இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் வரதட்சணை தொடர்பில் இளைஞர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
கேரளாவின் காயங்குளம் பகுதியில் செவிலியர் மாணவி 21 வயதான அர்ச்சனா என்பவரே காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்துகொண்டவர்.
இளைஞரின் குடியிருப்பில் இன்னொரு யுவதியுடன் அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,
இளைஞருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில், தற்போது அதன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ச்சனா பாடசாலை மாணவியாக இருந்தபோதே, பாடசாலை அருகே குடியிருந்து வந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திருமணம் செய்து வைக்க கோரி அந்த இளைஞர் அர்ச்சனாவின் பெற்றோரை நாடியுள்ளார்.
ஆனால் தற்போது முடியாது எனவும், அவர் கல்லூரி படிப்பை முடித்த பின்னரே அது குறித்து ஆலோசிப்பதாகவும் அர்ச்சனாவின் தந்தை கூறியுள்ளார்.
இதனிடையே வெளிநாடு சென்று வேலை பார்த்த இளைஞர், பொருளாதார ரீதியாக தேறியதும், அர்ச்சனாவை கைவிடும் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, திருமணம் தொடர்பில் அர்ச்சனா இளைஞருடன் பேசியபோது, வரதட்சணை எவ்வளவு தருவீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
தங்களால் 30 பவுன் தங்கம் மட்டுமே தர முடியும் என அர்ச்சனாவின் குடும்பம் தெரிவித்ததை அடுத்து, இளைஞர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமது சகோதரிக்கு 101 பவுன் தங்கமும் கார் ஒன்றும் அளித்தே திருமணம் செய்துள்ளதாகவும் அதே அளவு தமக்கும் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் தினக்கூலியான தமது தந்தையால் அந்த அளவுக்கு வரதட்சணை தர முடியாது எனவும் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
இளைஞரின் பெற்றோர் அதிக வரதட்சணை வேண்டும் என கட்டாயப்படுத்தியதை அடுத்தே, இளைஞரும் அர்ச்சனா உடனான திருமணத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.