ஆடிகம பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் தப்பிச் சென்ற சிறுமிகள் ஐவர் ஆனைமடு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தேகம, ஆனைமடு மற்றும் தப்போவ பகுதிகளை சேர்ந்த 12 – 15 வயதிற்கு இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். முந்தல் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று திங்கட்கிழமை இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த போது சிறுமிகள் ஐவர் தனியாக நடந்து செல்வதைக் கண்டுள்ளனர். அதனையடுத்து சிறுமிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. பின்பு முந்தல் பொலிஸ் அதிகாரிகள் சிறுமிகளை ஆனைமடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமிகள் சிறுவர் இல்லத்தில் இருந்த போது முகங்கொடுத்த பல துன்பங்கள் காரணமாகவே தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக குறித்த சிறுமிகள் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தப்பிச் சென்ற ஐந்து சிறுமிகளிடம் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை ஆனைமடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.