இறந்தவர்களுக்காக பேசுவதுதான் பில் எட்கரின் வேலை. இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு சென்று அவர்கள் சொல்ல நினைத்த விஷயங்களை எல்லாம், அவர்கள் சார்பாக இவர் சொல்வார்.

அதில் நல்ல வருமானமும் பில் எட்கருக்கு கிடைக்கிறது.

இது எவ்வாறு தொடங்கியது?

ஆஸ்திரேலியாவில் உடல்நலம் மோசமாக குன்றிய ஒருவருக்கு, பில் தனிப்பட்ட துப்பறிவாளராக பணியாற்றி வந்தபோதுதான் அவருக்கு இந்த யோசனை தோன்றியது.

“நாங்கள் சாவை குறித்தும், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்தும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது அவர், தன் இறுதிசடங்கின்போது தான் என்னவெல்லாம் செய்ய ஆசை என்பது குறித்து கூறினார். அவரைப்பற்றி அவரே புகழ்ந்து கடைசி வார்த்தைகளில் எழுதிக் கொள்ளுமாறு நான் பரிந்துரைத்தேன்.”

ஆனால், தான் சொல்ல விரும்புவது தன் குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ பிடிக்காது என்று கூறிய அவர், ஒன்று அவர்கள் அதனை படிக்கமாட்டார்கள், இல்லை அதை அனைவரிடம் இருந்தும் மறைத்து விடுவார்கள் என்றார்.

“சரி. நான் உங்கள் இறுதி சடங்கிற்கு வந்து நீங்கள் சொல்ல விரும்புவதை சொல்கிறேன் என்றேன். அப்போதுதான் இது தொடங்கியது” என்கிறார் பில் எட்கர்.

எவ்வளவு வருமானம்?

இறுதி சடங்கிற்கு சென்று இறந்தவர்கள் சார்பாக பேசுவதே பில் எட்கரின் வேலை. இதில் வரும் வருமானத்தை வைத்துதான் அவர் வாழ்கிறார்.

“இறுதி சடங்கிற்கு சென்று, இறந்தவர் தன் வாழ்வில் தன்னால் சொல்ல முடிந்திராத ஒன்றை, நான் எழுந்து அவரது சடலத்திற்கு முன் நின்று அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வேன்” என்று பில் தனது பணியை விவரிக்கிறார்.

இதற்கு அவர் வாங்கும் தொகை சுமார் 10,000 ஆஸ்திரேலிய டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில், சுமார் 5 லட்சம் ரூபாய்.

உங்களின் இறுதி சடங்கிற்கு வந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெளியே சொல்ல முடிந்திராத விஷயத்தை பில், உங்களுக்காக சொல்லுவார்.

அது எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம் – ஆபாசப்படம், செக்ஸ் டாய்ஸ், போதைப் பொருள், துப்பாக்கிகள், பணம் – எதைப்பற்றி இருந்தாலும் சரி.

சொல்ல முடியாத கதைகள்

தனது வேலை அனுபவத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பில் எட்கர் பகிர்ந்து கொண்டார்.

ஒருவர் தான் இறப்பதற்கு முன்பு, தனது இறுதி சடங்கில் நெருங்கிய நண்பர் ஒருவர் பேசுவார் என்றும், அதை குறுக்கிட வேண்டும் என்றும் பில் எட்கரிடம் கூறியுள்ளார்.

“நெருங்கிய நண்பர் பேசும்போது, நான் எழுந்து நின்று அவரை அமர சொல்லி, நான் (இறந்தவர்) என்ன சொல்லப் போகிறேன் என்பதை கேட்க வேண்டும்.

இறக்கும் முன் படுத்த படுக்கையில் இருக்கும்போது, அந்த நெருங்கிய நண்பர் இவர் மனைவியை கவரப் பார்த்திருக்கிறார் என்பதே அந்த செய்தி.”

பில் எட்கர் இதனை கூறும்போது, அந்த நெருங்கிய நண்பர் அங்கிருந்து பின்வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டார்.

பில் எட்கருக்கு வேலை தந்தவர்களிடம் இருந்து, அவருக்கு எந்த புகாரோ, அல்லது எந்த பின்னூட்டமோ இதுவரை வந்ததில்லை. அது ஏன் என்று உங்களுக்கே தெரியும்!!

Share.
Leave A Reply