் சீனா உதவ முன்வந்தது. கொடுத்தோம் என்றார்.
அப்போது இந்திய – இலங்கை உறவை எவ்வாறு பார்க்கிறீர்கள்? எனக் கேட்டபோது இந்தியா எமது குடும்பம். சீனா எமது நண்பர் என்றார். இதே கருத்தைத்தான் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கோதபய அவர்கள் யதார்த்தவாதி. அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. பாதுகாப்பிற்கான அடிப்படைகளுக்கு எவை மேற்கொள்ளப்பட வேண்டும்? இதில் சீனாவைத் தவிர்க்க முடியாது.
அவர்கள் ஆழமாகக் கால் வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவையும் தவிர்க்க முடியாது.
சமீபத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை தொடர்பாக இந்தியா, யப்பான் இணைந்து கைச்சாத்திட்டுள்ளன.
இவ் ஒப்பந்தம் செயற்படுத்த முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு வெளிநாட்டுச் செயலர் கொலம்பகே அளித்த நேர்காணலில் ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்கிறார்.
யப்பானிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தாமதங்கள் ஏற்படலாம். இந்தியாவும் கொரொனா பிரச்சனை, இந்திய – சீன விவகாரம் போன்ற பிரச்சனைகளால் தாமதப்படலாம் எனக் கருதுகிறேன்.
இந் நிலமைகளைச் சீனா எவ்வாறு பயன்படுத்தும்? எனப் பார்த்தால் சீனாவும் பல அழுத்தங்களை எதிர்நோக்குகிறது. இரண்டு நெருக்கடிகள் உள்ளன.
கொழும்புத் துறைமுகத்தில் ஒரு முனையைச் சீனாவே கட்டுப்படுத்துகிறது. அதன் வர்த்தகம் நடைபெறுவதற்கு இந்திய உதவி தேவை. அங்கு 70 சதவீதமான கொள்கலன்கள் இந்தியாவிலிருந்தே வருகின்றன. இவை குறைய வாய்ப்பு உண்டு.
இலங்கை அரசு சீனாவுடன் சுதந்திர வர்த்தகம் ஒன்றில் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கெனவே இந்தியாவுடன் அவ்வாறான ஒப்பந்தம் உள்ளது.
தற்போது அமெரிக்க டொலர் 5 பில்லியன் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் சீனாவிற்கும் பல்வேறு அழுத்தங்கள் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள பாதுகாப்புச் சூழல் முழுமையாக மாறியுள்ளது. அமெரிக்கப் பார்வையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உதாரணமாக இந்தோ – பசுபிக் என்ற உருவகத்தை ஒபாமா காலத்திலேயே ஆரம்பித்துள்ளார்கள். அவை முன்னர் கிழக்கு பசுபிக் என அழைக்கப்பட்டது.
இதில் இந்தியா தனது பாதுகாப்புத் தொடர்பாக அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பல முன்னேற்றங்கள் அதாவது இரண்டு விமானத் தளங்கள் மற்றும் துறைமுகம், கொள்கலன் முனை என பல திட்டங்கள் உண்டு.
இவை சிறிது காலமெடுக்கலாம். ஆனால் கடற்படைத் தளம் நிச்சயம் விரைவில் உருவாகும். இங்கு சீனக் கப்பல்கள் சிங்கப்பூர் வழியாக வரும்போது மிக அருகில் நிக்கோபார் உள்ளது. இதனால் இப் பாதையை வேண்டிய நேரத்தில் தடைசெய்து அச்சுறுத்தலாம்.
இந்தியா தற்போது சிங்கப்பூர், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
தற்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது. இங்கு இந்தியா, யப்பான், அமெரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் நாலுபக்கமும் மூடப்பட்ட அடைப்பாக மாறியுள்ளன.
இந் நாடுகள் அமைச்சர்கள் மட்டத்தில் அடிக்கடி சந்திக்கின்றனர். இதன் அடிப்படை எதுவெனில் இந்தோ – பசுபிக் கடற்பாதையில் கடற் போக்குவரத்து தடையின்றி நிகழ்வதை உறுதி செய்வதாகும். அதாவது உலக கடற் போக்குவரத்தை உறுதி செய்வதும், தென் சீனக் கடலில் சீனாவின் அதிகரித்த நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுமாகும்.
சீனா தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படையின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது அதன் பலவீனமாகும். அதனை மாற்றுவதற்கு தற்போது பல முயற்சிகள் எடுத்து வருகிறது.
அமெரிக்க ராணுவப் பத்திரிகை ஒன்று சீனாவின் ராணுவ வளர்ச்சியை விபரமாகத் தந்துள்ளதுடன் அவை அமெரிக்காவிற்குப் பெரும் சவால் எனவும் தெரிவித்துள்ளது.
இவை பற்றிய விபரங்களை கோதபய நன்கு அறிவார். இதனால் அவர் சீனா இலங்கைக்குள் வரமுடியாது எனக் கூறமுடியாது.
சீனா தொடர்பாக கோதபயவின் ஆதரவின் அளவு குறித்தும் சீனா நன்கு அறியும். கோதபயவிற்கு அதிக அழுத்தம் கொடுத்தால் அவரை இந்தியாவின் மடியில் தள்ளுவதாக அது அமையும்.
தமிழ் மக்கள் மத்தியிலே சீனா என்பது பூதம் எனப் பூச்சாண்டி காட்டப்படுகிறது. தற்போது இந்திய – சீன உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரதமர் மோடி அவர்களும் சீனா தொடர்பாக தீர்க்கமான முடிவுக்குச் சென்றுள்ளார். இங்கு முக்கிய பல அரசுகளின் போக்குகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
வினா:இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் 13வது திருத்தம் குறித்துப் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது தேவையற்றதா? அல்லது கவனத்திற்குரியதா?
பதில்: இந்தக் கவலை வேண்டும். மெத்தனமாக இருந்தால் போதாது. நாம் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டியன குறித்து அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இங்கு புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் அவர்களின் உறவுகள் அங்கு வாழ்கிறார்கள். அரசியல் உறவை நான் குறிப்பிடவில்லை.
சாமான்ய மக்களுடன் உறவுகள் வைத்துள்ளனர். அடிக்கடி அங்கு செல்கிறார்கள். ஊடகங்கள் மூலமான தொடர்புகள் உண்டு. அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பல்வேறு பிரச்சனைகளான காணமல் போனவர்கள், போர்க் குற்றங்கள் போன்றன எடுக்கப்பட வேண்டும். அடுத்த மாதம் இவை வரப் போகின்றன. இவ்வாறான தமிழர் பிரச்சனைகள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இருப்பினும் 13வது திருத்தம் தொடர்பாக மெத்தனமாக இருக்க முடியாது.
கோதபயவிற்கு பாராளுமன்ற பலம் அதிகம். பலசாலியைக் கண்டால் பலரும் ஒன்று திரள்வர். இவை ஜனநாயக நாடுகளில் நடைபெறுகிறது. ‘தடி எடுத்தவன் தண்டல் காரன்’ என நிலமை மாறும்போது மக்கள் இந்த விவகாரம் எமக்கு எதற்கு? என விலகுவார்கள். இதற்காகத் திரும்பத் திரும்ப எழுதவும், பேசவும் வேண்டும்.
கேணல். ஹரிஹரன் அவர்களுடன் “Talk to TBC” எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல் நிலவரம் தொர்பாக 08.09.2020 திகதி மேற்கொண்ட எழுத்து வடிவம்